புதுசு புதுசா முளைக்குது கடை... போதைக்கு இல்லை தடை!| Dinamalar

புதுசு புதுசா முளைக்குது கடை... போதைக்கு இல்லை தடை!

Added : ஜன 19, 2016
Share
கரும்பைக் கடித்துக்கொண்டே, 'டிவி' பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா. வேகமாக உள்ளே வந்த சித்ரா, 'என்னடி, இன்னமும் நீ வாங்குன கரும்பைக் காலி பண்ணவேயில்லையா?' என்று தலையில் செல்லமாய்க் குட்டினாள்.''அக்கா! நானும் ஒரு கரும்பாவது இனிக்குதான்னு, ஒவ்வொரு கரும்பா முழுசா சாப்பிட்டுப் பாக்குறேன். கடைசி வரைக்கும் இந்த கவர்மென்ட், நம்ம ஊரை ஏமாத்துனது மாதிரியே எல்லாக்
புதுசு புதுசா முளைக்குது கடை... போதைக்கு இல்லை தடை!

கரும்பைக் கடித்துக்கொண்டே, 'டிவி' பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா. வேகமாக உள்ளே வந்த சித்ரா, 'என்னடி, இன்னமும் நீ வாங்குன கரும்பைக் காலி பண்ணவேயில்லையா?' என்று தலையில் செல்லமாய்க் குட்டினாள்.
''அக்கா! நானும் ஒரு கரும்பாவது இனிக்குதான்னு, ஒவ்வொரு கரும்பா முழுசா சாப்பிட்டுப் பாக்குறேன். கடைசி வரைக்கும் இந்த கவர்மென்ட், நம்ம ஊரை ஏமாத்துனது மாதிரியே எல்லாக் கரும்பும் ஏமாத்திருச்சுக்கா'' என்றாள் மித்ரா.
''ஒனக்கு இந்த கவர்மென்ட்டை குறை சொல்லலைன்னா தூக்கமே வராதே. அதான், இந்த வருஷம் ரேஷன் கடையிலயே 'அம்மா' கரும்பு கொடுத்தாங்களே'' என்றாள் சித்ரா.
''சொன்னது ரெண்டடி. கொடுத்தது ஒரு அடி. அதுவும் பல பேருக்குக் கெடைக்கவேயில்லை. பொங்கலுக்கு முத நாளு, சிட்டிக்குள்ள பல ரேஷன் கடைகளை சீக்கிரமே மூடிட்டுப் போயிட்டாங்க'' என்றாள் மித்ரா.
''பொங்கலுக்கு அல்வா கொடுத்துட்டாங்களா?''
''அதைத்தான் போன வாரமே, ஜாப் மேளாவுல பல ஆயிரம் பேருக்குக் கொடுத்துட்டாங்களே. அன்னிக்கு இன்டர்வியூ போன பசங்க பல பேரு, குமுறுறாங்க. ஈரோட்டுல வேலைன்னு போனா, அஞ்சாயிரம் ரூபா சம்பளம், நீங்கதான் ரூம் பாத்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம்''
''பசங்க என்ன போலீஸ் ஆபீசரா...எங்க போனாலும், சம்பளத்தை விட பல மடங்கு சம்பாதிக்க?'' என்றாள் சித்ரா.
''இப்போ நீ எதுக்குக்கா, சம்மந்தமேயில்லாம போலீஸ் ஆபீசர்களை இழுக்குற?'' என்றாள் மித்ரா.
''சிட்டிக்குள்ள இருந்த 21 இன்ஸ்பெக்டர்களை, மாவட்டத்தை விட்டே மாத்திட்டாங்க. நம்மூர்லயே ரொம்ப வருஷமா இருந்த ரெண்டு இன்ஸ்பெக்டர்க, இப்போ டிஎஸ்பியாகிட்டாங்க. அதுல ஒருத்தரு, சிவகங்கை போயிட்டாரு. இன்னொருத்தரு, விபரமா, திருப்பூர் வாங்கிட்டாரு. சீக்கிரமே திரும்ப வந்துருவாராம்'' என்றாள் சித்ரா.
''அவரு எப்ப வேணும்னாலும் வரட்டும். இப்போதைக்கு காந்திபுரம் ஏரியாக்காரங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க. அது சரிக்கா...இந்த வுமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருத்தவுங்க, ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்து பண்றாங்கன்னு 'கம்ப்ளைன்ட்' இருந்துச்சு. அவுங்களை மாத்தலையா?'' என்றாள் மித்ரா.
''அது தான் தெரியலை மித்து...ஸ்டாலினை வேவு பார்த்து, தகராறு பண்ணுனவரும் தப்பிச்சிட்டாரு''
''இடையில அவரு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஸ்டேஷன் போய், மடப்புரத்து காளி கோவிலுக்கு கெடா வெட்டி, எல்லாருக்கும் விருந்து வச்சுதான திரும்ப வந்தாரு. சிட்டியை விடுக்கா... ரூரல்ல பல இன்ஸ்பெக்டர்க, பல வருஷமா தப்பிச்சிட்டே இருக்காங்க. கார்ப்பரேஷன்ல இருக்குற துடியலுார், ரூரல்ல வர்றதால அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் 'எஸ்கேப்' ஆயிட்டாரு''
''நல்லவேளை ஞாபகப்படுத்துன மித்து... துடியலுார் சிவாஜி நகர்ல, இன்ஸ்பெக்டர் ஒருத்தரு, 85 லட்ச ரூபாய்க்கு பினாமி பேருல வீடு வாங்கிருக்காரு. வாங்குனது, கஞ்சா காசுலயா, லாட்டரிக் காசுலயான்னு அவரு தான் சொல்லணும்''
''அக்கா...சில இன்ஸ்பெக்டர்க விவரமில்லாதவுங்களா இருந்தா, ஸ்டேஷன்ல இருக்குற ஐ.எஸ்.,ஆளுங்க நல்லா ஏமாத்திர்றாங்க. ஆர்.எஸ்.புரத்துல இப்போ அதான் நடக்குது''
''அந்த இன்ஸ்பெக்டரா... அவரு, ஊருக்குப் புதுசா வந்தவராச்சே'' என்றாள் சித்ரா.
''அவருக்கு இன்னமும் அவ்ளோ விவரம் தெரிஞ்ச மாதிரி, தெரியலை. ஆனா, அந்த ஸ்டேஷன்ல உளவு பாக்குற ஒருத்தரு, டி.பி., ரோட்டுல துவங்கி, ரோடெல்லாம் கடையாப் போட விட்டு, கடைக்கு மாசம் ஆயிரம் ரூபா வாங்குறாராம். அந்த ஏரியாவுல, இட்லிக்கடை, பணியாரக் கடை, இளநிக்கடைன்னு புதுசு புதுசா முளைச்சிட்டே இருக்கு'' என்றாள் மித்ரா.
''அந்த ஏரியா 'பார்'கள்லயும், ராவெல்லாம் சரக்கு விக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன். நிஜமாவா?''
''ராத்திரியில விக்கிறதை பெருசாச் சொல்ற...மிலாடிநபி, திருவள்ளுவர் தினத்துக்கு, டாஸ்மாக் கடைகளுக்கு லீவு விட்டாங்களே. அன்னிக்கு, ஒவ்வொரு 'பார்'க்கும் விஜயம் பண்ணி, 'ஒங்களை இன்ஸ்பெக்டர் சரக்கு விக்கச் சொல்லிட்டாரு. கடைக்கு பத்தாயிரம் கொடுத்துருங்க'ன்னு 'கலெக்ஷன்' பண்ணிட்டாராம். ரெண்டு நாளும் செம்ம வியாபாரம் நடந்திருக்கு''
''இன்ஸ்பெக்டர்களை மாத்துறது மாதிரி, இந்த உளவுப்புலிங்களையும் அப்பப்போ ஸ்டேஷன் மாத்தி விட்டாத்தான் ஊரு உருப்படும்''
''போலீஸ் மட்டும் என்ன பாவம் பண்ணுனாங்க...கார்ப்பரேஷன் இன்ஜினியர்க, ஏ.சி.,க்களை விடவா இவுங்க சம்பாதிச்சிருக்கப் போறாங்க. அவுங்களை ஏன் ஊரை விட்டு மாத்த மாட்டேங்கிறாங்க?''
''கரெக்டா சொன்ன மித்து...சென்ட்ரல்ல இப்போ இருக்குற லேடி மேடத்துக்கு, தேர்தல் வேலையே தெரியாதாம். இதுல, அவுங்கதான், தெற்குத் தொகுதிக்கு ஏ.ஆர்.ஓ.,வா இருந்து தேர்தலை நடத்தணும். எப்பிடிருக்கும்?'' என்றாள் சித்ரா.
''அக்கா...நீ ஏ.ஆர்.ஓ.,ன்னு சொன்னதும், எனக்கு ஹவுசிங் போர்டு ஞாபகம் வந்துச்சு. அங்க இதே மாதிரி ஒரு போஸ்ட்டிங் இருக்கு. போர்டுக்கு வருமானத்தைக் கூட்றதுக்கு, வெளியில போய், கலெக்ஷன் பண்றதுதா, இவுங்க வேலை. ஆனா, செய்யுற வேலையெல்லாம், அவுங்க வருமானத்தைக் கூட்றதுக்கு மட்டும் தான்'' என்றாள் மித்ரா.
''ஆமாடி...நானும் கேள்விப்பட்டேன். பத்திரம் கொடுக்குறதுல ஏகப்பட்ட 'ஃப்ராடு' பண்றாங்களாமே''
''பரவாயில்லையே...நீயும் அப்டேஷனாத்தான் இருக்க...அம்சவள்ளின்னு ஒரு டீச்சர். கார்ப்பரேஷன் ஸ்கூல்ல வேலை பாத்தவுங்க. அவுங்களுக்கு கணபதியில ஒரு இடம் 'அலாட்' ஆயிருந்துச்சு. பணமும் கட்டிட்டாங்க. பத்திரம் கேட்டு, 2011ல விண்ணப்பம் கொடுக்குறாங்க. என்ன சொல்றது...அடுத்த வாரமே திடீர்னு இறந்துர்றாங்க''
''அச்சச்சோ...அப்புறம் என்ன ஆச்சு?''
''அடுத்த சில நாள்லயே அவுங்க ஹஸ்பெண்ட்டும் இறந்துட்டாரு. ஒரே ஒரு குழந்தை...அதுவும் 'டெஸ்ட் டியூப் பேபி'. அதுக்கு, அப்போ ஒண்ணு ரெண்டு வயசு தான். சட்டப்படி, அந்த குழந்தைக்கு தான் இந்த சொத்து போய்ச் சேரணும். ஆனா, நீலகிரி கூடலூர்ல ஒரு அம்சவள்ளியைப் பிடிச்சிட்டு வந்து, போலியா ஆவணம் தயாரிச்சு, அந்த 'சைட்'டை லவட்டப் பாத்திருக்காங்க. அதுக்கு இந்த ஏ.ஆர்.ஓ., தான் எல்லாம் பண்ணிருக்காரு''
''பண்ணிட்டாங்களா... பண்ணலையா?''
''ஏதோ 'டவுட்' வந்து, நிறுத்தி வச்சிருக்காங்க. அதே ஆபீசர் மேல, வேற ஒரு புகாரும் சொல்றாங்க. பத்திரம் வாங்க, கட்ட வேண்டிய பணத்தை மொத்தமாக் கணக்குப் பண்றதுல, இவரு நினைச்சா, நாலு லட்சம்பாராம். அவருக்கு ஒரு லட்சம் கொடுத்தா, ஒன்றரை லட்சம் கட்டுனாப் போதும்பாராம்''
''அப்புறம் ஏன் இன்னும் அவரு மேல நடவடிக்கை எடுக்காம இருக்காங்க?'' என்று கோபமாய்க் கேட்டாள் சித்ரா.
''அவருக்கும் ஆளும்கட்சி வி.ஐ.பி., யாராவது பின்னால இருப்பாங்க. இதே மாதிரி, ஆள் மாறாட்டம் பண்ணி, 'சஸ்பெண்ட்' ஆன ஆளும்கட்சி கவுன்சிலர் ஹஸ்பென்ட் மேல, எப்.ஐ.ஆர்., போட்ட பிறகு, இ.இ.,க்கு ஆளும்கட்சில இருந்து ஏகப்பட்ட பிரஷராம்'' என்றாள் மித்ரா.
''ஆபீசரோட ரூமுக்குள்ள புகுந்து, தாறுமாறா திட்டுனவரை மன்னிக்கச் சொல்றாங்களா...யாரந்த பெரிய மனுஷங்க?''
''ஜமாப் அடிக்கிற எம்.எல்.ஏ., ஒருத்தரும், ராஜ்யசபா எம்.பி., ஒருத்தரும் கம்ப்ளைன்டை வாபஸ் வாங்கச் சொல்லிருக்காங்க''
''அதுக்கு அவரு என்ன சொன்னாராம்?''
''இல்லை. இனிமே எம்.டி., சொன்னாத்தான் வாபஸ் வாங்க முடியும்னு சொல்லிட்டாராம்''
''சபாஷ். ஆளும்கட்சி கவுன்சிலர் ஹஸ்பெண்டுக பண்ற அலும்பு, ஓவராப் போயிட்ருக்கு. செல்வபுரத்துல, பணம் கொடுத்து முறைப்படி, வாட்டர் கனெக்ஷன் வாங்குன ஒருத்தரோட வீட்டுக்கு, கனெக்ஷன் கொடுக்க விடாம, காட்டுத்தனமா பிரச்னை பண்ணிருக்காரு, அந்த ஏரியா கவுன்சிலரோட ஹஸ்பெண்ட்''
''அது தான், போலீஸ்ல கம்ப்ளைன்ட் ஆச்சே...அப்புறம் என்ன ஆச்சு?''
''என்ன ஆகும்...புகார் கொடுத்த பிளம்பர், வீட்டுக்காரரையே போலீஸ் மெரட்டி அனுப்பிருக்காங்க'' என்றாள் சித்ரா.
''அக்கா...கோனியம்மன் கோவில்ல, காசுக்காக நடுராத்திரி 12 மணிக்கு, பூஜை பண்ணுன பூசாரியை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க... தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''இதென்னடி புதுக்கதையா இருக்கு?'' என்றாள் சித்ரா.
''அங்க வேலை பார்த்த பூசாரி ஒருத்தரு இறந்துட்டாரு. அவருக்கு ரெண்டு மனைவிங்க. ஆளுக்கு ஒரு பசங்க. இதுல யாருக்கு கருணை அடிப்படையில வேலை கொடுக்கணும்னு தெரியாம, ஆளுக்கு ஆறு மாசம்னு கொடுத்திருக்காங்க. இதுல, மூத்த மனைவியோட மகன்தா, இந்த வேலையப் பண்ணிருக்காரு. இப்போ, துணைவியோட மகனுக்கு வேலை கிடைச்சிருச்சு'' என்றாள் மித்ரா.
''சரி சரி சீக்கிரமா கிளம்பு. ஒரு ரவுண்ட்ஸ் போலாம்'' என்று மித்ராவைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X