உடலும் உள்ளமும் வளம் பெற ஓடி ஆடி விளையாடு! என் பார்வை| Dinamalar

உடலும் உள்ளமும் வளம் பெற ஓடி ஆடி விளையாடு! என் பார்வை

Added : ஜன 21, 2016 | கருத்துகள் (3)
 உடலும் உள்ளமும் வளம் பெற ஓடி ஆடி விளையாடு!  என் பார்வை

“ ஓடி விளையாடு பாப்பா - நீஓய்ந்து இருக்கல் ஆகாது பாப்பா” என்று பாடி குழந்தைகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தினான் பாரதி.சமீபத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். எங்கே குழந்தைகளை காணோம்? என்று கேட்டேன். அவர்கள் விளையாடுகின்றனர் என்றார் நண்பர். அவரின் மனைவி 'இங்க தானே கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்தனர்' என்றார்.
'அருகில் எங்கு மைதானம் உள்ளது?' என்று கேட்ட போது, சிரித்தபடி 'அலைபேசியில் இளைய பையன் கிரிக்கெட் விளையாடினான். அதை தான் சொல்லுறா? நான் 'டிவி' பார்க்க வேண்டும் என்பதற்காக இப்பதான் குழந்தைகளை, மாடிக்கு அனுப்பினேன். மூத்தவள் 'ஐ பேடில் டெம்பிள் ரன் விளையாடுகிறாள். ரொம்ப நல்லா விளையாடுவா தெரியுமா?' என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்!
இதில் என்ன அதிர்ச்சியான தகவல் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது.
சாதாரண குடும்பத்தில் இருந்து பணக்கார குடும்பம் வரை எல்லா வீடுகளிலும் அலைபேசி தான் குழந்தைகளின் விளையாட்டுத் திடலாக உள்ளது. விளையாட்டு என்பது கையடக்கமாய் சுருங்கிப் போய் விட்டது! குழந்தைகளை மயக்கி, அதன் மாய வலையில் சிக்க வைத்து உடல் உழைப்பு என்ற பேச்சுக்கே இடமளிக்காமல், நம் குழந்தைகளை அசைய விடாமல் செய்து விட்டது அலைபேசி!
பள்ளியில் இடமில்லை குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். அங்கேயும் விளையாட நினைத்தாலும் பல பள்ளிகளில் விளையாட்டு திடலே இல்லை. உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் மைதானம் உண்டு. ஆனால் 'சென்டம்' காட்ட வேண்டுமே. “காலை எழுந்தவுடன் படிப்பு- பின்பு படிப்பு படிப்பு ” என எல்லா வேளைகளும், அட... விளையாட்டு பாடவேளை கூட படிப்பு வேளையாக மாறி விட்டது!
குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தால் கார்ட்டூன் சானலில் மூழ்கி விடுகின்றனர். டிவி பார்த்து கொண்டே நொறுக்கு தீனி வேறு. பிறகு ஹோம் ஒர்க். அப்படி இப்படி என்று இரவு ஒன்பது மணி ஆகிவிடுகிறது. அதற்கு பின் உறக்கம்! சில குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து 'டிவி' தொடர் பார்த்து பத்து மணிக்கு மேல் தான் உறங்க செல்கின்றன.
பொதுத்தேர்வு எழுதும் குழந்தைகள் என்றால், 12 மணி வரை இடத்தை விட்டு நகராது கூடுதல் கண்காணிப்பில் படிப்பு! இக்குழந்தைகள் காலையில் எப்படி எழுந்திருப்பார்கள். சூரிய ஒளி உடம்பில் பட்டால் தானே வைட்டமின் சத்து கிடைக்கும்!
சமீபகாலமாக பல குழந்தைகளின் உடலில் வெள்ளை புள்ளி அல்லது வெண்படை இருப்பதை காணலாம். அதற்கு காரணம் மெலனின் என்ற நிறமி குறைவு தான். சூரிய ஒளி இந்த நோயை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது! சும்மா ஒன்றும் வெள்ளைக்காரர்கள் சூரியக்குளியல் போடவில்லை!
இயல்பு இல்லா குழந்தைகள்
விடுமுறை என்றால் கூட குழந்தைகள் 'பிளே ஸ்டேஷனில்' சென்று விளையாட ஆரம்பித்து விடுகின்றன. பெருநகரங்களின் மால்களில் குழந்தைகள் காத்திருந்து விளையாடுகின்றனர். இதனை பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடுகிறோம் என்பதை பெற்றோர் மறந்துவிடுகின்றனர். இன்று வசதிகளும் நவீன கண்டுபிடிப்புகளும் பெருகி குழந்தைகளின் இயல்பை கெடுத்துவிட்டது. குழந்தைகள் குழந்தைகளாக இல்லை.
குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சி என்பது எல்லா வகையான வளர்ச்சிக்கும் முதல் நிலை. இதற்கான அடிப்படைத் தேவைகளான சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் இதர உளவியல்-, சமூகவியல் தேவைகள் மீது கவனம் செலுத்துவது அவசியமானதாகும்,
வகுப்பறையில் விளையாட்டு முறையில் கற்று கொடுக்கிறேன் என்றால் கூட சிரிக்கின்றார்கள்! விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெளிவு படுத்த வேண்டி உள்ளது.
உடல் வளர்ச்சி சார்ந்து எலும்புகள் மற்றும் தசைகளை விளையாட்டு வலுவடைய
செய்கிறது. உடலின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது. விளையாடுவதால் ஐம்புலன்களின் இயக்கம் சிறப்பாக அமைகிறது. உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது. இதயம் மற்றும் நுரையீரல் இயக்கம் உறுதிப்படுகிறது.
விளையாடுவதால் குழந்தைகளின் கற்கும் ஆற்றல் அதிகரிக்கிறது. விளையாட்டு முறையில் பாடம் கற்றுக்கொடுத்த பின்பு குழந்தைகளிடம், விடுப்பு என்பது கூட குறைந்துவிட்டதை காண்கிறேன்.
தன்னம்பிக்கை வளரும் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை விளையாட்டு வளர்க்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு கண்டறிய உதவுகிறது. அனைவரையும் சமமாக பார்க்கும் எண்ணத்தை வளர்க்கிறது. வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கிறது.
குழந்தைகள் குழுவாக பணிகளைச் செய்ய, கற்றுக் கொடுக்கிறது. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கிறது. ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது. காரணங்களை அறியும் திறனை வளர்க்கிறது. தலைமைப்பண்பை வளர்க்கிறது. தெளிவான சிந்தனையை ஏற்படுத்துகிறது. உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றது. விளையாட்டிற்காக ஒரு ரூபாய் செலவு செய்தால், மருத்துவத்திற்காக மூன்று ரூபாய் செலவு செய்வதனை தவிர்க்கலாம் என்கின்றது உலக சுகாதார நிறுவனம். செலவை விட்டு தள்ளுங்கள். விளையாடுவது என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை.
ஆகவே குழந்தைகள் குழந்தை தன்மையுடன் இருக்க, விளையாட அனுமதிப்போம்!தொடக்க கல்வியில் இருந்தே குழந்தைகளுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை செயல்படுத்துவோம். கல்வி என்பது புத்தகங்களுக்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தகவல்களில் மட்டுமே இல்லை என்பதை நினைவில் கொள்வோம்! வானத்துக்கு நிலவழகு. குழந்தைகளுக்கு விளையாட்டே உலகு. அதனை அனுமதிப்பதே நமக்கழகு! சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
சித்திரம் சிறப்பாக வரைய வேண்டும் என்பதற்காக வண்ணங்களையும் விலை உயர்ந்த துாரிகைகளையும் வாங்கி கொண்டு இருந்தால் மட்டும் போதுமா? ஓவியம் தீட்ட வலுவான சுவர் வேண்டாமா! நமது கற்றல் முறையினை விளையாட்டு முறையில் செய்திடுவோம். குழந்தைகளை வகுப்பறையில் ஓடி ஆடி விளையாட செய்திடுவோம். குழந்தைகளின் உடல் மற்றும் உள்ளத்தினை வளம் பெற செய்வோம்.
''சின்னம் சிறுகுருவி போலே- நீ திரிந்து பறந்து வா பாப்பா” என்று பாரதியின் வரிகளை உண்மையாக்கி குழந்தைகளை பறந்து திரிய செய்வோம்.
- க.சரவணன்தலைமை ஆசிரியர், திருஞானம் துவக்கப்பள்ளிமதுரை. 99441 44263

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X