காணாமல் போன கால்வாய்கள், நீர்நிலைகள் | Dinamalar

காணாமல் போன கால்வாய்கள், நீர்நிலைகள்

Added : ஜன 22, 2016 | கருத்துகள் (3)
Advertisement
காணாமல் போன கால்வாய்கள், நீர்நிலைகள்

காமெடி நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில், 'ஐயா என் கிணத்த காணோம்' என, போலீசில் புகார் கொடுக்கும் காட்சி, வளசரவாக்கத்தில் உண்மையாக நடந்துள்ளது.

சமீபத்திய பெருமழை வெள்ளத்தில், வளசரவாக்கம் மண்டலத்தின், 150, 151, 152, 153 ஆகிய நான்கு வார்டுகள், போரூர் ஏரி உபரிநீரால் முழுமையாக வெள்ளத்தில் சிக்கின. சென்னையின் எல்லா பகுதிகளிலும் வெள்ளம் வடிந்த நிலையில், அங்கு மட்டும் வடிய பல நாட்கள் ஆகின.


அத்தனை நாட்கள் போரூர், சின்ன போரூர், வளசரவாக்கத்தில் வெள்ளம் தேங்க என்ன காரணம்?


நமது நிருபர் குழுவின் கள ஆய்வில், பல உண்மைகள் தெரியவந்தன.
காணாமல் போன ஏரிகள்:வளசரவாக்கம் மண்டலம், 143 முதல் 155 வரை, 13 வார்டுகளை கொண்டது. அந்த மண்டலத்தில் போரூர் ஏரி, ஆலப்பாக்கம் ஏரி, ராமாபுரம் ஏரி என, மூன்று ஏரிகளும், 10க்கும் மேற்பட்ட குளங்களும் தற்போது இருக்கின்றன. இன்னும் சில ஏரிகளும், குளங்களும் இந்த மண்டலத்தில் முன்பு இருந்துள்ளன. தற்போது அவை எதுவும் இல்லை.


அவற்றில், பெரிய ஏரியான போரூர் ஏரி நிரம்பி, உபரிநீர் செல்ல வேண்டிய பாதையில் தான் தற்போது வெள்ள பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.


வெள்ளம் வெளியேறும் வழிபோரூர் ஏரி தற்போதைய வருவாய் துறை ஆவணப்படி, 330 ஏக்கரில் இருக்கிறது. போரூர் கிராமத்தில் சர்வே எண், 370, காரம்பாக்கம் கிராமத்தில், சர்வே எண்கள், 151, 152, தெள்ளியர்அகரம் கிராமத்தில், சர்வே எண்கள், 138, 148க்கு உட்பட்ட நிலப்பரப்பு, போரூர் ஏரி என, ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

போரூர் ஏரியின் கலங்கல் தற்போது மதனந்தபுரத்தில் அமைந்துள்ளது. ஆனால் முன்பு மவுன்ட் - பூந்தமல்லி சாலையில், ஏரி துவங்கும் இடத்திலும் ஒரு கலங்கல் இருந்தது. அந்த கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், ஒரு கால்வாய் மூலம் மவுன்ட் - பூந்தமல்லி சாலையைக் கடக்க வேண்டும். அங்கு அது இரு பிரிவாக பிரிய வேண்டும். சாலையின் மறுபக்கத்தில் ஒரு கால்வாய் மவுன்ட் - பூந்தமல்லி சாலை வழியாகவும், மற்றொரு கால்வாய், உட்புற தெருக்கள் வழியாக, ஆற்காடு சாலையைக் கடந்து, வளசரவாக்கத்தை நோக்கியும் செல்லும்.


20 அடி 2 அடி ஆன பரிதாபம்மவுன்ட்- பூந்தமல்லி சாலையில், போரூர் சிக்னலை கடந்து, ராமாபுரம் எம்.ஜி.ஆர்., தோட்டம் வழியாக அடையாறு வரை செல்லும் ஒரு நீண்ட ஓடை இருந்துள்ளது. 20 அடி அகலமும், 20௦ அடி ஆழமும் கொண்டதாக அந்த ஓடை இருந்துள்ளது. மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலை விரிவாக்கத்தால், போரூரில் இருந்து எம்.ஜி.ஆர்., தோட்டத்திற்கு முன்பு வரை, அந்த ஓடையின் அகலம், வெறும் 3 அடியாக சுருங்கி, மழைநீர் வடிகாலாக மாற்றப்பட்டது. தற்போதும் இந்த ஓடை, எம்.ஜி.ஆர்., தோட்டம் அருகே சில மீ., தூரத்திற்கு கொஞ்சம் அகலமாகவும், ஆழமாகவும் இருப்பதைக் காண முடியும்.

போரூர் ஏரி உபரிநீர், மற்றொரு பிரிவு கால்வாய் மூலம், ஆற்காடு சாலை வழியாக, வளசரவாக்கம் பகுதியில் உள்ள பல நீர்நிலைகளை நிரப்பி, பின் அடையாற்றுக்கு செல்லும். இந்த போக்கு கால்வாய், பல இடங்களில் மாயமாகியுள்ளது. இருக்கும் இடங்களில், அதிகபட்சமாக ஒன்றரை அடி அகலம் வரை சுருங்கி, வெறும் சாக்கடையாக மாறிவிட்டது. இந்த போக்கு கால்வாய், ஆற்காடு சாலையைக் கடந்ததும், போரூர், ஆஞ்சநேயர் கோவில் குளத்தில் இணையும்.

ஆஞ்சநேயர் கோவில் குளம் நிரம்பியதும், அங்கிருந்து அண்ணாசாலை வழியாக உள்ள கால்வாய் மூலம், அருகில் உள்ள ஒரு குளத்திற்கு செல்லும். தற்போது அந்த குளம் இல்லை. குளம் இருப்பதாக வருவாய் ஆவணத்தில் காட்டும் இடத்தில், இன்று ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. தனியார் பள்ளி இயங்கி வரும் அந்த குளம் நிரம்பி, சின்ன போரூர் ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக, எஸ்.வி.எஸ்., நகரில் உள்ள வளசரவாக்கம் ஏரிக்கு செல்லும்.

அந்த ஏரியும் தற்போது தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. தண்ணீர் நிற்க இடமில்லை. அந்த ஏரி நிரம்பிய பிறகு, பெத்தானியா நகர் வழியாக உள்ள கால்வாய் மூலம், அதன் உபரிநீர், ராமாபுரம் ஏரிக்கு செல்லும்.


ராமாபுரம் ஏரி எங்கே?ராமாபுரம் ஏரி தற்போது ஆக்கிரமிப்பால், 80 சதவீதம் மாயமாகிவிட்டது. அந்த ஏரி தற்போதைய வருவாய் துறை ஆவணப்படி, 27 ஏக்கர் இருக்க வேண்டும். ஆனால், தற்போது நீர்பிடிப்பு பகுதியாக இருப்பது, ஒரு ஏக்கருக்கும் குறைவே. ராமாபுரம் ஏரி நிரம்பி, திருவள்ளூர் சாலை போக்கு கால்வாய் மூலம், எம்.ஜி.ஆர்., இல்லத்தின் பின்புற வழியாக, மியாட் மருத்துவமனையின் பின்புறம், அடையாற்றில் கலக்கும்.

இப்படி தான் போரூர் ஏரி உபரிநீர் வடிந்து செல்ல, கட்டமைப்புகள் இருந்தன. அவை, முழுமையாக உருக்குலைந்து போயிருப்பதுடன், போக்கு கால்வாய்க்கு குறுக்கே, வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இதனால் தான் உபரிநீர் வெளியேற வழியின்றி, குடியிருப்புகளை சூழ்ந்து வாரக்கணக்கில் நின்றது. வெளியேற வழியில்லாமல், மழைநீர் தேங்கி நின்ற இடங்களில் தான், மாநகராட்சி மோட்டார் மூலம் இறைத்து, அருகில் உள்ள கால்வாய்களில் விட்டு, வெள்ளத்தை வடித்தது.

வளசரவாக்கம் மண்டலத்தின், 155வது வார்டில் உள்ள, அம்மன் நகர், விவேகானந்தன் நகர், ஜெய் பாலாஜி நகர், செல்லம்மாள் நகர், திருப்பதி நகர், மூகாம்பிகை நகர், மைக்கேல் தோட்டம், ராயலா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதிகள் அடையாற்றுக்கு மிக அருகில் உள்ளவை. பழைய வருவாய் துறை ஆவணங்கள் படி, போரூர் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய்களை மீட்டு, அந்த கால்வாய்கள் வழியில் நிரப்பி செல்லும் நீர்நிலைகளையும் முழுமையாக மீட்டால் மட்டுமே, அடுத்தடுத்த பெருமழைக்கு, இந்த நான்கு வார்டுகளும் ஓரளவு தப்பிக்க முடியும்.

-நமது நிருபர் குழு -வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-ஜன-201608:38:48 IST Report Abuse
Srinivasan Kannaiya 50 ஆண்டுகளாக இந்த தமிழகத்தை ஆண்டு வரும் ஒவ்வொரு திராவிடனும் இந்த கபலீகரத்திர்க்கு காரணம்..அவர்களை அரசன் அன்றே கொல்லவில்லை. ஆனால் தெய்வம் நின்று கொல்லும்..
Rate this:
Share this comment
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
22-ஜன-201613:18:07 IST Report Abuse
JeevaKiran ராமாபுரம் ஏரி நிரம்பி, திருவள்ளூர் சாலை போக்கு கால்வாய் மூலம், எம்.ஜி.ஆர். இல்லத்தின் பின்புற வழியாக, மியாட் மருத்துவமனையின் பின்புறம், அடையாற்றில் கலக்கும் - இந்த கால்வாய் மீதுதான் மியாட் மருத்துவமனையின் விரிவாக்கம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அதுவும் கடந்த 2 ஆண்டில் கட்டப்பட்டதாகும். முதலில் இதை இடியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
22-ஜன-201613:18:01 IST Report Abuse
kmish எந்த தாசில்தாரும் உருப்படியா வேலை பார்க்க மட்டேன்குறாங்க, இதுல இருந்து தெரிய வருது, அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு உடந்தைய இருக்குறதும் இல்லாம, லஞ்சம் வாங்கி கொழுத்து போய் இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X