துணைவேந்தர்கள் எங்கே?| uratha sindhanai | Dinamalar

துணைவேந்தர்கள் எங்கே?

Updated : ஜன 25, 2016 | Added : ஜன 23, 2016 | கருத்துகள் (4)
Share
துணைவேந்தர்கள் எங்கே?

கல்வி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். இதைப் பயன்படுத்தி, உலகையே மாற்றி விடலாம்.
- நெல்சன் மண்டேலா

வலங்கைமான் சங்கர நாராயண சீனிவாச சாஸ்திரி, சென்னையில், இந்து உயர்நிலைப் பள்ளியில், எட்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, கற்பித்தலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இவர்தான், அரசு கூட்டுறவு பண்டகசாலை நிறுவுவதற்கு முன், சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தை நிறுவியவர்.

ஆசிரியத் தொழிலை விட்டு விட்டு, பாலகங்காதர திலகர் ஆரம்பித்த, 'இந்தியாவின் சேவகர்கள்' என்ற சங்கத்தில் சேர்ந்தார். இச்சங்கத்தின் மூலம் இவரும், மகாத்மா காந்தியும், திலகரின் சீடர்களாயினர். ஒருவருக்கொருவர் மிகுந்த நட்பு கொண்டனர். தன்னைவிட (அக்., 2, 1869) 10 நாட்கள் (செப்., 22, 1869) மூத்தவரான சாஸ்திரியை, அண்ணா என்று அழைப்பதில் காந்தி பெருமை கொண்டார். சாஸ்திரி மாணவராக இருந்த காலத்தில், ஆங்கில மொழியில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராகி, அம்மொழியில் தன் புலமையை வளர்த்துக் கொண்டார்.

சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லுாரியின் முதல்வர், ஹால் என்பவர், பாடம் நடத்தும்போது, செய்த தவறான உச்சரிப்பை சாஸ்திரி திருத்தினார். அந்த முதல்வர் பல அகராதிகளைப் புரட்டியபின், சாஸ்திரியின் கூற்றை ஒப்புக் கொண்டார். இவருக்கு, சட்டசபையில் உறுப்பினராக இருந்த அனுபவமும் உண்டு. தென் ஆப்ரிக்காவின் துாதுவராகவும் பதவி வகித்தார். இவற்றிற்கெல்லாம் மேலாக இந்தக் கல்வியாளர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, 1935லிருந்து, 1940 வரை பதவி வகித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகம் இவரால் பெருமை பெற்றது.டாக்டர் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார், சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, 27 ஆண்டுகள் பணியாற்றி பெரும் சாதனை படைத்தவர். இவர், மேலவை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

உலக சுகாதார நிறுவனத்தின் பல குழுக்களில் தலைவராக, உறுப்பினராக இருந்திருக்கிறார். மகப்பேறு மருத்துவம் பற்றிய இவரின் நுால், 1938ல், இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு, அந்நாட்டில் பாடநுாலாக பின்பற்றப்பட்டது. இந்த நுால் தற்போது மெருகூட்டப்பட்டு, 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது. இவருக்கு, ஆக்ஸ்போர்டு முதல், 15 பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளன. இவர் காலத்தில்தான், டாக்டர் மு.வரதராசனார் சென்னை பல்கலைகழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட பின், அப்பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக, 1971 - 74ல் பணியாற்றினார். இவர், மாணவர்களை வழிநடத்தியவர் மட்டுமல்ல, மாணவர்களைத் தேடிச் சென்று உதவுவதில் மகிழ்ச்சி கொள்பவர். இவர் எழுதிய திருக்குறள் உரை பெரிதும் பாராட்டப்பட்டது.

கோவையில், வேளாண்மைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக செயல்பட்டு வந்த அரசு நிறுவனம், 1971ல் பல்கலைக் கழகமாக மாற்றி அமைக்கப்பட்டது. முதல் துணைவேந்தராக டாக்டர்.ஜி.ரங்கசாமியைத் தேர்ந்தெடுத்தனர். இவர், ஸ்ரப்ட்டோமைசின் என்ற ஆண்டிபயாட்டிக்ஸ் மருந்தைக் கண்டுபிடித்து, நோபல் பரிசு பெற்ற வாக்ஸ்மேன் என்ற விஞ்ஞானியிடம் ஆராய்ச்சியில் பயிற்சி பெற்றவர்.புதிய கல்விமுறையை பல்கலைக்கழகத்தில் புகுத்தி, அனைத்துப் பேராசியர்களும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியதைக் கட்டாயமாக்கி, பல்கலைக்கழகத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றவர். இவர் போட்ட பலமான அடித்தளம், இன்றும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் முதல் இடம் வகிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன், சென்னையில் பொறியியல் படித்து, பின்னர் அமெரிக்கா சென்று முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று இந்தியா திரும்பி கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில், 1974 வரை வெவ்வேறு பதவி வகித்தார்.

அதன்பின் அமெரிக்கா சென்று, அங்கு ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி, 1990ல், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி ஏற்றார். இரண்டு முறை துணைவேந்தர் பதவி வகித்த இவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விமுறையில் பல மாற்றங்களை புகுத்தினார். இவரின் பணியைப் பாராட்டி, அன்றைய ஆளுனர், 'பல்கலைக்கழகத்தின் சட்டத்தில், திருத்தம் கொண்டு வருகிறேன். நீங்கள் மூன்றாவது முறையாக பதவியில் நீடிக்கலாம்...' என்று கேட்ட போது, பணிவாக, 'வேண்டாம்' என்று கூறி மறுத்து விட்டார்.நிகழ்காலமும், எதிர்காலமும் திறமையான அறிவார்ந்த துணைவேந்தர்களை அடையாளம் காட்ட வேண்டுமே என்ற கவலை இன்றைக்கு கல்வியாளர்களுக்கு உள்ளது. நம் கல்விமுறை, ஆளுமைப் பண்பு நிறைந்த கல்வியாளர்களை உருவாக்க முடியாது திணறுகிறதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இத்தனை ஆண்டுகளாக உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் நுாறு இடங்களில், இந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில் எந்த பல்கலைக்கழகமும் இல்லை. இங்கு பொறியியல் கல்லுாரிகளை வரிசைப் படுத்துவது போல், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மட்டும் வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சித் திட்டங்கள், அவற்றிற்காக வெளியிலிருந்து பெறப்படும் நிதி உதவியின் அளவு, வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தரமாக உள்ளவற்றின் எண்ணிக்கை, அந்தக் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் பின், மற்றவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை என்று பல்வேறு அளவுருக்களைக் கணக்கில் எடுத்துத்தான், தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

மூத்த கல்வியாளர்கள், கல்வித் தரம் உயரவில்லையே என புலம்பித் திரிகின்றனர். திறமைமிக்க அறிவார்ந்த துணைவேந்தர்களை நம்பித்தான் உயர்கல்வி இருக்கிறது. நல்ல தலைமை தான் தரமான கல்விமுறையையும் ஆராய்ச்சியையும் தர முடியும். ஆராய்ச்சி என்றால் என்னவென்று தெரியாதவர்களால், எப்படி ஆராய்ச்சிக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்க முடியும்?பொறுத்தமான துணைவேந்தர்களை தேடிப்பிடிக்க, மூன்று உறுப்பினர்களை கொண்ட, 'தேடும் குழு' அமைக்கப்படுகிறது. இதில் ஒருவர் அரசால் நியமிக்கப்படுவார். அவர் தான் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். மற்ற இருவரில், ஒருவர் செனட், மற்றவர் சிண்டிகேட் இவற்றால் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த மூன்று பேரும், இரண்டு, மூன்று அமர்வுகளுக்கு பின், வந்திருக்கும் விண்ணப்பங்களில் மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் பெயர்களை எழுதி ஆளுனருக்கு அனுப்புவர். இவர்களில் ஒருவரை ஆளுனர், தேர்ந்தெடுத்து, துணைவேந்தர் பதவியில் அமர்த்துவார். இதுதான் இன்றைய நடைமுறை.தேடும் குழு என்று பெயர் வைத்திருந்தாலும் அது தேர்வுக்குழுவாகவே செயல்படுகிறது. வந்திருக்கும் விண்ணப்பங்களில் இருந்து தான் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்கின்றனர். கல்வியாளர்களில் சிறந்தவர், துணைவேந்தர் பதவிக்கு ஏற்றவர் எங்கேயிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடிப்பது இன்று சாத்தியமில்லை போலும்.

தற்போது உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் முறையை மாற்றியமைக்கலாமா என்று விவாதிக்கப்படுகிறது. அதுபோல் துணைவேந்தரை நியமிக்கும் முறையையும் மாற்றியமைத்து, திறமை வாய்ந்தவர்களை பதவியில் அமர்த்த முடியுமா என்று விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பல வழிகளில் கவனிப்பாரற்றும், கேட்பாரற்றும் கிடக்கும் உயர் கல்வியை துாக்கி நிறுத்த திறமையான, அனுபவமிக்க, தொலைநோக்கோடு செயல்படுகிற, கல்வி மற்றும் ஆராய்ச்சி மீது ஈடுபாடு கொண்ட துணைவேந்தர்கள் தேவை.

உலகப் பல்கலைக் கழக தரவரிசைப் பட்டியலில், நம் பல்கலைக் கழகங்களுக்கும் இடம் வாங்கிக் கொடுக்கும் ஆற்றல் மிகு துணைவேந்தர்கள் தேவை. பணியே முதன்மையானது என்று அச்சமின்றி மாற்றங்களை கொண்டு வரும் துணைவேந்தர்கள் தேவை. 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று பெயர் வாங்க உழைக்கக் கூடிய துணைவேந்தர்கள் தேவை. எங்கே இருக்கின்றனர் இப்படிப்பட்ட துணைவேந்தர்கள்?
இ - ெமயில்: sadacpmb@hotmail.com

- முனைவர் ச.சதாசிவம் -
கல்வியாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X