"இஞ்ச்' இடுப்பழகி !| Dinamalar

"இஞ்ச்' இடுப்பழகி !

Updated : ஜன 27, 2016 | Added : ஜன 27, 2016 | கருத்துகள் (3)
"இஞ்ச்' இடுப்பழகி !

இடுப்பு என்றாலே கவர்ச்சியான உறுப்பாகத்தான் நம்மால் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பழங்காலத்திலிருந்தே மெல்லிடை, கொடியிடை என இடுப்பை இலக்கிய நுால்களில் கவிஞர்கள் வர்ணித்துள்ளனர். ஆணின் இடுப்பை விட, பெண்ணின் இடுப்பு மெலிந்து இருப்பதே கவர்ச்சியாக கருதப்படுகிறது. இடுப்பானது எடுப்பான பாகம் மட்டுமின்றி, நமது ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டும் உறுப்பாகவும் இருக்கிறது. இடுப்புச் சுற்றளவு அதிகரிக்கும் போதெல்லாம் நமது ஆரோக்கியம் குறைந்து போகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல தொடர் நோய்களுக்கு ஆளாக வேண்டிவரும். நமது உடலின் மையப் பகுதியே இடுப்பாகும். வயிற்றுப் பாகமும், புட்டப் பாகமும் சந்திக்கும் இடமே இடுப்பு, புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் கட்டும் புடவையோ, ஆண்கள் போடும் பேன்ட்டோ சரியாக நிற்கும் இடமே இடுப்பாகும்.சுற்றளவு எவ்வளவு? ஒவ்வொருவரும் தங்கள் இடுப்புச் சுற்றளவை அளந்து பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். தொப்புளுக்கு மேல் மற்றும் கீழ் பகுதியிலுள்ள ஆடைகளை சற்று விலக்கிக் கொள்ளுங்கள். கடைசி விலா எலும்புக்கு கீழே மற்றும் புட்ட எலும்புக்கு மேலே தொப்புளைச் சுற்றி உள்ள சதைப் பகுதியின் அளவை, அளந்து பாருங்கள். மூச்சை இயல்பாக வெளியிட்டவாறு அளக்க வேண்டும். அதே போல் மீண்டும் ஒரு முறை அளக்க வேண்டும். இது இடுப்புச் சுற்றளவாகும்.இடுப்புச் சுற்றளவு ஆண்களுக்கு 40 அங்குலத்திற்கு மேலும், பெண்களுக்கு 35 அங்குலத்திற்கு மேலும் இருந்தால், இதய மற்றும் சர்க்கரை நோய், ரத்தக் குழாய் அடைப்பு, அல்சிமர் என்ற மறதி நோய் ஏற்படும் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. இடுப்புச் சுற்றளவானது புட்டப் பகுதியின் சுற்றளவு மற்றும் விலா எலும்பின் சுற்றளவை விட குறைவாக இருக்க வேண்டும். சமமாக இருந்தால் தொப்பை அதிகரிக்க ஆரம்பிக்கிறது என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.பானை, ஆப்பிள் வயிறு ஆண்கள் ஒவ்வொரு முறை பேன்ட் தைப்பதற்கு அளவு கொடுக்கும் போதும், டெய்லர் இடுப்பை மட்டும் அளந்து அரை அங்குலம் சேர்த்து தைப்பது வழக்கம். ஏனெனில் ஆண்கள் 40 வயதை கடந்த பின், அவர்கள் இடுப்புச் சுற்றளவு ஆண்டு தோறும் கொஞ்சம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால் இடுப்பு தொப்பையாகிவிடும். இடுப்புச் சுற்றளவானது அதிகரிக்க ஆரம்பித்தவுடன் வயிறானது வெளிப்புறமாக விரிந்து, தொங்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் வயிற்றின் அமைப்பின்படி பானை வயிறு, ஆப்பிள் வயிறு, பீர் பாட்டில் வயிறு என பிறர் கேலியாக அடையாளம் சொல்லும் அளவு மாறிவிடும். ஆண்கள் மது அருந்துவதால் வெகு சீக்கிரம் பெரிய தொப்பைக்கு சொந்தக்காரர் ஆகிறார்கள். அமர்ந்த இடத்திலேயே பணிபுரிபவர்கள் தொப்பைக்கு ஆளாகிறார்கள்.ஆண்களுக்கு இடுப்புச் சுற்றளவானது 40 அங்குலத்திற்கு மேல் அதிகரிக்கத் தொடங்கியவுடன் ரெசிஸ்டின் என்ற பொருள் ரத்தத்தில் உற்பத்தியாகி, இன்சுலின் சுரப்பை தடுக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகரித்து, விரைவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தொப்பை அதிகரிக்கும் போது நடந்தால், மாடிப்படி ஏறினால், பேசிக் கொண்டே நடந்தால், உட்கார்ந்து எழுந்தால், கோபப்பட்டால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.தொங்கும் தொப்பை பெண்களுக்கு பி.சி.ஓ., என்று சொல்லப்படும் சினைப்பை நீர்ப்பைகளால் பாதிக்கப்படும் போது இடுப்பு பெருக்கிறது. அதே போல் கல்லீரலில் கொழுப்பு படியும் போது இடுப்புச் சுற்றளவு அதிகமாக ஆரம்பிக்கும். மாதவிலக்கு முற்றிலும் நிற்கக்கூடிய நிலையில் இருக்கும் பெண்களுக்கு ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறையும் போது மார்பு பகுதி, புட்டம் மற்றும் தொடைப் பகுதிகளிலிருந்த கொழுப்பு இடுப்பு நோக்கி நகர்ந்து, இடுப்புப் பகுதிகளில் சுற்றிலும் சேர்ந்து, முன்புறமாக அதிகம் படிந்து, தளர்ந்து தொங்கும் தொப்பையாக மாறிவிடும்.குழந்தைகளுக்கு தொப்பை பள்ளி செல்லும் குழந்தைகளும் தொப்பையால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் விரும்பி அதிகம் சாப்பிடும் பிரட், பன், பால் சார்ந்த உணவுகளில் கிளைசிமிக் இண்டக்ஸ் என்ற சர்க்கரை குறியீடு அதிகம் உள்ளதால் இடுப்புச் சுற்றளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். தற்சமயம் குழந்தைகள் 4 முறை உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். காலை, மதியம், மாலை, இரவு என அரிசி சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் தொப்பை விரைவில் வந்துவிடுகிறது. ஒரே இடத்தில் உட்கார்ந்து படித்தல், 'டிவி' பார்த்தல் என பொழுதை ஓட்டுவதால் விரைவிலேயே இடுப்பு பெருத்து, ஹார்மோன் குறைபாடு ஏற்படுகிறது. பெண் குழந்தைகள் விரைவிலேயே பருவம் அடைந்து, அதன் பின்னர் மாதவிலக்கு சரியாக வராமல் சினைப்பை நீர்கட்டியினால் சிரமப்படுகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு இடுப்பு பெரிதாகி தொங்குவது மட்டுமன்றி, மார்பு பகுதியிலும் கொழுப்பு படிந்து, பெண்களின் மார்பு போல் மாறிவிடுவதால் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.கொழுப்பு பாதிப்பு பொதுவாக நமது தோலுக்கு கீழ் படியக் கூடிய, கொழுப்புகள் நமது ஆரோக்கியத்திற்கு பெரும்பாலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், நமது வயிற்றுப் பகுதியில் படியக்கூடிய கொழுப்பானது கூடுதல் கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டு, இடுப்பு மற்றும் வயிற்று பகுதிகளில் படிகிறது. அதிலும் கல்லீரலில் படியும் கொழுப்பு தொப்பை பெருப்பதற்கு முதல் காரணமாகிறது. பேக் செய்யப்பட்ட பழச்சாறு, குளிர்பானம், இனிப்பு சேர்க்கப்பட்ட காபி, டீ ஆகிய அனைத்துமே ஏதாவது ஒரு வகையில் வயிற்று சதைப் பகுதியை அதிகரிக்கிறது. இனிப்பு, கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரத உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. நாம் இவ்வளவு நாள் சாப்பிட்ட இனிப்புக்கு எதிர்மாறாக புரதத்தை சாப்பிட வேண்டும். ரீபைன்ட் எண்ணெய் மற்றும் அதில் தயாரிக்கப்பட்ட உணவுகளாக இருந்தாலும் கூட அவை கொழுப்பை அதிகரித்து விடுகிறது.அசைவப் பிரியர்கள் முட்டை வெள்ளைக்கரு, கடல் மீன், தோல் நீக்கப்பட்ட கோழி ஆகியவற்றை குறைந்தளவில் எடுத்துக் கொள்ளலாம். பிரட், மைதா ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், சுளை மற்றும் கொட்டையுள்ள பழங்கள், ஓட்ஸ், மட்டை அவல் ஆகியவை நார்சத்து அதிகம் நிறைந்தது. மேலும் இடுப்புச் சதையை குறைக்கும் தன்மையுள்ளது.உடற்பயிற்சி, மித வேகத்தில் நடைபயிற்சி, நீச்சல், கூடைப்பந்து, பூப்பந்து, ஸ்கிப்பிங், யோகா ஆகியவற்றை மாதந்தோறும் மூன்று வாரங்களாவது தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவில் 15 முதல் 20 சதவீதத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இதனால் இடுப்புத் தசைகள் தளர்ந்து இறுக ஆரம்பிக்கும். உணவில் ஓமம். சோம்பு, லவங்கப்பட்டை, வெங்காயம், பச்சைப் பட்டாணி சேர்ப்பது நல்லது. தொப்பையை குறைப்போம், ஆரோக்கிய வாழ்வை நோக்கி அடி வைப்போம்.
- டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ்98421 67567 மதுரை.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X