திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளால், திருவேற்காடு கோலடி ஏரி முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது. ஏரியை மீட்காவிட்டால், எதிர்காலத்தில், திருவேற்காட்டின் பிற பகுதிகளும் சேர்ந்து வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
சென்னை அம்பத்தூர் அடுத்த திருவேற்காடு நகராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. 1.5௦ லட்சம் மக்கள் தொகை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முறையான அனுமதி பெறாத கட்டடங்கள் என, அனைத்து வகையிலும், நகராட்சி தாறுமாறாக வளர்ந்து வருகிறது.
கருமாரியம்மன் கோவில், ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர், 20க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான கோவில்கள், குறி சொல்லும் மேடைகள் ஆகியவற்றால், கோவில் நகர் என, திருவேற்காடு புகழ் பெற்றுள்ளது. சாதாரண நாட்களில், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நிலப்பரப்பில், கூவம் ஆற்றின் கரையோரம், மேடான இடத்தில் திருவேற்காடு உள்ளது. கருமாரியம்மன், வேதபுரீஸ்வரர் கோவில்களின் கிழக்கில், 210 ஏக்கர் பரப்பளவில், அயனம்பாக்கம் ஏரி உள்ளது. மேற்கில் கூவம் ஆறும், வடக்கில் கோலடி ஏரியும் உள்ளன.
நடவடிக்கை இல்லை
கடந்த, 2015, நவ., - டிச., மாதங்களில், நீடித்த பலத்த மழையால், ஆற்றின் கரையை ஒட்டிய ஆக்கிரமிப்பு வீடுகள், நகராட்சியின் தாழ்வான பகுதிகள் மற்றும் கோலடி ஏரிக்குள் ஆக்கிரமித்து உருவான அன்பு நகர் மற்றும் செல்லியம்மன் நகர் குடியிருப்புகள் மட்டுமே வெள்ளத்தில் சிக்கின.
அதிகபட்ச பாதிப்பு ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தான். வீடுகளை நோக்கி வெள்ளம் பாயவில்லை. ஏரிகள், நீர்போக்கு கால்வாய் தடங்களில் மட்டுமே வெள்ளம் பாய்ந்தது.
கூவம் ஆற்றை ஒட்டி உள்ள கோலடி ஏரி, 220 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதில், 33 கோடி கன அடி நீர் இருப்பு வைக்க முடியும்.
குளமாக மாறிய ஏரி
ஆனால், கடந்த, 10 ஆண்டுகளில், அந்த ஏரியின் பெரும்பகுதி குப்பை கொட்டுதல், தற்காலிக மற்றும் நிரந்தரக் குடியிருப்புகள், தீ விபத்தை ஏற்படுத்தும் முறையான அனுமதி பெறாத கிடங்குகள், சிறு தொழிற்சாலைகள் என, பல்வேறு ஆக்கிரமிப்புகளால் குளமாக சுருங்கி விட்டது.
ஏரிக்குள் அன்பு நகர், செல்லியம்மன் நகர்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில், 10 பிரதான தெருக்கள், 20 குறுக்குத் தெருக்கள் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் குடிநீர், தெரு விளக்கு, சிமென்ட் சாலை என, அனைத்து அடிப்படை வசதிகளும், நகராட்சி நிர்வாகத்தால் தாமதமின்றி நிறைவேற்றித் தரப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்பு உருவாகும்
தனியார் ஆக்கிரமிப்புகளுக்கு பாதுகாப்பாக, கோலடி சாலையை ஒட்டி அரசின் இரு ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவை செயல்பாட்டிலும் உள்ளன.
மிச்ச சொச்ச ஏரியிலும், எக்கச்சக்கமாக கருவேல மரங்கள் பல ஆண்டுகளாக வளர்ந்து வைரம் பாய்ந்து விட்டன. அவற்றை அகற்ற இதுவரை பொதுப்பணி துறையோ, உள்ளாட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏரிக்குள் ஆக்கிரமித்து உருவான நகர்கள், வெள்ளத்தில் மூழ்கியதால், அவர்களுக்கு உதவும் கையில், நகராட்சி மூலம், 50 குதிரைத் திறன் கொண்ட, மூன்று டீசல் மோட்டார்கள் கடந்த இரு மாதங்களாக இயக்கப்பட்டு வருகின்றன. ஏரி நீர், கூவம் ஆற்றில் விடப்படுகிறது. இன்று வரை ஓரிரு பிரதான தெருக்களில் மட்டும் வெள்ளம் வடிந்துள்ளது.
ஆக்கிரமிப்புக்கு உதவும் நகராட்சி