கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதி, கொளத்துார். இங்கு, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதிகள் உள்ளன. கொரட்டூர் ஏரியின் போக்கு கால்வாய், ரெட்டேரியின் உள்வாய் ஆகிய இரண்டுக்கும் இடையில் இருப்பது, கொளத்துார் வடமேற்கு பகுதி.
ஒவ்வொரு மழைக்கும் பாதிக்கப்படும் அந்த பகுதி கொளத்துார், 2015, டிச., மாத மழையில், மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, நமது நிருபர் குழு, அந்த பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், அதிர்ச்சிகரமான சில உண்மைகள் தெரியவந்தன.
வெள்ளம் சென்ற பாதை எவை?
l கொரட்டூர் ஏரியின் கலங்கலில் இருந்து புறப்படும் கொரட்டூர் கால்வாய், 4.5 கி.மீ., பயணித்து, ரெட்டேரிக்கு செல்கிறது. கால்வாயின் அகலம், 60 அடி. கனமழையின் போது, வெள்ளம் அந்த கால்வாய் வழியாக ரெட்டேரிக்கும், ஏரி அருகே உள்ள, கெனால் சாலை வழியாக, ஜவஹர்லால் நேரு 200 அடி நெடுஞ்சாலைக்கும் பாய்ந்தது.
புழல் ஏரியில் இருந்து, கீழ்ப்பாக்கத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களை மாற்றி, கான்கிரீட் பெட்டக வடிவிலான பாதை அமைக்கும் பணி, கெனால் சாலையின் வடபகுதியில் நடந்து வருகிறது. பெட்டகங்கள் பதிக்கப்பட்ட இடம் கால்வாய் போல இருந்ததால், அந்த வழியாகவே வெள்ளம், 200 அடி நெடுஞ்சாலைக்கு சென்றது
l இதன் பிறகு தான், பிரச்னை துவங்குகிறது. 200 அடி நெடுஞ்சாலை, 1990களில் அமைக்கப்பட்டது. அதன் பின், சாலை, ஒரு மீ.,க்கும் அதிகளவில் மட்டம் உயர்த்தப்பட்டது. விளைவாக, 20க்கும் அதிகமான நகர்களைக் கொண்ட கொளத்துாரின் வடமேற்கு பகுதி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகள், தாழ்வானவையாக மாறிவிட்டன
l நெடுஞ்சாலையின் மேற்கு பக்கம், மழைநீர் வடிகால் உள்ளது. கிழக்கு பக்கம், வில்லிவாக்கம் ஏரியில் இருந்து, கொளத்துார் ஏரிக்கு செல்லும் பெரிய கால்வாய் உள்ளது. சில இடங்களில் அது மழைநீர் வடிகாலாக குறுக்கப்பட்டுள்ளது
l நெடுஞ்சாலையின் மேற்கு பக்கம் செல்லும் மழைநீர் வடிகால், குறைந்தது, 20 அடி அகலமாவது இருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் வெறும், 5 அடி மட்டுமே உள்ளது. அது நெடுஞ்சாலைக்காக கட்டப்பட்டது என்பதை வாதத்திற்காக ஒப்புக் கொண்டாலும் கூட, ரெட்டேரியில் இணையும் இடத்தில், மழைநீர் வடிகால், 10 அடிக்கும் அகலமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது
l மேலும், கெனால் சாலை சந்திப்பு முதல், ரெட்டேரி வரை, எங்கெல்லாம் அகலமாக மழைநீர் வடிகால் இருக்கிறதோ அங்கெல்லாம், வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வடிகாலின் ஓரத்தில், குடிநீர் வாரியத்தின் பெரிய குழாயும் செல்கிறது. குழாய் இருப்பதே தெரியாத அளவிற்கு, பல கட்டடங்கள் ஆக்கிரமித்து எழுப்பப்பட்டுள்ளன. இது குடிநீர் வாரியத்திற்கு தெரிந்தே தான் நடந்திருக்க வேண்டும்
l கெனால் சாலை கால்வாய், நெடுஞ்சாலையைக் கடந்து, எதிர்ப்புறம் தாதங்குப்பம் வழியாக, வில்லிவாக்கத்தைத் தாண்டி, அண்ணாநகர், 6வது பிரதான சாலை வழியாக செல்லும் ஓட்டேரி கால்வாயில் கலக்க வேண்டும்
l தற்போது, நெடுஞ்சாலையைக் கடந்த உடனே, சிறிது துாரம் கால்வாய் செல்கிறது. அங்கு, வில்லிவாக்கம் ஏரியில் இருந்து வரும் கால்வாயுடன் கலக்கிறது. அங்குள்ள சிறுபாலம் தான், கால்வாய் இருப்பதற்கான அடையாளம். அத்தோடு சரி. அதன்பின், கால்வாயைக் காணவில்லை. குடியிருப்புகள் தான் உள்ளன. நெடுஞ்சாலையைக் கடக்கும் சிறுபாலத்தின் கீழும், கால்வாயில் குப்பை குவிந்து கிடக்கிறது
l கொளத்துாரின் வடமேற்கு பகுதி, நெடுஞ்சாலையில் இருந்து தாழ்வானதாக இருப்பதாலும், பகுதி மழைநீர் வடிகாலின் மோசமான வடிவமைப்பு மற்றும் மோசமான தரத்தாலும், வெள்ளம், நெடுஞ்சாலைக்கு வர முடியாமல், அந்தந்த பகுதிகளிலேயே தேங்கி விட்டது
l மழைக்கு பின், விவேகானந்தா நகர் பிரதான சாலையில் இருந்து, வீனஸ் நகர் பகுதி வரை உள்ள, 200 அடி நெடுஞ்சாலையில், மழைநீர் வடிகாலின் மீதிருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி மண்டல அதிகாரிகள் அகற்றினர். ஆனால், அதே வழியில், வடிகாலை மறித்து கட்டப்பட்டுள்ள 'செல்வி ஓட்டலின்' பாதை மட்டும் விட்டு வைக்கப்பட்டது. அது, பகுதி அ.தி.மு.க., பிரமுகருக்குச் சொந்தமானது. மேலிடத்து அழுத்தத்தால், அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என, கூறப்படுகிறது. விளைவாக, அந்த ஓட்டலை அடுத்து, வடிகாலின் மீதுள்ள எந்த ஆக்கிரமிப்பையும் அகற்ற முடியாமல் போய்விட்டது
l ரெட்டேரி அருகே, நெடுஞ்சாலை ஓரம், மழைநீர் வடிகால் கலக்கும் மிகப் பெரிய கால்வாய் தற்போது மோசமான ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. அதில், கண்ணகி நகர் என்ற பகுதி உருவாகியுள்ளது. அங்கு, ஒரு மனை, 5 லட்சம் ரூபாய் வீதம் விற்கப்பட்டு, 200 வீடுகள் உருவாகி உள்ளன. இந்த ஆக்கிரமிப்பாலும், வெள்ளம் ரெட்டேரிக்குள் செல்ல முடியாமல், கொளத்துார் வடமேற்கு பகுதிக்குள் புகுந்தது. இன்று வரை இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. காரணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டணி.
என்ன செய்ய வேண்டும் ?
l பாடி மேம்பாலம் இறக்கத்தில் இருந்து, திருவள்ளுவர் நகர் வரை உள்ள 3 கி.மீ., துாரத்திற்கு, 200 அடி சாலையில், குடிநீர் வாரிய குழாய்கள், மழைநீர் வடிகால் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட வேண்டும். அதன்பின், மழைநீர் வடிகால், அகலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்பட வேண்டும்
l ஆக்கிரமிப்பில் உள்ள ரெட்டேரி கால்வாய் மீட்கப்பட வேண்டும். இவை நடந்தால், எதிர்காலத்தில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், ரெட்டேரிக்கு இயல்பாகச் சென்றுவிடும்.
பாதிக்கப்பட்ட பகுதிகள் எவை?
திரு.வி.க., நகர் மண்டலம், 65வது வார்டில் உள்ள கொளத்துார் பகுதி யில், பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், உசைன் காலனி, ராஜிவ்காந்தி நகர், டாக்டர்ஸ் காலனி, விவேகானந்தா நகர், வீனஸ் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
- நமது நிருபர் குழு -