பசுவும், கன்றும் படுத்தும் பாடு!| uratha sindhanai | Dinamalar

பசுவும், கன்றும் படுத்தும் பாடு!

Added : ஜன 30, 2016 | கருத்துகள் (5)
Share
'உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், பார்லிமென்ட் இயற்றிய, 'தேசிய நீதிபதிகள் தேர்வு ஆணையம்' செல்லாது' என, உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டது. அதாவது, நீதித்துறை செயல்பாட்டில் அரசு தலையிட கூடாது என, கூறிவிட்டது.ஆனால், 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை காரணம் காட்டி, சோனியா, ராகுல் என்னும் இரண்டு நபர்களுக்காக,
பசுவும், கன்றும் படுத்தும் பாடு!

'உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், பார்லிமென்ட் இயற்றிய, 'தேசிய நீதிபதிகள் தேர்வு ஆணையம்' செல்லாது' என, உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டது. அதாவது, நீதித்துறை செயல்பாட்டில் அரசு தலையிட கூடாது என, கூறிவிட்டது.ஆனால், 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை காரணம் காட்டி, சோனியா, ராகுல் என்னும் இரண்டு நபர்களுக்காக, பார்லிமென்ட் செயல்படாமல் முடங்கிப் போய்விட்டது. நாட்டின் நலனில் அக்கறைக் காட்ட வேண்டிய காங்கிரஸ் எம்.பி.,க்கள், தங்கள் கட்சியின் தலைமை மீது அக்கறை காட்டத் துவங்கி விட்டனர்.

பத்திரிகை மூலம், சுதந்திரக் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், 1937ல், ஜவஹர்லால் நேருவால், 'அசோசியேட் ஜர்னல்ஸ்' எனும் தனி நிறுவனம் நிறுவப்பட்டு, 1938 முதல், நேஷனல் ஹெரால்டு என்னும் பத்திரிகை வெளிவரத் துவங்கியது. கடந்த, 2008ல், பத்திரிகை வெளியிடுவதை, 'அசோசியேட் ஜர்னல்ஸ்' நிறுத்தி விட்டது. எனவே, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையும் வெளிவரவில்லை. அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் வங்கி கடன், ஊழியர் சம்பளம் மற்றும் பிற கடன்கள், 90 கோடி ரூபாயை தாண்டியது. எனவே, 'அசோசியேட் ஜர்னல்ஸ்' நிறுவனத்திற்கு, 90 கோடி ரூபாயை, 2011ல் காங்., கட்சி, தன் கட்சி நிதியில் இருந்து கடனை அடைத்தது. இந்திய நிறுவனச் சட்டம், 1956ன் படி, 2002ம் ஆண்டு, 'யங் இந்தியன்' என்னும் நிறுவனம் துவங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் பிரிவு, 25ன் படி, இது லாப நோக்கமற்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மொத்த முதலீடு, 50 லட்சம் ரூபாய் மட்டுமே.யங் இந்தியன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நான்கு பேர், சோனியா, ராகுல், மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ். 'யங் இந்தியன்' நிறுவனத்தின் ஐந்தில் நான்கு பங்குகளுக்கு மேல், சோனியா மற்றும் ராகுல் வசமே உள்ளன.

'யங் இந்தியன்' நிறுவனம் கூட்டுறு சான்றிதழ் பெற்ற ஒரு மாதத்திற்குள், டிச., 21, 2010ல் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம், தன் பெயரில் உள்ள, 10 ரூபாய் முக மதிப்புள்ள ஒன்பது கோடி பங்குகளை, 'யங் இந்தியன்' நிறுவனத்திற்கு மாற்றியது.இதன் மூலம் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் வாழ்வு முடிந்து விட்டது. 10 ரூபாய் முக மதிப்புள்ள ஒன்பது கோடி பங்குகள் பெற்றதற்காக, 'யங் இந்தியன்' நிறுவனம், தன் முதலீட்டில் உள்ள, 50 லட்சம் ரூபாயை காங்., கட்சிக்கு செலுத்தி விட்டது.அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனச் சொத்துகள், காங்., கட்சிக்கும் சேராமல் அதன் பங்குதாரர்களுக்கும் சேராமல், 'யங் இந்தியன்' எனும் நிறுவனத்தின் கீழ் வந்து விட்டது.

டில்லி, மும்பை, லக்னோ போபால் மற்றும் அலகாபாத், இந்துாரில் உள்ள அசோசியேட் ஜர்னல்ஸ் சொத்து மதிப்பு, 2,500 கோடி வரை வரும் என்று கூறப்படுகிறது. டில்லியில் உள்ள, 'நேஷனல் ஹெரால்டு ஹவுஸ்' எனும் இடத்தின் மதிப்பு மட்டும் 1,500 கோடி ரூபாய்.ஒரு நிறுவனத்தை கட்டுப்படுத்த, 51 சதவீதம் பங்குகள் இருந்தால் போதும். இங்கு, 'யங் இந்தியன்' நிறுவனத்தின், 83.3 சதவீதம் பங்குகள் சோனியா, ராகுலிடம் உள்ளன.சோனியா - ராகுல் கட்டுப்பாட்டில் உள்ள லாப நோக்கம் இல்லாத, 'யங் இந்தியன்' எனும் நிறுவனம் தான், 'நேஷனல் ஹெரால்டு ஹவுஸ்' எனும் கட்டடத்தின் வாடகையை பெற்று வருகிறது.

டில்லியில், பிரதான இடத்தில் அமைந்துள்ள, 'நேஷனல் ஹெரால்டு ஹவுஸ்' கட்டடத்தின் முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில், பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது தளம், டி.சி.எஸ்., நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஐந்தாவது தளம், 'யங் இந்தியன்' நிறுவனத்தின் அலுவலகமாக உள்ளது. இதிலிருந்து மட்டும், 'யங் இந்தியன்' நிறுவனம் லட்சக்கணக்கில் மாத வாடகையை பெறுகிறது.'இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 29ஏ, 29பி, 29சி-ன் கீழ் ஒரு அரசியல் கட்சி, வர்த்தக ரீதியாக தன் நிதியை பயன்படுத்தக் கூடாது; எனவே, காங்., கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று, நவ., 1, 2012ல், தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார் சுப்பிரமணியன் சாமி.

கடந்த, 2012ல், சுப்ரமணியன் சாமி, ஜனதா கட்சியின் தலைவர்; அவர் அப்போது பா.ஜ., கட்சியில் இணையவில்லை. தேர்தல் ஆணையம், சுப்ரமணியன் சாமியின் மனுவை தள்ளுபடி செய்து விட்டது. எனவே, டில்லி மெட்ரோ பாலிடன் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் சுப்ரமணியன் சாமி. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 403, 406, 420 உடன் பிரிவு 120 பின்- கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில், முகாந்திரம் உள்ளதால், 'யங் இந்தியன்' நிறுவனம் உட்பட அதன் பங்குதாரர்களுக்கு, நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

'சட்ட ரீதியாக வழக்கை சந்திப்போம்' என்று கூறிய சோனியாவும், ராகுலும், டில்லி உயர் நீதிமன்ற உத்தரவிற்கு பின், தன் ஜால்ரா எம்.பி.,க்களுடன், பார்லிமென்டின் இரு அவைகளிலும் ரகளை செய்து, மக்களின் வரி பணம் வீணாக செல்கிறது.நிறுவன பதிவாளர் அலுவலக விவரத்தின்படி, ஜவஹர்லால் நேரு, இந்திரா, பெரோஸ் காந்தி, ஜி.டி.பிர்லா மற்றும் சரியான முகவரி இல்லாதவர்கள் தான் பங்குதாரர்களாக உள்ளனர். இவர்கள் பெயரில் உள்ள பங்குகள் இன்னும் மாற்றப்படவில்லை.அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடங்கள் மூலம், 'யங் இந்தியன்' நிறுவனம், மாத வாடகை மட்டுமே, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வரும்.

அதாவது, மஞ்சள் நோட்டீஸ், (ஐ.பி., எனும், 'இன்சல்வன்சி பெட்டிஷன்') கொடுப்பவனை விட மோசமாக, அதாவது, 100 ரூபாய்க்கு வெறும், 55 பைசா எனும் கணக்கில், 90 கோடி ரூபாய்க்கு, வெறும், 50 லட்சம் ரூபாய் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு ரூபாய் முதலீடுக்கு லாபம், 4,000 ரூபாய் கிடைத்துள்ளது. எனில், 50 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு, 'யங் இந்தியன்' நிறுவனத்திற்கு, 2,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் வெளியான உடன், பசுவையும், கன்றுவையும் காப்பாற்ற பார்லிமென்டை பயன்படுத்துகிறது காங்கிரஸ் கட்சி.

முந்திரா ஊழல், நகர்வாலா கொலை வழக்கு, போபர்ஸ் ஊழல், இத்தாலிய இடைத்தரகனை தப்பிக்க விட்டது. யூனியன் கார்பைட் நிறுவன தலைவர் வாரன் ஆன்டர்சனை தப்பிக்க விட்டது என்றும் அனுபவங்களை பெற்றுள்ள, காங்., கட்சி, '2ஜி' ஊழல் மற்றும் நிலக்கரி ஊழலில் பக்குவம் பெற்றுள்ள காங்., 'நேஷனல் ஹெரால்டு' வழக்கிலும், தன் அனுபவத்தை காட்ட துவங்கியுள்ளது.கொள்ளை அடிக்க வேண்டிய பலர், அரசியல் கட்சியை துவங்குகின்றனர் அல்லது அரசியல் கட்சியில் இணைகின்றனர். ஆனால், கட்சியை கொள்ளையடிப்பதே தலைவர்களுக்கு அழகா?குற்றச்சாட்டுகளை கூறுவோர், அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தர வேண்டும். வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார் என, 2012ல் கூறிய காங்., கட்சி, தற்போது, சம்மன் அனுப்பிய விசாரணை நீதிமன்றத்தின் முடிவு சரி என்று டில்லி நீதிமன்றம் கூறிய பின், உயர்நீதிமன்ற உத்தரவை, பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி, பசுவையும், கன்றையும் காப்பாற்ற பார்லிமென்டை நாசம் செய்கிறது காங்கிரஸ் கட்சி.
இ - மெயில்: asussusi@gmail.com

- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி -
வழக்கறிஞர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X