நலம் நல்கும் நாட்டியம்!: என்பார்வை

Added : ஜன 18, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 நலம் நல்கும் நாட்டியம்!:  என்பார்வை

பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் தான் பரதநாட்டியம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இந்த நிமிஷத்திலிருந்து அந்த நினைப்பை ஓரங்கட்டி விடுங்கள். 'பரதநாட்டியம் உடல் ஆரோக்கியத்துக்கும், மன அமைதிக்கும்
வழி அமைக்கிறது' என்கிறார் கனகா சுதாகர். இவர் டில்லியில் வசிக்கும் பிரபல நடனக் கலைஞர். மருந்தியல் துறையில் பட்டம் பெற்றவர். அரசாங்க மருத்துவனையில் மருந்தாளுநராக பணி செய்கிறார்.
'நாட்டியம் மனித நலன் காக்கும் நல்லதொரு மருந்து. இதுஇதயத்தை வலுப்படுத்தி, இதய நோய்வராமல் பாதுகாக்கிறது; ரத்தக்குழாய்களைத் திடப்படுத்தி, உயர் ரத்த அழுத்தம் வராமல் பார்த்துக்கொள்கிறது. உடல் பருமனைக் குறைத்து, உடல் ஆரோக்கியத்துக்கு வழி அமைக்கிறது மனத் தளர்ச்சியை அகற்றி, மனமகிழ்ச்சிக்குப் பாதை அமைக்கிறது' என்று பெரியபட்டியலே போடுகிறார் கனகா சுதாகர்.
இவர் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியை மேற்கொண்டார். ஒரு மருத்துவரின் உதவியுடன், 20 வயதிலிருந்து 50 வயதுக்கு உட்பட்ட நடனக் கலைஞர்களைப் பரிசோதித்தார். அவர்களின் பொது உடல் நலன், மனநலன், உடல்
வலிமை போன்ற பல விஷயங்களை ஆராய்ந்தார். அந்த ஆராய்ச்சியின் முடிவு பலநல்ல தகவல்களைத் தந்துள்ளது.உற்சாகம் ஊற்றெடுக்கும்
'நடனக் கலைஞர்கள் தினமும் நடனப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதால், அவர்களின் உடலில் ஒவ்வொரு தசைக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது. அந்தத்தசைக்குள்ளே இருக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன. ரத்தக் குழாய்களும் திடப்படுகின்றன. இதன் ஒட்டு மொத்தப் பலனால் இதயம், மூளை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உயிர் காக்கும் உறுப்பு
களுக்கு ரத்தம் செல்வது அதிகரிக்கிறது. உடல்கழிவுகள் சீக்கிரத்தில் வெளியேறுகின்றன. ரத்தம் உடனுக்குடன் சுத்தமாகிறது. இதனால் நடனக் கலைஞர்கள் நாள் முழுவதும் உற்சாகமாக உழைக்க முடிகிறது. புத்துணர்ச்சியுடன் செயல்பட முடிகிறது'
என்கிறார் இந்த ஆராய்ச்சியாளர்.
உடல்பருமன் குறையும்
'முறைப்படி நடனம் பயில்கிறவர்களுக்கு உடல் பருக்க வாய்ப்பில்லை. ரத்தத்தில் கொழுப்பு கூட வழியில்லை. அப்படியே ஒரு சிலருக்கு ரத்தத்தில் கொழுப்பு மிகுதியாக இருந்தாலும் தினமும் செய்யும் நடனப் பயிற்சியால் ரத்தக் கொழுப்பும் உடல் கொழுப்பும் கரைந்து விடுகின்றன. உதாரணத்துக்கு ஒருவர் 30 நிமிடங்கள் நடனம் பயின்றால், அவரது உடலில் 350 கலோரி செலவழிக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே உள்ள அதீத உடல் எடை குறைகிறது. உடலில் இளமை நிலைக்கிறது. முகத்தில் புதுப்பொலிவு நீடிக்கிறது' என்கிறார் இவர் உறுதியாக.
பார்வையைப் பாதுகாக்கும் 'நடனம் கண்களுக்கு நல்ல பயிற்சியைத் தருகிறது. விழிகள்இரண்டும் அபிநயம் பிடிப்பதால் பார்வை கூர்மையாகிறது. கிட்டப் பார்வை, துாரப்பார்வை போன்ற பார்வைக் கோளாறுகள் வருவது தடுக்கப்பட்டுகிறது.
நடனத்தின் போது விரல்களில் இருக்கும் மிகச்சிறிய எலும்புகளுக்கும் தொடை, இடுப்பு மற்றும் முதுகு எலும்புகளுக்கும் பயிற்சி கிடைப்பதால், மூட்டழற்சி நோய்கள் ஏற்படுவதற்குத் தயங்கும். இதனால்
மூட்டுவலி, முழங்கால் வலி, முதுகுவலி போன்றவை இவர்களை நெருங்கவே நெருங்காது. அடிக்கடி நடனம் ஆடுபவர்களுக்கு ரத்தக் குழாய்களின் மீள் திறன் நிலை நிறுத்தப்படுவதால், முதுமையிலும் இவர்களுக்கு
ரத்த அழுத்தம் இயல்பாகவே இருக்கிறது. தலைசுற்றல், நடை தள்ளாட்டம், மயக்கம் போன்ற முதுமையில் ஏற்படுகிற தொல்லைகள் குறைகின்றன. இதயத் தசைகளும் ரத்தக் குழாய்களும் வலுப்பெறுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பும் குறை
கிறது' என்கிறார் கனகாசுதாகர்.
ஆற்றல் பெருகும்
நடனப் பயிற்சிகள் உடலின் தற்காப்பு மண்டலத்தை முறைப்படுத்த உதவுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இவர்களுக்கு அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலைமை ஏற்படுவதில்லை என்பதால், உடலுக்குள் ஆற்றல் அதிகரிக்கிறது. மற்றவர்களை விட எல்லா வேலைகளையும் நன்றாக யோசித்து விரைவாகவும், திறன்படவும் செய்து முடிக்க முடிகிறது.
இவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் இப்படிப் பதிவு செய்கிறார்: 'நடனத்தில் ஈடுபடுபவர்களுக்கு முதுமை என்பது மற்றவர்களைவிட மிகவும் மெதுவாகவே வருகிறது. வயது கூடினாலும் அந்த வயதுக்கு ஏற்ப உடலில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை.
காரணம், வழக்கமாக மூப்படையும் திசுக்கள் நாட்டியப் பயிற்சிகளால் வலுப் பெற்றிருப்பதால், அவை சிதைவதில்லை. தளர்வடைவதில்லை. இதனால் முதுமை இவர்களுக்குத் தள்ளிப் போகிறது. இவர்களின் எலும்புகளும் தசைகளும் இளக்கமாக இருப்பதால் முதுமையில் எலும்புகள் விறைத்துக் கொள்வதில்லை. இதன் பலனால் வயதான காலத்திலும் உடலியக்கங்கள் என்றும் போல் இயல்பாக இருக்கின்றன. வழக்கமாக முதுமையில் ஏற்படுகிற எலும்புப் பிரச்னைகள் குறைகின்றன.
மன அமைதி உறுதி
எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களுக்கு மனத்தளர்ச்சி அகன்று மன மகிழ்ச்சி அடையவும் மன அமைதி கிட்டவும் நாட்டியம் உதவுகிறது. மூளையில் ஹிப்போகாம்பஸ் பகுதிக்கு, ரத்த ஓட்டத்தை நடனப் பயிற்சிகள் அதிகரிப்பதால், இவர்களுக்கு நினைவாற்றல் வளர்கிறது. முதுமையில், மறதி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. முக்கியமாக' அல்சிமர் நோய்' ஏற்படுவதில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு தன்னம்பிக்கை வளரவும் தன்னார்வம் பெருகவும் நடனப் பயிற்சிகள் உதவுகின்றன. நாட்டியத்தில் பல சிறப்புகளைப் பெறும் போது சமூகத்தில் ஒரு நல்ல பெயரும் புகழும் கிடைப்பதால் இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைகிறது.
'சுருக்கமாகச் சொன்னால், கண்களைக் கவரும் மெலிந்த உடல், மலர்ந்த முகம், மகிழ்ச்சி பொங்கும் மனம், ஆரோக்கியம் நிறைந்த ஆன்ம பலம் ஆகிய அத்தனையும் ஒரே நேரத்தில் பெறுவதற்கு நாட்டியம் நிச்சயம் உதவுகிறது' என்கிறார் கனகாசுதாகர்.
இனி என்ன யோசனை? உங்கள் வீட்டில் குழந்தைகளை நாளையிலிருந்து நடனம் பயில அனுப்பி வையுங்கள். மைதான விளையாட்டுகளின் பலன்களைத் தொலைத்து நிற்கும் இந்த இளைய தலைமுறை, நாட்டியத்தால் கிடைக்கிற அத்தனை நன்மைகளையும் பெற்று ஆரோக்கியத்துடன் வளரட்டும்... வாழட்டும்!
- டாக்டர் கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்gganesan95@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthulakshmi - Bangalore,இந்தியா
19-ஜன-201609:01:27 IST Report Abuse
Muthulakshmi எல்லாம் சரி. "இதனால் மூட்டுவலி, முழங்கால் வலி, முதுகுவலி போன்றவை இவர்களை நெருங்கவே நெருங்காது" - இது மட்டும் கொஞ்சம் பிரச்சனை. மூட்டு, முதுகு எலும்பு பலவீனமா இருக்கிறவர்கள், கொஞ்சம் கவனத்துடன் பரதநாட்டியம் ஆடலாம். அரைமண்டி சரியாக உட்காரவில்லை என்றால் முதுகு எலும்பு வலிக்கும், பலவீனமடையும். சரியான நிலையில் உட்கார்ந்தால் எலும்பு வலுவடையும். எலும்பு வலி இருக்கிறவர்கள் அரைமண்டி நன்கு பயிற்சி எடுக்க வேண்டும். யோகாவும் சேர்ந்தால் எல்லாம் நலமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X