நீ நிறம் மங்கா நினைவாக என்றும் இருப்பாயே...சிக்கனமாக காதல் செய்ய மனம் அறியவில்லையே...' என்ற 'காலர்டியூன்' ஒலிக்க.. வணக்கம் என்று பேசி நம்மை வரவேற்றார், ஹலித்தா ஷமீம். பள்ளி பருவத்தில் ஆல்பம் ஒன்றுக்கு பாடலாசிரியராக...பிளஸ் 2 முடிச்ச கையோடு திரைப்பட இயக்குனர்.பூவரசம் பீப்பி திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட இயக்குனராக அறிமுகமான, இளம் ஹைக்கூ கவிதை தான் ஹலித்தா. இப்போ தமிழில் 'மின்மினி', மலையாளத்தில் 'பயர் பிளே' படங்களை பிசியாக இயக்கிக் கொண்டிருக்கிறார். சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார், ஹலித்தா.''என் எட்டாவது வயதில் பாடல் எழுதணும்னு ஆர்வம் வந்துச்சு. அப்புறமா... சினிமா எடுக்கணும்னு தோணுச்சு. சரி எதுவும் தெரியாமா களமிறங்க கூடாதுன்னு ஓரம் போ, நந்தலாலா படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். என்னை எனக்கு நிரூபிக்கும் திறன் வந்த பின், 'பூவரசம் பீப்பி' இயக்கினேன். இந்த படம் பல விருதுகள் பெற்றது.இப்போ மின்மினி, இரு மொழிகளில் தயாராகிட்டு இருக்கு. பள்ளி பருவத்தையும், சிறுவர்கள் சந்திக்கும் உணர்வுகளையும் உள்ளடக்கிய படமாக, மின்மினி இருக்கும். படம் என்றால், கேளிக்கை மட்டும் அல்ல; அதில் மனிதநேயம் இருக்கணும்.எல்லோருடைய படத்திலும் மனிதம் இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். என் படைப்புகளும் அதை சார்ந்ததாகவே இருக்கும். ஏன்னா.. இப்போ திரைப்படங்கள் பல கருத்துகளை எல்லோரிடமும், குறிப்பாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் மையமாக இருக்கு. நிறைய படங்கள் இயக்கணும், இயக்கிகிட்டே இருக்கணும். இப்போதைக்கு இது மட்டும் தான் என்னோட லட்சியம். திருமணத்தை பத்தியெல்லாம் சிந்திக்கிற எண்ணமே இல்லை.என்னோட படங்களுக்கு நானே எடிட்டர், நானே கலர் கிரேடிங். என் படைப்புகளுக்கு நான் தான் உயிர் தர முடியும் என நம்புகிறேன். அதனால் தான் முழு பணிகளையும் நானே கவனிக்கிறேன். எனக்கென குரு கிடையாது. திரைத்துறையில் யாரையும் பின்பற்றக் கூடாது. நமக்கென ஒரு ஸ்டைல் இருக்கணும்'' என்கிறார் தன்னம்பிக்கை ஹலித்தா. இவருக்கு 'ஹாய்' சொல்ல halithashameem@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE