லேசான மழைக்கே தாம்பரம் - முடிச்சூர் சாலையில் வெள்ளம்; தொடர் மழையால் முடிச்சூர் சாலையில் ஒரு வாரமாக போக்குவரத்து நிறுத்தம்; தாம்பரம் சி.டி.ஓ., காலனி வெள்ளத்தில் மூழ்கியது; பெருங்களத்தூர், பாரதிநகர் பகுதி குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கின - இவை எல்லாம் அனைத்து பத்திரிகைகளிலும், மழை பெய்ய துவங்கினாலே வழக்கமாக வரும் செய்திகள் தான். அந்த அளவிற்கு இந்த பகுதிகளில் வெள்ளம் ஏற்பட என்ன காரணம்; கடந்த காலங்களில் இப்படி எல்லாம் பாதிப்புகள் இருந்துள்ளனவா போன்ற விவரங்களை அறிய, நமது நிருபர் குழு, முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர் பகுதிகளில் கள ஆய்வு நடத்தியது.
இதில், பல்வேறு உண்மைகள் கண்டறியப்பட்டன.மேற்கு தாம்பரம், பழைய தாம்பரம், லட்சுமிபுரம், இரும்புலியூரின் ஒரு பகுதி, புது பெருங்களத்தூர், கண்ணன் அவென்யூ, சடகோபன் நகர், சக்தி நகர், முல்லை நகர், கிருஷ்ணாநகர், மல்லிகா நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நகர்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
உபரி நீரைக் கடத்தும் கால்வாய்
தாம்பரம் கல்யாண் நகர் ஏரி, இரும்புலியூர் ஏரி உட்பட 10க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரை கடத்தி சென்று, அடையாறு ஆற்றில் பாப்பான் கால்வாய் சேர்க்கிறது.
இந்த கால்வாய் தாம்பரம் - முடிச்சூர் சாலையில், சுண்ணாம்பு கால்வாய் என்னும் இடத்தில், பாரதி நகர் பிரதான சாலை துவங்கும் இடத்தில் தற்போது, வெறும் 3 அடி அகலத்தில் இருந்து துவங்குகிறது. அந்த கால்வாயை பின் தொடர்ந்ததில், பாரதிநகர் பிரதான சாலை முடியும் இடத்தில் 5 மீட்டர் அகலம் வரை அகலமாகி, வலது புறமாக திரும்புகிறது.
முட்டி நிற்கிறது
பெருங்களத்தூர் பேரூராட்சி எல்லையில் துவங்கும், இந்த பாப்பான் கால்வாய், உட்புற தெருக்கள் வழியாக தாம்பரம் சி.டி.ஓ., காலனி வழியாக தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையை அடைகிறது. கிஷ்கிந்தா சாலையில் இடதுபுறமாக ஒரு கிளை திரும்பி, 200 மீட்டர் தூரம் வரை சாலையோரமே பயணித்து, அடையாறு ஆற்றை அடைகிறது.
மற்றொரு கிளை, சாலையை சிறுபாலம் வழியாக கடந்து, எதிர் திசையில் செல்கிறது. ஆனால், இந்த கால்வாய் தொடர்ச்சியாக இல்லை. பட்டா இடத்தில் சென்று முட்டி நிற்கிறது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணை யில், முன்பு ஒரு காலத்தில், பாப்பான் கால்வாய், தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையை கடந்து ஒரு சிறு கிளை கால்வாயாக சென்று, அடையாறு ஆற்றில் இணைந்ததாகவும், தற்போது அந்த கால்வாய் எல்லாம் பட்டா நிலமாக மாறிவிட்டதாக வும் கூறப்படுகிறது.
கரைகளை அகலமாக்கி ஆக்கிரமிப்பு
பாப்பான் கால்வாய் துவங்கும் இடத்தில் இருந்து, அடையாறு ஆற்றில் இணையும் இடம் வரை 8 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை அகலம் இருந்ததாக, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்த கால்வாயின் கரைகள் இரண்டு பக்க மும் 2 மீட்டர் அகலத்திற்கு இருந்துள்ளன. கடந்த, 1965ம் ஆண்டு பெருங்களத்தூர் பேரூராட்சியில், பாரதி நகர் என்ற புதிய குடியிருப்பு பகுதி உருவானது. இந்த குடியிருப்பிற்கான பிரதான சாலையாக தற்போது இருப்பது பாரதிநகர் பிரதான சாலை.
இந்த சாலையே, பாப்பான் கால்வாயின் கரை மற்றும் கால்வாய் தான் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் 2 மீட்டர் கரையை சாலையாக மாற்றியவர்கள், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கால்வாயை ஆக்கிரமித்து, சாலையை 5 மீட்டருக்கும் அதிகமான அகலத்திற்கு மாற்றி உள்ளனர். தற்போது பிரதான சாலை அமைந்திருப்பது போக, எஞ்சியுள்ள பகுதியே பாப்பான் கால்வாயாக உள்ளது.
பாப்பான் கால்வாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு போக்கு கால்வாய். இந்த கால்வாயை பழுது பார்க்கவோ, பராமரிக்கவோ, எந்த அதிகாரமும் இல்லாத பேரூராட்சி நிர்வாகம், தன் எல்லை வரை கான்கிரீட் கால்வாயாக, இதை சீரமைத்து கட்டியது எப்படி என்ற கேள்வியும், பாப்பான் கால்வாய் விஷயத்தில் எழுகிறது.
பாப்பான் கால்வாய் சி.டி.ஓ., காலனியில், 800 மீட்டர் தூரத்திற்கு மட்டும், பழைய நிலையில், மண் கரையில் அமைந்துள்ளது. மற்ற இடங்களில் எல்லாம், பொதுப்பணித்துறையும், இந்த கால்வாயை, கான்கிரீட் சுவர் கட்டி, கான்கிரீட் கால்வாயாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது.
இதற்கு, முன் விவசாய பகுதிகளாக இருந்ததால், இயற்கையான மண் கால்வாய் இருந்தது. தற்போது குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால், கால்வாய்க்கு நீர் அதிகமாக வரும் என்பதால், நீரை வேகமாக கடத்தவும், கரைகள் சேதம் ஏற்படாமல் தடுக்க வும் கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டியது அவசியம் என்கிறது பொதுப்பணித்துறை.
பாப்பான் கால்வாய் ஆக்கிரமிப்பு உருவான பிறகு தான், மழைக்காலத்தில் இந்த கால்வாயின் உபரிநீர் கடத்தும் திறன் குறைந்து, முடிச்சூர் சாலையும், குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்க துவங்கி உள்ளன. மேலும், அடையாறு ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், பாப்பான் கால்வாயில் செல்லும் உபரிநீரை, ஆறு உள்வாங்குவது இல்லை.
இதனால் கடல்மட்டத்தில் இருந்து இயற்கையாகவே மிகவும் தாழ்வாக இருப்பதால், சி.டி.ஓ., காலனி, பாரதிநகர், கிருஷ்ணாநகர் பகுதிகளில் தண்ணீர் தேக்கம் அதிகரித்து விடுகிறது.
தப்பிக்க என்ன வழி?