மும்பை, : மும்பையில் உள்ள, ஹாஜி அலி தர்காவில், பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மும்பை ஐகோர்ட், சபரிமலை வழக்கில், சுப்ரீம் கோர்ட் வழங்கும் தீர்ப்பை பொறுத்து செயல்பட முடிவு செய்து
உள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநில தலைநகர் மும்பையில், புகழ் பெற்ற, ஹாஜி அலி தர்கா உள்ளது; இங்கு, 'பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அவர்களும் தர்காவைக் காண அனுமதிக்க வேண்டும்' என, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, மும்பை ஐகோர்ட், இதேபோல, சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கோரிய வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு உள்ளதால், அதன் தீர்ப்பை பொறுத்து, தர்கா வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்து,
விசாரணையை, பிப்., 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அன்று, மாநில அரசின் பதிலை தாக்கல் செய்யும்படி, அட்டர்னி ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சபரி மலையில், பெண்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், பிப்., 8ல், தீர்ப்பு வழங்க உள்ளது.