வளாக நாடகங்களின் வசந்த காலங்கள் | Dinamalar

வளாக நாடகங்களின் வசந்த காலங்கள்

Added : ஜன 27, 2016
வளாக நாடகங்களின் வசந்த காலங்கள்

இந்தியாவில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் கல்வி நிறுவனங்களில் இயங்கும் நாடகக் குழுக்கள், அவற்றின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாகும். இத்தகைய வளாக நாடகச் செயல்பாடுகள் உலகம் முழுவதிலும் நடந்து வருகின்றன. இந்நாடகச் செயல்பாடுகளை 'கேம்பஸ் தியேட்டர்' என்கின்றனர்.பள்ளி, கல்லுாரிகளில் நாடகத்தின் பால் ஈடுபாடு கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களை இணைத்துக் கொண்டு நாடகப் பிரதிகளை எழுதியோ அல்லது ஷேக்ஸ்பியர், மோலியர், அந்தோன் செகாவ், பெர்டோல் ட்ப்ரக்ட் போன்ற நாடகக்காரர்களின் பிரதிகளை தேர்வு செய்தோ குறைந்த பொருட்செலவில் மேடையேற்றம் செய்கின்றனர். அந்தந்த மாநில முதன்மை மொழிகளில் கிடைக்கப் பெறும் பிரதிகளைக் கொண்டும் நடக்கிறது.இந்தியில் மோகன் ராகேஷ், தர்மவீர் பாரதி, சுரேந்திரவர்மா, பாதல் சர்க்காரது நாடகங்கள் பெரிதும் மேடையேற்றம் காண்கின்றன. தமிழில் இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, நிஜந்தன் ஆகியோரது நாடகங்கள் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன.பாடங்களாகும் நாடகங்கள் பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும் அனைத்து பாடப் பிரிவினரும் நாடகத்தை பாடமாக பயில்வது வழக்கமாகவுள்ளது. கல்விக்கூடங்களில் நாடகம் உரைநடை இலக்கியங்கள் நடத்தப்படுவது போலவே ஆசிரியர்களால் கையாளப்படுகிறது. நல்ல நாடகங்கள் பாடமாக இருக்கும். அதை நடத்தும் விதம் மோசமானதாக அமைந்து விடும். அதற்கு காரணம் நாடகம் நடத்தும் ஆசிரியர்களின் நாடகம் பற்றிய புரிதலும் போதாமையுமே ஆகும்.பேஜ் டூ ஸ்டேஜ் நாடக மேடையாக்கம் பற்றி Page to Stage என அறிஞர்கள் குறிப்பிடுவர். தளக்கற்பனை (Improvisation) யை அடிப்படையாகக் கொண்டு Page லிருந்து Stage க்கு நாடக மொழி சார்ந்தும் வடிவ அடிப்படையிலும் நிகழ்த்துப் பிரதியை வளர்த்தெடுப்பது வழக்கம். நாடகம் ஒரு நிகழ்த்துக்கலை என்ற படியால் நாடகத்தின் அனைத்துக்கூறுகளோடும் பரிபூரணமாக நிகழ்த்தப்படும் போது தான் மாணவர்களுக்கு நாடகவியல் பற்றிய புரிதல் முறைப்படும். அதை தான் முழுமை அரங்கு (Total Theatre) என்கிறோம். நாடகம், நடிப்பு தொடர்பான கூறுகளை அடையாளம் கண்டு மாணவர்கள் தன்னளவில் உணர்ந்து அனுபவமாக்கிக் கொள்ளும் பொழுது நாடக வடிவம் பற்றிய புரிதல் ஆழமாக ஏற்படும்.படைப்பாற்றல் ஆளுமை முப்பது அல்லது நாற்பது நாட்கள், நாடகப் பேராசிரியரின் வழிகாட்டுதலுடன், நாடகத்திற்கு தேவையான காட்சி உருவாக்கம், பாத்திரமாக்கல் கூறுகள், வடிவமைப்பு மற்றும் நெறியாக்க உத்திகளை கற்றுணர்ந்து மேடையாக்கத்தில் ஈடுபட வேண்டும். அப்போது படைப்பாற்றல் சார்ந்தும் ஆளுமை திறனடிப்படையிலும் அவனுக்குள் ஒரு விழிப்பு நிலை உருவாகிறது. அது அவனுக்கு மிகுந்த நம்பிக்கைகளையும் தைரியத்தையும் தருகிறது. சமூகத்தில் எந்தப் பணியையும் எப்படிப்பட்ட சூழலிலும் அதற்குரிய தளத்தில் செய்து முடிக்கும் நேர்த்தியை மாணவனுக்குள் அது விதைக்கிறது. இதுதான் நிகழ்கலைகளுக்குரிய தனித்துவம்.கல்வி நிலையங்களில் வகுப்பறைச் செயல்பாடும், வளாகச் செயல்பாடும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்க வேண்டும். இரண்டு சூழ்நிலைகளுமே மாணவனுக்கு தேவையான படைப்பு மனோபாவத்தை உருவாக்கி ஆற்றுப்படுத்த வேண்டும். வகுப்பறையில் கற்றுக் கொள்ளும் விஷயங்களை பரிசோதித்துப் பார்க்கும் களமாக, வளாகம் அமைய வேண்டும். பெரும்பாலான கலைக்கல்லுாரிகளில் வளாகச்செயல்பாடுகள் கலைசார் செயல்பாடுகளாகவே இருந்து வந்திருக்கின்றன. அதிலும் நாடகம் போன்ற நிகழ்கலைகளுக்கு அதில் முக்கிய பங்கு இருந்திருக்கிறது.டில்லியில் நாடகம் சர்வதேச புகழ் பெற்ற நாடக ஆளுமையும், தேசிய நாடகப் பள்ளி முன்னாள் இயக்குனருமான, முனைவர் அனுராதாகபூர் தன் அனுபவத்தை இப்படி பகிர்ந்து கொள்கிறார்...''டில்லியில் நாடகத்தை நோக்கிய ஈர்ப்பு ஆரோக்கியமானதாக உள்ளது. ஓம்சிவ்புரி, சுதாசிவ்புரி போன்ற நாடகத்தில் புகழ்பெற்றஆளுமைகள் மாடர்ன் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து நாடகத்தை கற்பித்ததையும் மேடையேற்றம் செய்ததையும் எனது மாணவப் பருவநினைவுகளாக வைத்திருக்கிறேன்''இப்ராஹிம் அல்காசியின் மாணவரான ஓம்சிவ்புரி, மோகன்ராகேஷ் என்ற நாடக எழுத்தாளரின் 'அரையும்குறையும்' நாடகத்தை மாணவர் தயாரிப்பாக உருவாக்குகையில் ஒத்திகை தளங்களுக்கு மோகன் ராகேஷ் அடிக்கடி வந்து செல்வதை குறிப்பிடுகிறார்.''மோகன்ராகேஷ் நாடகவார்த்தை பற்றி ஆய்வு செய்தவர், ஓம்சிவ்புரிக்கு பிரதியை பகுப்பாய்வு செய்வதில் அலாதியான திறன் உண்டு. இருவரும் இணைந்து பள்ளி வளாகத்தில் நாடகப்பணி செய்தது இளம் வயதில் எங்களுக்கு உத்வேகம் அளித்தது,'' என்கிறார், அனுராதாகபூர்.கல்லுாரி படிப்பிற்கு பின் முனைவர் அனுராதாகபூர் லண்டனில் லீடு பல்கலையில், நாடகத்தில் முதுகலை படிப்பையும், ராம்லீலா பற்றிய முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொள்கிறார். நாடகக்காரராக தன் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உந்துதலாக அமைந்தது, பள்ளி கல்லுாரிகளில் நடந்த வளாகச் செயல்பாடுகளே என பதிவு செய்கிறார்.கல்லுாரிகளில் நாடகம் பெருநகரங்களில் முதன்மையான பல கல்லுாரிகள் இந்த வளாக நாடகச் செயல்பாடுகளை நடத்துகின்றன. தமிழகத்திலும் பரவலாக இம்முயற்சிகள் நடந்து வந்துள்ளன. தெருக்கூத்து போன்ற மரபுநாடகங்கள், இசை நாடகங்கள், திராவிட இயக்க நாடகங்கள், சமூக நாடகங்கள், நவீன நாடகங்கள் என பலவகை நாடகங்கள் அந்தந்த காலக்கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் மேடை ஏற்றப்பட்டுள்ளன. நுாற்றுக்கு மேற்பட்ட இசைநாடகக் கம்பெனிகள் சிறப்பாகச் செயல்பட்ட நாடக மாநகர் மதுரையில் வளாக நாடகச் செயல்பாடுகளுக்கு சிறப்புற்று திகழ்ந்தது அமெரிக்கன் கல்லூரி.வசந்தனின் கர்ட்டன் கிளப் இக்கல்லுாரி ஆங்கில பேராசிரியர் ஜே.வசந்தன் கர்ட்டன் கிளப் நாடக குழுவை துவக்கி நாடகங்களை அவரது பாணியில் உருவாக்கினார். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் தேர்ந்த புலமைத்துவம் பெற்றவர். அவர் ஷேக்ஸ்பியரை மேடை ஏற்றவில்லை. ஜே.பி.பிரிஸ்லி, ஆஸ்கார்வொயில்ட், சாமுவல்பெக்கட், அகதாகிறிஸ்டி ஆகியோரது நவீன நாடகங்களை மேடையேற்றுகிறார். காலக்கட்டத்திற்கு ஏற்றபடி நவீன நாடகங்களை தேர்ந்தெடுத்து மேடையேற்றுதல், அதிலும் உழைக்கும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிகளை தேர்வுசெய்தல், நகைச்சுவையும் சுவாரஸ்யமும் குறையாத நாடகங்களை 'எண்டர்டெயின்மென்ட் வித் மெசேஜ்' என்ற முன்மொழிதலோடு கர்ட்டன் கிளப் இயங்கி வந்துள்ளது.வசந்தன் ஓர் உதாரணம். அவரைப்போல் ஒவ்வொரு நகரத்திலும் ஏதேனும் ஒரு கல்லுாரியில் அல்லது பள்ளியில் ஒருவர் வசந்தனின் வசீகரத்தோடு வளாக நாடகச்செயல்பாட்டை நடத்துகின்றனர்.வசந்தனிடம் நேரடியாக பயிலவில்லை, அவரது நாடகங்களை பார்த்ததில்லை. ஆனால் அவர் உரையாடி கேட்டிருக்கிறேன். அவரின் ஆளுமையை ஓரளவு உணர்ந்திருக்கிறேன். தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், படைப்பு நேர்மையோடு வாழ்ந்து சென்ற வசந்தனின் வாழ்வும் பணியும் அடுத்த தலைமுறையினர் கொண்டாடப்பட வேண்டியதாகும்.
- எம்.சண்முகராஜா,திரைப்பட நடிகர், நிகழ் நாடக மையம். 0452-327 0900

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X