காற்றில் பறந்த விதிமுறைகள்; கவலைப்படாத பொதுமக்கள்| Dinamalar

காற்றில் பறந்த விதிமுறைகள்; கவலைப்படாத பொதுமக்கள்

Updated : ஜன 21, 2016 | Added : ஜன 21, 2016 | கருத்துகள் (12)
Advertisement

சென்னையை அலறடித்த வெள்ளத்தின் போது, சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில், பல்வேறு விமர்சனங்கள், கிண்டல்கள் மற்றும் கேலிப் படங்கள் வெளியாகின. அவற்றில், 'வெள்ளம் தன் இடத்தை தேடி, மிகச் சரியாக வந்திருக்கிறது; நாம் தான் அதன் இடத்தில் குடியிருக்கிறோம்' என்ற விமர்சனம், மிக பரவலாக பகிரப்பட்டது. அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கத்தைப் பொறுத்தமட்டில், இந்த விமர்சனம், நூற்றுக்கு நூறு உண்மை.
என்ன நடந்தது?: வில்லிவாக்கம் ஏரி, வில்லிவாக்கம் கிராமத்தின், மேற்கு பகுதியில் உள்ளது. அதன் கிழக்கு பகுதியில், ஏரிக்கு முன்பாக, அம்மன் குட்டை என்ற குட்டையும் இருந்தது. வில்லிவாக்கம் கிராமம், சவுமிய தாமோதர பெருமாள் மற்றும் அகத்தீஸ்வரர் கோவில்களைச் சுற்றி உள்ள இடங்கள் மட்டுமே. மிகச் சில தெருக்களை மட்டுமே கொண்டிருந்த வில்லிவாக்கம் கிராமம், 1960 முதல் விரிவடையத் துவங்கியது.
கடந்த, 1982ல் வீட்டு வசதி வாரியம், உலக வங்கி நிதி உதவியுடன் வில்லிவாக்கம் ஏரியின் ஒருபகுதியை மனைகளாக மாற்றியது. மற்றொரு பகுதி தான் சிட்கோ நகர். மனைகளாக மாற்றப்பட்ட பகுதிதான், சிட்கோ நகர், ஜெகந்நாத நகராக மாறியுள்ளன.
ஏரி சும்மா தானே கிடக்கிறது என கருதிய வீட்டு வசதி வாரியம், ஏரிக்குள் ஒரு பகுதியை தூர்த்து, குடியிருப்புகளை கட்டியது. அதையடுத்து, சிட்கோ தொழிற்பேட்டை கொண்டு வரப்பட்டது. அதன் கழிவுகள், அப்படியே, ஏரிக்குள் விடப்பட்டன. தொழிற்பேட்டையை அடுத்துள்ள பகுதி தான் ஜெகந்நாத நகர்.32 ஆயிரம் பேர் பாதிப்பு:


தற்போதைய நிலையில், சிட்கோ நகரில், 4 ஆயிரத்து 700 வீடுகளும், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், 300 வீடுகளும், ஜெகந்நாத நகரில், 3 ஆயிரத்து 200 வீடுகளும் உள்ளன. இவை தவிர, ஏரியின் மேற்கு கரைப் பகுதியில், சுற்றுச்சுவரை ஒட்டி, 200 ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன.
சமீபத்திய மழையில், இந்த பகுதிகள் அனைத்திலும், முழங்கால் உயரத்தில் இருந்து, ஒரு ஆளை மூழ்கடிக்கும் உயரம் வரை, வெள்ளம் தேங்கி நின்றது.

இந்த பகுதிகள் பெரும் பள்ளம்; இங்குள்ள மழைநீர் வடிகால்கள், அவ்வளவு வெள்ளத்தை கடத்த திறனற்றவை என்பதால், மேட்டு நிலத்தில், அதாவது எம்.டி.எச்., சாலையில் உள்ள மழைநீர் வடிகாலுக்கு, மோட்டார்கள் மூலம், வெள்ளம் வெளியேற்றப்பட்டது.

நவ., டிச., மாதங்களில் பெய்த மூன்று கட்ட மழையிலும் இதுதான் நிலைமை. பாதிக்கப்பட்டோர் அனைவரும், அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். எந்தவித நகர கட்டுமான விதிமுறைகளையும் பின்பற்றாமல், சிட்கோ நகரும், ஜெகந்நாத நகரும் உருவாகி உள்ளன. மொத்தம், இரு நகர்களில் மட்டும், 32 ஆயிரம் பேர் அல்லது 8 ஆயிரத்து 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மண்டல அலுவலகத்தின் அறிக்கை சொல்கிறது.கையில் வெண்ணெய்:


சிட்கோ நகர் உருவானது போக எஞ்சியுள்ள ஏரி, கடந்த பல ஆண்டுகளாக, குடிநீர் வாரியத்தின் நிர்வாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு, சிட்கோ நகர் உள்ளிட்ட பகுதிகளின் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், நகரின் மைய பகுதியில் நடக்கும் மெட்ரோ ரயில் பணியில், அகற்றப்படும் மண், இந்த ஏரியில் கடந்த ஆறு மாதங்களாக கொட்டப்பட்டு வந்தது. மழைக்கு சற்று முன்பு தான் அதை நிறுத்தி உள்ளனர். அந்த மண், ஏரியின் கணிசமான பகுதியை நிரப்பி விட்டது.

ஒருவேளை, மண் கொட்டப்படாமல் இருந்திருந்தால், சிட்கோ நகர் வெள்ளத்தை, ஏரியில் திருப்பி விட்டிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அருகில் ஏரி இருந்தும் அதை பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு, சிட்கோ நகர் தள்ளப்பட்டது.ரூ.300 கோடி இழப்பு:


சிட்கோ தொழிற்பேட்டையில், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, தீயணைப்புப் பாதுகாப்பு கருவி சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை என, மொத்தம் ௧௨௪ தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில், 8 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

இதுகுறித்து சிட்கோ தொழிற்பேட்டை வில்லிவாக்கம் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பட்டேல் கூறியதாவது:

தொழிற்சாலைகளில் உற்பத்திக்கான இயந்திரம், ஜெனரேட்டர், கணினி, உற்பத்தி பொருட்கள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, ஒவ்வொரு தொழிற்சாலையையும் மறு நிர்ணயம் செய்வதற்கு முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே வரியைக் குறைத்து வங்கிகள் மூலம் காப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காக்கப்படுமா?:


இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிட்கோ நகர் அருகே, எம்.டி.எச்., சாலை ஓரம், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில், 324 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடம் தான், ஏரியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் கால்வாய் இருந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில், சிட்கோ நகரில் வெள்ளம் வராமல் காக்க வேண்டும் எனில், அருகே உள்ள ஏரியை ஆழப்படுத்தி, அனைத்து வெள்ளத்தையும் அங்கு திருப்பி விடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். அந்த ஏரி, வெள்ளத்தை தாங்கி கொள்வதோடு, அந்த பகுதிக்கு நீராதாரமாகவும் விளங்கும்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
22-ஜன-201609:51:42 IST Report Abuse
மதுரை விருமாண்டி அஞ்சு ஆட்டம் பாம்.. ஆட்டம் குளோஸ்..
Rate this:
Share this comment
Cancel
Ravichandransankaranarayanan - Kanchipuram,இந்தியா
22-ஜன-201605:41:02 IST Report Abuse
Ravichandransankaranarayanan அரசு பேருந்துகளின் அலட்சியம் , இன்று 08/01/2016 மாலை 4.30 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நான் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு போக்குவரத்து தடம் எண் 157 பதிவு எண் TN 23N 2301 என்ற பேருந்து C V R தெரு வில் சிவாஸ் ஹோட்டல் எதிரில் நட்ட நடு சாலையில் நிறுத்தி பயணியை ஏற்றிக்கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு செய்ததுமின்றி பின்னல் வந்த எனது இருசக்கர வாகனத்தை நிலைகுலைய செய்தது. இதே தவறை இதே நேரத்தில் இதே இடத்தில் T 7 காஞ்சிபுரம் TO நெற்குன்றம் செல்லும் நகர பேருந்தும் செய்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருந்தது ஏராளமான சின்னஞ்சிறு மாணவர்களின் உயிரோடும் அலட்சியமாக வ்ளையாடுகிறது. அரசு பேருந்துகள் என்றால் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம் எப்படி வேண்டு வேண்டுமானாலும் பயணிகளை ஏற்றிகொள்ளலாம் என்று ஏதேனும் சிறப்பு உரிமை வழங்கப்படிருக்கிறதா என தெரிய வில்லை தயவு செய்து தெளிவு படுத்தவும் இது பயணிகள் மற்றும் சாலையில் பயணிப்பவர்கள் உயிரோடு தொடர்புடைய விஷயம் என்பதால் தங்கள் மேலான கவனத்திற்கும் தக்க நடவடிக்கைக்கும் இதனை கொண்டு வருகிறேன் தயவு செய்து நடவடிக்கை எடுத்ததன் விபரம் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்க தாழ்மையுடன் கோருகிறேன் ச ரவிச்சந்திரன்
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
22-ஜன-201602:02:24 IST Report Abuse
Indhiyan 324 வீடுகள், இன்னிக்கி விற்கும் விலையில் - வீட்டு வசதி வாரியத்தில் வேண்டியவர்களுக்கு கொடுப்பார்கள். நிறைய அரசியல் கைகள் இருக்கும். கோடிகள் கைமாறி இருக்கும். ஏரி எக்கேடுகெட்டு போனாலும் பரவாயில்லை என்று வீடுகளை கட்டியே தீர்வார்கள். எதனாலேயும் தடுக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X