வெளிநாட்டு கோழிகள் மாயம்... - வெளுத்தது காக்கிகளின் சாயம்| Dinamalar

வெளிநாட்டு கோழிகள் மாயம்... - வெளுத்தது காக்கிகளின் சாயம்

Added : ஜன 27, 2016
Share
பகலிலேயே இருட்டுக் கட்டியிருந்தது, நகரம். தண்டு மாரியம்மன் கோவிலுக்கு வெளியே, காத்திருந்தாள் சித்ரா. கோவிலுக்குள் இருந்து, வெளியே வந்தாள் மித்ரா.''எனக்காக நிக்கிறியா? நான் அப்பவே வந்துட்டேன். லேட்டா வர்றதுக்கு, நான் என்ன மினிஸ்டரா?'' என்றாள்.''கோவிலுக்கு வந்தாலும், உன் குசும்பு போகாதுடி. வா...முதல்ல சாமியைக் கும்புடுவோம்'' என்ற சித்ரா, கோவிலுக்குள் வேகமாகச்
வெளிநாட்டு கோழிகள் மாயம்...  - வெளுத்தது காக்கிகளின் சாயம்

பகலிலேயே இருட்டுக் கட்டியிருந்தது, நகரம். தண்டு மாரியம்மன் கோவிலுக்கு வெளியே, காத்திருந்தாள் சித்ரா. கோவிலுக்குள் இருந்து, வெளியே வந்தாள் மித்ரா.
''எனக்காக நிக்கிறியா? நான் அப்பவே வந்துட்டேன். லேட்டா வர்றதுக்கு, நான் என்ன மினிஸ்டரா?'' என்றாள்.
''கோவிலுக்கு வந்தாலும், உன் குசும்பு போகாதுடி. வா...முதல்ல சாமியைக் கும்புடுவோம்'' என்ற சித்ரா, கோவிலுக்குள் வேகமாகச் சென்றாள்.
இருவரும் பயபக்தியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தைச் சுற்றி, பிரசாதம் வாங்கிக் கொண்டு, ஹாயாக தரையில் கால் நீட்டி அமர்ந்தனர்.
''அக்கா...தரிசனக்கடுதாசி கொடுக்கக்கூடாதுன்னு, கவர்மென்ட்ல உத்தரவு போட்டாங்கள்ல. அறநிலையத்துறை ஆபீஸ்ல வேலை பாக்குறவுங்களுக்கு, ஒரு லெட்டருக்கு 500 ரூபாயாவது கிடைச்சிட்டு இருந்துச்சு. அதுவும் போச்சு. இப்போ, போன்ல 'சிக்னல்' கொடுத்து, விஐபிகளை கவனிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.
''என்னடி மித்து...நம்மூர்ல, தாகூர் முதமுதலா 'ஜனகனமண' பாடுன இடத்துல, ரஹ்மான் நம்ம தேசிய கீதத்தை முணுமுணுத்துட்டே போயிட்டாராம்'' என்றாள் சித்ரா.
''அதை ஏன் கேக்குற... பெரிய சொதப்பல். ஒரு அரேஞ்ச்மென்ட்டும் சரியில்லை. அந்த ஸ்கூல் குழந்தைங்களை மட்டும் 'அலவ்' பண்ணிருந்தா பரவாயில்லை. காலேஜ் பசங்க, வெளியாளுங்களை உள்ளே விட்டு, பயங்கர கூட்டம். தேசிய கீதம் பாடுறப்போ, ஒரே சத்தம். அவரால ரெண்டு வார்த்தையக் கூட, ஒழுங்கா பாட முடியலை'' என்றாள் மித்ரா.
''அவரு புரோக்ராம்க்கு 25 ஆயிரம், 15 ஆயிரம், 5 ஆயிரம்னு டிக்கெட் வித்தாங்க. ஆனா, நடத்துனவுங்களுக்கு நஷ்டம்கிறாங்க. ஏகப்பட்ட டிக்கெட், ஓசியில போயிருச்சாம்''
''நிஜம்தான்க்கா...எனக்குத் தெரிஞ்ச ஒரு இன்ஸ்பெக்டரை பார்க்கப் போனப்போ, அவருக்கு போன் வந்துட்டே இருந்துச்சு. அவரு எடுக்கவே இல்லை. ஏட்டையா, 'எடுக்கவா'ன்னு கேட்டதுக்கு, 'வேணாம்யா. எடுத்தா, எவனாவது ரஹ்மான் புரோக்ராமுக்கு நாலு டிக்கெட் கேப்பான்'னு சொன்னாரு. அதுக்கு அந்த ஏட்டய்யா, 'அய்யா! வேற ஏதாவது பெரிய ஆபீசர் கூப்பிட்டா'ன்னு பயமுறுத்துனாரு''
''ம்ம்...அப்புறம் என்ன ஆச்சு?''
''உடனே இன்ஸ்பெக்டரும் வேண்டா வெறுப்பா, தெரியாத நம்பர்ல இருந்து வந்த ஒரு போனை எடுத்துப் பேசுனாரு. அடுத்த கால் மணி நேரம், அவரோட வாயில இருந்து, 'கண்டிப்பா வாங்கித் தர்றேங்க. எப்பிடியாவது வாங்கித் தர்றேங்க'ன்னு ரெண்டு வார்த்தைதான் வந்துச்சு. அந்த போனை வச்சுட்டு, ஏட்டய்யாவை அவரு பார்த்த பார்வை இருக்கே...ஹய்யோ!''
இருவரும் பலமாகச் சிரித்ததை, அருகில் இருப்போர் வினோதமாகப் பார்க்க, சத்தம் குறைத்துப் பேசினாள் சித்ரா.
''மித்து...நம்மூரு பெரிய போலீஸ் ஆபீசர் வீட்டுல வேலை பார்த்த எல்லாரையும் கூண்டோட மாத்திட்டாங்களாம்''
''ஆமாக்கா...அதுக்குப் பின்னால மூணு கோழிங்க கதை இருக்கு!''
''கோழிக்கும், டிரான்ஸ்பருக்கும் என்னடி சம்மந்தம்?''
''ரெட்பீல்ட்ஸ் ஏரியாவுல பெரிய ஆபீசரோட பங்களா இருக்குல்ல. அங்க பத்துப் பதினைஞ்சு வெளிநாட்டுக் கோழிங்க வளத்திருக்காங்க. ஏதோ ஹங்கேரி கோழிங்கிறாங்க. பாக்கவே படு அழகா இருக்குமாம். ரொம்ப காஸ்ட்லியாம்''
''அது சரி...அந்த கோழிகளுக்கு என்னாச்சு?''
''திடீர்னு அதுல மூணு கோழிகளைக் காணோம். அதுக்குப் பதிலா, நம்மூரு நாட்டுக் கோழிங்க மூணு புதுசா இருந்திருக்கு. யாரோ ஒரு அறிவாளி, அந்த கோழிகளை 'சுட்டுட்டு', இந்த கோழிகளை கலந்து விட்ருக்காரு. வெளிநாட்டுக் கோழிகளை கொன்னு சாப்பிட்டாங்களா, வித்துட்டாங்களான்னே தெரியலை. அதான் எல்லாரையும் கூண்டோட மாத்திட்டாங்க''
''வரவர போலீஸ்காரங்களுக்கே நம்ம போலீஸ் ஆபீசருங்க மேல பயமில்லாமப் போயிருச்சு. அப்புறம் கிரிமினல்ஸ், கட்டப்பஞ்சாயத்து பண்றவன்லாம் எப்பிடி பயப்படுவான்?'' என்றாள் சித்ரா.
''போலீசைப் பாத்து யாரு பயப்படாம இருக்காங்கன்னு சொல்ற?''
''காந்தி மாநகர்ல 'பாரத்'ங்கிற பேருல படை நடத்துற ஒருத்தரு இருக்காரு. அவரு தான், அந்த ஏரியாவுக்கே, கட்டப்பஞ்சாயத்து தாதாவா உருவெடுக்குறாராம். அந்த ஏரியால காலேஜ்ங்க அதிகமா இருக்குல்ல. அங்க ஒண்ணு மண்ணா இருக்குற பசங்களை தமிழன்-மலையாளி, ஹிண்டு-கிறிஸ்டின்னு பிரிச்சு மோத விட்டு, அதை வச்சு காசு பண்றாராம்''
''இவரு தான் போலீஸ்க்கு பயப்புடுறதில்லையா?''
''ஆமா...அந்த ஏரியா ஸ்டேஷன்ல, டேபிள் மேல ஏறி உட்காந்துட்டே, வர்றவுங்களை மெரட்டுறாராம். அவர்ட்ட மாமூல் வாங்காத போலீஸ்காரங்க திட்டுனா, ஐ.எஸ்.,பெரிய ஆபீசர்கள்ட்ட போட்டுக் கொடுத்துர்றாராம்''
''மாமூல்னு சொல்லவும், எனக்கு நம்ம கலெக்ட்ரேட்ல இருக்குற மகளிர் குழு கடை ஞாபகம் வந்துச்சு. போன மாசம், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி, ஒருத்தரை டிஸ்மிஸ் பண்ண வச்சாங்களே. அவரோட லவ்வருக்கு தான், இந்த கடையில வர்ற லாபத்துல பெரும் பங்கு மாமூலாப் போயிருக்கு'' என்றாள் மித்ரா.
''மித்து...அந்தப் பையனுக்கு 'சப்போர்ட்' பண்ணுன, அந்த தமிழ்க்கடவுள் ஆபீசரை, 'டீமோஷன்' பண்ணிட்டாங்க. இப்போ அவரு திட்டம் போடுற இயக்குனர் இல்லை. திட்டம் போடுற அலுவலராயிட்டாரு'' என்றாள் சித்ரா.
''இந்த கவர்மென்ட்ல திட்டம் போடுறதுக்குக் கூட அலுவலர் தேவையில்லை. அறிவிக்கிறதுக்கு இருந்தா போதும். நம்ம கார்ப்பரேஷன் ஆபீசர், திடீர்னு பிரஸ்சைக் கூப்பிட்டு, பஸ் ஸ்டாண்ட், லாரிப்பேட்டை, அரை வட்டச் சாலை, மல்டி லெவல் பார்க்கிங், கட்டன் மலையைக் குடைஞ்சு குகை அமைக்கிறது எல்லாமே சீக்கிரமே ஆரம்பிக்கப் போறோம்னு சொல்லிருக்காரு''
''இதைத்தான அவரு, வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்காரு. இப்போ என்ன டெவலப்மென்ட்டாம்''
''ஒரு டெவலப்மென்ட்டும் இல்லை. பெரியகோம்பை-கட்டன் மலையில குகை அமைக்க, இன்னும் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் என்ஓசியே கொடுக்கலை. மத்த திட்டம் எதுக்கும் நிதியே ஒதுக்கலை. டெண்டரும் விடலை. மல்டி லெவல் பார்க்கிங் மட்டும் தான், தனியார் பங்களிப்போட நடக்குறது. அதையும் இவுங்க துவக்குறது மாதிரித் தெரியலை''
''கவர்மென்ட் கொடுத்தாத்தான அவரால செய்ய முடியும். அதுவரைக்கும், எரியுற வீட்டுல புடுங்குறது லாபம்னு வந்ததை வாங்கிட்டு, உக்காந்துக்கிற வேண்டியது தான். கார்ப்பரேஷன் ஆபீசர்களோட சுத்தத்தைப் பாத்து தான், 'சுவாஜ் பாரத்' திட்டத்துக்கு, 'சிஎஸ்ஆர்'ல நிதி கொடுக்குறதுக்கு கம்பெனிங்க யோசிக்குது. இதுக்காக நடத்துன கூட்டத்துல, 'நாங்க நிதி கொடுக்குறோம். ஆனா, நிர்வாத்துல வெளிப்படைத்தன்மை வேணும்'னு கேட்ருக்காங்க''
''சரியான கேள்வி தான். கார்ப்பரேஷன் கடைகளை, போலி ஆவணம் தயாரிச்சு, வேற ஆளுகளுக்கு மாத்தி விட்ருக்காங்க. அதுக்காக போலீஸ்ல புகாரும் கொடுத்த பிறகும், யாரையும் அரெஸ்ட் பண்ணலை. விசாரிச்சா, சென்ட்ரல் அண்ணாச்சியும், ஆளும்கட்சி விஐபியும் தான், வேணாம்னு தடுத்து வச்சிருக்காங்களாம். இதான், இவுங்க டிரான்ஸ்பரன்சி!'' என்றாள் மித்ரா.
''விஐபின்னு சொன்னியே...கார்ப்பரேஷன்ல 31 ஹாஸ்பிடலுக்கு 15 டாக்டர்களை புதுசா எடுத்திருக்காங்க. அப்பாயின்மென்ட் ஆர்டரெல்லாம் ரெடி. ஆனா, விஐபி தேதி கிடைக்காம, டாக்டர்களுக்கு அதைக்கொடுக்க முடியலை. கார்ப்பரேஷன் ஹாஸ்பிடல்கள்ல, டாக்டர்க இல்லாம ஏழைங்க கஷ்டப்படுறாங்க'' என்றாள் சித்ரா.
''ஹாஸ்பிடல்னாலே பயமா இருக்குக்கா. கிரிக்கெட் விளையாடி, தோள் வலின்னு போன 25 வயசுப் பையனை நம்மூரு ஹாஸ்பிடல்ல, அநியாயமா சாகடிச்சிட்டாங்களே. நம்மூருல பல ஹாஸ்பிடல்கள்ல கட்டிடமெல்லாம் பெருசு பெருசா கட்டிருக்காங்க. டாக்டர்கதான் இருக்குறதேயில்லை. பெரிய டாக்டர்களுக்கு மனசு சிறுசா இருக்கு'' என்றாள் மித்ரா.
பெண்கள் கூட்டம் அதிகமாய் வந்து கொண்டிருந்தது. இருவரும் எழுந்து, கோவிலுக்கு வெளியே வந்தனர்.
''மித்து...இப்பல்லாம் ஏழைப்பெண்களோட வேண்டுதலே, புருஷன் குடிக்காம இருக்கணும்கிறதாத்தான் இருக்கு. ஆனா, நம்மூர்ல டாஸ்மாக்ல நாலு மாவட்டங்களைப் பாத்துக்குற 'போஸ்ட்டிங்'ல, செம்ம காசு வர்றதால, ரெண்டு லேடி ஆபீசர்க அதுக்கு முட்டி மோதுறாங்க. இங்க ரேஷன் கடைகளைப் பாக்குற ஆபீசரம்மாவும், சமூக பாதுகாப்புத்திட்ட ஆபீசரம்மாவும் ஆளுக்கு 25 லட்சத்தை ரெடி பண்ணிட்டு, காய் நகர்த்திட்டு இருக்காங்க'' என்றாள் சித்ரா.
''அக்கா...நம்மூர்ல ஒரு காலேஜ்ல, கேரளா மசாஜ் பண்ணியே, பல விஐபிங்களை 'கரெக்ட்' பண்றாங்களாம். நம்மூர்ல இருக்குற சில முக்கியமான ஆபீசர்களும் 'அன்டைம்'ல தெற்கால போறதாத் தகவல்'' என்ற மித்ரா, வண்டியைக் கிளப்ப, பின்னால் ஏறினாள் சித்ரா. பறந்தது டியோ.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X