எந்த ஏரியையும் ஆக்கிரமிக்காமல், எந்த போக்குக் கால்வாயையும் அபகரிக்காமல், வயல் வெளியாக இருந்து இப்போது குடியிருப்பாக மாறி உள்ள சிட்லபாக்கத்தின் தென் பகுதி, சமீபத்திய வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் வெள்ளக் காடாக மாறியது ஏன்? சி.எம்.டி.ஏ.,வால்
முறையாக அங்கீகரிக்கப்பட்ட அந்த குடியிருப்பு சாலைகளில், காட்டாறு போல வெள்ளம் பாய்ந்து ஓட யார் காரணம்?
சென்னையின் புறநகர் பகுதிகளில் பல்லாவரம், தாம்பரம், செம்பாக்கம் ஆகிய மூன்று நகராட்சிகளுக்கு நடுவில் சிட்லபாக்கம் அமைந்து உள்ளது.இதன் தென் கிழக்கு பகுதியில் பாபு தெரு, பாம்பன் சுவாமிகள் தெரு, திருமகள் நகர், இந்திரா நகர், லட்சுமி நகர், பாரத் அவென்யூ போன்ற பகுதிகள், ௨௦௧௫, நவ., - டிச., மாதங்களில் வெள்ளத்தில் மூழ்கின. சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதில் அந்த பகுதி வழியே சென்ற ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
நீர் வரத்து எப்படி?சிட்லபாக்கம் ஏரி, சேலையூர் ஏரி, செம்பாக்கம் ஏரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி ஆகியவற்றின் மத்தியில் அமைந்துள்ள பகுதியின் ஒரு பாகமே சிட்லபாக்கத்தின் தென்கிழக்கு பகுதி.
இங்குள்ள சிட்லபாக்கம் ஏரிக்கு, பச்சைமலை, சானடோரியம் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் வந்து சேரும். ஏரி நிரம்பினால் அதன் உபரிநீர் ராமகிருஷ்ணாபுரம் வழியாக, சிட்லபாக்கத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்கள் வழியாக செம்பாக்கம் ஏரிக்கு செல்லும்.
இதே போன்று, கிழக்கு தாம்பரத்தில் உள்ள விமானப் படைத் தளம், சென்னை கிறிஸ்தவ கல்லுாரி வளாகங்களில் இருந்து, மழைநீர் சேலையூர் ஏரிக்கு வரும்.
இதில் சிட்லபாக்கம் ஏரிக்கு வரும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைந்து விட்டதால், அதில் இருந்து வெளியேறும் உபரிநீரின் அளவும் குறைந்துவிட்டது.ஆனால், சேலையூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் வெகுவாக அதிகரித்து உள்ளதால், சென்னை கிறிஸ்தவ கல்லுாரி, விமானப் படைத்தளம் ஆகியவற்றில் இருந்து வரும் நீரை, ஏரிக்கு உள்ளேயே செல்ல ஆக்கிரமிப்பாளர்கள் அனுமதிப்பதில்லை. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், ஆக்கிரமிப்பாளர்கள், தாம்பரம் நகராட்சியின் உதவியுடன், சேலையூர் ஏரிக்கு வரும் மழைநீரை சிட்லபாக்கம் வழியாக திருப்பி விடுகின்றனர்.
போக்கு கால்வாய் எங்கே?சேலையூர் ஏரிக்கு இயல்பான போக்கு கால்வாய், சேலையூர் காவல் நிலையம் அருகில், தாம்பரம் - வேளச்சேரி சாலையின் குறுக்காக சென்று, செம்பாக்கம் ஏரிக்கு செல்ல வேண்டும்.சேலையூர் காவல் நிலையம் அருகில் இருந்து, 10 மீ., துாரத்திற்கு மட்டுமே இந்த போக்கு கால்வாய் உள்ளது. அங்கு உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை தாண்டிச் சென்று பார்த்தால், ஈஸ்வரி நகர் விரிவு பகுதியில், கால்வாய் இருந்த பகுதியில் ஆறு அடி அகலத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்வாயின் மேற்பகுதி மூடப்பட்டு உள்ளதால், அதையும் அருகில் உள்ள போக்கு கால்வாயின் பகுதிகளையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.இந்த மழைநீர் வடிகாலும், 50 மீ., துாரம் வரையே செல்கிறது. புதர் மண்டிய ஒரு காலி நிலம் குட்டையாக உள்ளது. அதன் இறுதியில், சேது நாராயணா சாலை, வைத்தியலிங்கம் சாலை, பிள்ளையார் கோவில் தெரு ஆகியவற்றின் வழியாக, சேலையூர் ஏரியின் போக்கு கால்வாய் செல்ல வேண்டும்.ஆனால், ஈஸ்வரி நகர் விரிவு பகுதிக்கு அப்பால், இந்த போக்கு கால்வாய், சுவடே இன்றி மறைக்கப்பட்டு அடுக்குமாடி
குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
திருப்பம்:குறிப்பாக, சேது நாராயணா சாலை இறுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்ட பின், அந்த பகுதியில் ஏற்பட்ட தடை காரணமாக, வெள்ளம், அருகில் உள்ள பாரதி தெரு, பாம்பன் சுவாமிகள் தெரு வழியாக செல்ல நேர்ந்தது.இதில், 60 சதவீதம் பாம்பன் சுவாமிகள் தெரு வழியாகவும், 40 சதவீதம், மாணிக்கவாசகர் தெரு, தேனுபுரீஸ்வரர் தெரு, மனோன்மணியம் தெரு, வைத்தியலிங்கம் தெரு வழியாகவும் சென்றது.
இந்த பகுதிகளை ஒட்டி உள்ள, சொக்கநாதர் தெரு, மறைமலை அடிகள் தெரு, தாகூர் தெரு ஆகிய பகுதிகள் வழியாகவும் வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் பின், பாபு தெரு, திருமகள் நகர், இந்திரா நகர், லட்சுமி நகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.பொதுவாக அதிக மழை பெய்தால்,
அங்குள்ள மழைநீர் வடிகால்களில் நிரம்பி சில மணிநேரம் மட்டுமே சாலைகளில் வெள்ளம் ஓடும். ஆனால், இந்த முறை, தொடர்ந்து, 20 நாட்களுக்கும் மேலாக, அந்த பகுதி சாலைகள் வெள்ளக் காடாகவே காட்சியளித்தன.
காரணம் என்ன?சேலையூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது, ஏரியின் போக்கு கால்வாயை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, தாம்பரம் நகராட்சியும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும் துணை போனது ஆகியவை தான், சிட்லபாக்கம் வெள்ளக்காடாக மாற முக்கிய காரணம் என்பது, கள ஆய்வில் தெரியவந்தது.மேலும், போக்கு கால்வாய் பகுதியை, நிலப் பயன்பாடு மாற்றம் என்ற பெயரில் பயன்பாடு மாற்றி கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளித்த வருவாய் துறையும், பொதுப்பணி துறையும் தான் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
இந்த பிரச்னைக்கு முழு முதற்காரணமாக உள்ள, தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் இதை, சிட்லபாக்கம் பேரூராட்சியின் பிரச்னையாக திசை திருப்பி வருவதும், தெரியவந்து உள்ளது.
தீர்வு என்ன?l சேலையூர் ஏரி அதன் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்கும் அளவுக்கு
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, துார்வாரி மேம்படுத்தப்பட வேண்டும்.
சேலையூர் ஏரியின் போக்குக் கால்வாய்களை முழுமையாகக் கண்டுபிடித்து அதன் பழைய நிலையை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், சேலையூர் ஏரியின் உபரிநீர் செம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையில், தாம்பரம் - வேளச்சேரி சாலை ஓரத்தில் ராட்சத குழாய்கள் பதித்து உரிய வழியை ஏற்படுத்த வேண்டும்.
சேது நாராயணா சாலையில் இருந்து வெள்ளம், பாம்பன் சுவாமிகள் சாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு வருவதை தடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, எதிர்காலத்தில், சிட்லபாக்கத்தின் தென்கிழக்கு பகுதியை வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.இது தொடர்பான கோரிக்கை மனுக்களை, சிட்லபாக்கம் குடியிருப்போர் சங்கங்களின் பிரதிநிதிகளும், கூட்டமைப்பு பிரதிநிதிகளும் அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால், பலன் தான் இதுவரை இல்லை. - நமது நிருபர் -