திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் "அம்போ" ஆன திருவேற்காடு கோலடி ஏரி| Dinamalar

திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் "அம்போ" ஆன திருவேற்காடு கோலடி ஏரி

Updated : ஜன 28, 2016 | Added : ஜன 28, 2016 | கருத்துகள் (4)
Advertisement

திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளால், திருவேற்காடு கோலடி ஏரி முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது. ஏரியை மீட்காவிட்டால், எதிர்காலத்தில், திருவேற்காட்டின் பிற பகுதிகளும் சேர்ந்து வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.

சென்னை அம்பத்தூர் அடுத்த திருவேற்காடு நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. 1.5௦ லட்சம் மக்கள் தொகை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முறையான அனுமதி பெறாத கட்டடங்கள் என, அனைத்து வகையிலும், நகராட்சி தாறுமாறாக வளர்ந்து வருகிறது.

கருமாரியம்மன் கோவில், ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர், 20க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான கோவில்கள், குறி சொல்லும் மேடைகள் ஆகியவற்றால், கோவில் நகர் என, திருவேற்காடு புகழ் பெற்றுள்ளது. சாதாரண நாட்களில், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


நிலப்பரப்பில், கூவம் ஆற்றின் கரையோரம், மேடான இடத்தில் திருவேற்காடு உள்ளது. கருமாரியம்மன், வேதபுரீஸ்வரர் கோவில்களின் கிழக்கில், 210 ஏக்கர் பரப்பளவில், அயனம்பாக்கம் ஏரி உள்ளது. மேற்கில் கூவம் ஆறும், வடக்கில் கோலடி ஏரியும் உள்ளன.நடவடிக்கை இல்லை

கடந்த, 2015, நவ., - டிச., மாதங்களில், நீடித்த பலத்த மழையால், ஆற்றின் கரையை ஒட்டிய ஆக்கிரமிப்பு வீடுகள், நகராட்சியின் தாழ்வான பகுதிகள் மற்றும் கோலடி ஏரிக்குள் ஆக்கிரமித்து உருவான அன்பு நகர் மற்றும் செல்லியம்மன் நகர் குடியிருப்புகள் மட்டுமே வெள்ளத்தில் சிக்கின.

அதிகபட்ச பாதிப்பு ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தான். வீடுகளை நோக்கி வெள்ளம் பாயவில்லை. ஏரிகள், நீர்போக்கு கால்வாய் தடங்களில் மட்டுமே வெள்ளம் பாய்ந்தது.


கூவம் ஆற்றை ஒட்டி உள்ள கோலடி ஏரி, 220 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில், 33 கோடி கன அடி நீர் இருப்பு வைக்க முடியும்.குளமாக மாறிய ஏரி

ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், அந்த ஏரியின் பெரும்பகுதி குப்பை கொட்டுதல், தற்காலிக மற்றும் நிரந்தரக் குடியிருப்புகள், தீ விபத்தை ஏற்படுத்தும் முறையான அனுமதி பெறாத கிடங்குகள், சிறு தொழிற்சாலைகள் என, பல்வேறு ஆக்கிரமிப்புகளால் குளமாக சுருங்கி விட்டது.


ஏரிக்குள் அன்பு நகர், செல்லியம்மன் நகர்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில், 10 பிரதான தெருக்கள், 20 குறுக்குத் தெருக்கள் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.


ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் குடிநீர், தெரு விளக்கு, சிமென்ட் சாலை என, அனைத்து அடிப்படை வசதிகளும், நகராட்சி நிர்வாகத்தால் தாமதமின்றி நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன.


ஆக்கிரமிப்பு உருவாகும்

தனியார் ஆக்கிரமிப்புகளுக்கு பாதுகாப்பாக, கோலடி சாலையை ஒட்டி அரசின் இரு ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவை செயல்பாட்டிலும் உள்ளன.

மிச்ச சொச்ச ஏரியிலும், எக்கச்சக்கமாக கருவேல மரங்கள் பல ஆண்டுகளாக வளர்ந்து வைரம் பாய்ந்து விட்டன. அவற்றை அகற்ற இதுவரை பொதுப்பணி துறையோ, உள்ளாட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


ஏரிக்குள் ஆக்கிரமித்து உருவான நகர்கள், வெள்ளத்தில் மூழ்கியதால், அவர்களுக்கு உதவும் கையில், நகராட்சி மூலம், 50 குதிரைத் திறன் கொண்ட, மூன்று டீசல் மோட்டார்கள் கடந்த இரு மாதங்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஏரி நீர், கூவம் ஆற்றில் விடப்படுகிறது. இன்று வரை ஓரிரு பிரதான தெருக்களில் மட்டும் வெள்ளம் வடிந்துள்ளது.ஆக்கிரமிப்புக்கு உதவும் நகராட்சி

மோட்டார் பம்புகளுக்கான வாடகை, டீசல், பம்பு ஆபரேட்டர்களுக்கான சம்பளம் என, கணிசமான தொகை, நகராட்சிக்கு செலவாகிறது. அவசரப்பணிக்கான செலவினம் என, நகராட்சி நிர்வாகம் தீர்மானம் இயற்றி, நகர மன்றத்தின் ஒப்புதலைப் பெற்று வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில், கோலடி ஏரியில் மிச்சம் மீதி உள்ள மொத்த நீரும் வெளியேற்றப்பட்டு விடும்.

பகுதிவாசிகளின், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக சேமிக்கப்பட வேண்டிய தண்ணீரை, ஆக்கிரமிப்பாளர்களுக்காக, நகராட்சி நிர்வாகம், அரசு பணத்தை செலவழித்து வெளியேற்றுகிறது. இதனால், ஏரிக்குள் மேலும் ஆக்கிரமிப்பு உருவாகும்.


அரசு துறைகள் 'கோமா'

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர் கூறியதாவது:

ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிக்க, அரசியல் கட்சியினர் சிறப்பு கூட்டணி அமைப்பர். கோலடி ஏரி ஆக்கிரமிப்பிலும் அப்படித்தான். அதனால், நகராட்சி அதிகாரிகளும், அவர்களுடன் இணைந்து விடுகின்றனர்.

நகராட்சிக்கு சொற்ப தொகையை வரியாகவும், அதற்கான சேவை வரியாக தங்களுக்கு கணிசமாகவும் பணத்தை பெற்றுக் கொண்டு, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து விடுகின்றனர். மின்வாரியம் தான் முதலில் அதற்கு துணை போகிறது.


ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டிய பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறைகளும் 'கோமா' நிலையில் உள்ளன. மொத்தத்தில் கோலடி ஏரி ஆக்கிரமிப்பால், திருவேற்காடு சுகாதார சீர்கேட்டில் சிக்கி சீரழிந்து வருகிறது.


பொதுநல அமைப்புகள், பசுமை தீர்ப்பாயம் மூலம், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில் திருவேற்காடு கோவில் நகராக இருக்கும். இல்லாவிட்டால் குப்பை மேடு தான்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஏரிகளைப் பாதுகாப்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு, அயனம்பாக்கம் ஏரி, கண் முன்னால் உதாரணமாகத் திகழ்கிறது.

திருவேற்காடு கோலடி ஏரி மீட்கப்பட்டால், எதிர்காலத்தில், தண்ணீர் தேவைக்காக, திருவேற்காடு நகராட்சி, குடிநீர் வாரியத்திடம் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது. தேவையை, கோலடி ஏரியே நிறைவு செய்து விடும்.


அப்படி நாங்க சொல்லவே இல்லியே!

கோலடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு நகர்கள், வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக நமது நாளிதழில், 2015, டிச., மாதத்தில் செய்தி வெளியானது. அதையடுத்து நகராட்சியினர் அங்கு சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். அப்போது பகுதிவாசிகள், 'நாங்கள் வெள்ளத்தில் மூழ்கவில்லை. அப்படி பத்திரிகைகளுக்கு செய்தியும் கொடுக்கவில்லை' என, 'தெளிவாக' சொல்லி உள்ளனர். பாதிக்கப்பட்டதாக சொன்னால், ஏன், எப்படி என்ற கேள்விகள் எழும்; அதன் பின்னணியில் பல உண்மைகள் வெளிவரும் என்ற காரணத்தால், அவ்வாறு கூறினர். எனினும், வேறு வழியின்றி, நகராட்சியே தற்போது வெள்ளத்தை வெளியேற்றி வருகிறது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,இந்தியா
02-பிப்-201612:46:57 IST Report Abuse
Siva சிறந்த சமூக பணியாற்றும் தினமலர் க்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
J-Gun - chennai,இந்தியா
02-பிப்-201602:31:30 IST Report Abuse
J-Gun முகப்பேர் மேற்குக்கும் திருவேர்கட்டிற்கும் இடையில் மேல் அயனம்பாக்கம் அமைந்துள்ளது. இங்கே நிறையவே பள்ளிகள் அமைந்துள்ளன. விவேகானந்தா வித்யாலயா, வேலம்மாள் வித்யாலயா, வெங்கடேஸ்வர வித்யாலயா, நியூ centuri பள்ளி, அரசு பள்ளி என ஒரு கி மி வட்டத்துக்குள் பல பள்ளிகள் உள்ளன. இதே வட்டத்துக்குள் உள்ள அத்திப்பட்டு இன்டஸ்ட்ரியல் பகுதியில் நச்சு வாயுக்களை உமிழும் பல தொழிற்ச்சாலைகள் ஒரு புகை போக்கி கூட இல்லாமல் செயல் பட்டு வருகின்றன. இந்த தொழிற்ச்சாலைகளின் மறுபுறம் இண்டியா லேண்ட் ஐ டி பார்க் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
J-Gun - chennai,இந்தியா
02-பிப்-201602:21:00 IST Report Abuse
J-Gun தினமலருக்கு நன்றி. மேலும் இந்த பகுதியில் செங்கல் சூளைகள் அதிகம். அதற்கு தேவையான மண் எடுக்கப்பட்ட சுமார் 100 முதல் 150 அடி வரையான பள்ளங்கள் திருவேற்காடு முகப்பேர் சாலையில் உள்ளன. அந்த இடங்களில் எந்த வகையான தடுப்பு சுவர்களோ தடுப்புகளோ கிடையாது. இந்த பள்ளங்களில் முழுவதும் இப்போது நீர் நிறைந்துள்ளதால் வாகனங்கள் தவறி விழுந்தால் பேராபத்து நிச்சயம்.பல முக்கிய பள்ளிகள் இங்கே அமைந்துள்ளதால் பள்ளி வாகனங்களும் இந்த சாலையை அதிகம் பயன் படுத்துகின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X