"இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு, போலீஸ் கமிஷனருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க...'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
அவளுக்கு சூடா, வெங்காய பஜ்ஜி, இஞ்சி டீ கொடுத்து உபசரித்த சித்ரா, "போலீஸ் அதிகாரின்னா, முக்கியத்துவம் கொடுக்கத்தானே செய்வாங்க, இதுல என்ன விஷேசம்,'' என, இழுத்தாள்.
"சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாக்கள்ல, கலெக்டருக்கும், எஸ்.பி.,க்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. மாநகர போலீஸ் கமிஷனர், சிறப்பு விருந்தினரா கலந்துட்டு போயிடுவாரு. புதுசா வந்திருக்கிற கலெக்டர், சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவுல, மாநகர போலீசாருக்கு, நற்சான்று வழங்கி பாராட்டும்போது, கமிஷனர் மஞ்சுநாதாவையும் பக்கத்துல வரச்சொன்னார். அவர் வந்தபிறகே, நற்சான்று வழங்குனாங்க. சிலருக்கு, அவரது கையால நற்சான்று கொடுக்க வச்சு, கை தட்டியிருக்காங்க. இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு, கமிஷனருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால, போலீசார் "குஷி'யாகிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
"இது ஒரு புதுக்கூட்டணியா இருக்கே,'' என, சித்ரா கேட்க, ""என்னக்கா, புரியலையா? தேர்தல் சமயத்தில், இந்த ரெண்டு அதிகாரிகளும் இட மாறுதலாகி வந்திருக்காங்க. மாவட்டத்தை புரிஞ்சுக்கணும்; மக்கள் பழக்க வழக்கம்; அரசியல்வாதிகளின் "ஸ்டைல்'; ஊழியர்களின் போக்குன்னு எல்லாத்தையும் கணிச்சு, களத்துல இறங்கணும். நெருக்கடி ஏற்படுற சமயத்துல, பக்கபலமா இருக்கணுமே. அதனால, ரெண்டு அதிகாரிகளும் கரம் கோர்த்திருக்காங்க. தேர்தல் சமயத்துல, இவங்களோட நுணுக்கமான வேலை வெளிச்சத்துக்கு வரும்,'' என்றாள் மித்ரா.
"தேர்தல் ஜூரம் ஆரம்பிச்சிருச்சே. நம்மூர் தேர்தல் செய்தி ஏதுமில்லையா,'' என, ஆவலுடன் கேட்டாள் சித்ரா.
"ஆளுங்கட்சிக்காரங்க, தனியாத்தான் போட்டியிடுவாங்க போலிருக்கு. ஒப்புக்காக முதல்வர் பெயரிலும், ஆசை கனவிலும், வடக்கு, தெற்குன்னு, ரெண்டு தொகுதிக்கும் பலரும் விருப்ப மனு தாக்கல் செஞ்சுட்டு வந்திருக்காங்க. ஆளும்கட்சி தனித்து நின்னா, நமக்கு "ரிசல்ட்' எப்படி இருக்கும்னு, தி.மு.க., - தே.மு.தி.க., - மக்கள் நலக்கூட்டணி கட்சிக்காரங்க, ஓட்டு கணக்கு போட்டு பார்க்குறாங்க. கடந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்களை வைத்து, கூட்டி, கழிச்சுப்பார்க்குறாங்க. கட்சி வித்தியாசம் பார்க்காம, ஒருத்தருக்கு ஒருத்தர் விசாரிச்சுட்டு இருக்காங்க.
"எப்படியாவது ஜெயிக்கணும்னு, ஆளுங்கட்சியும், தி.மு.க.,வும் நெனைக்குது. மக்கள் நல கூட்டணிக்காரங்களோ, "எங்களுக்கு வெற்றி முக்கியமல்ல; இரு தரப்புக்கும் நெருக்கடி கொடுப்பதே நோக்கம்'னு வெளிப்படையாகவே பேசிட்டு இருக்காங்க. வடக்குல கரை சேர்றது கஷ்டமா இருக்கும்கிறதுனால, ம.தி.மு.க.,வுக்கு தள்ளி விட்டுட்டு, "சிட்டிங்' தொகுதியான, தெற்கு தொகுதியில் களமிறங்கி, எதிரணிகளுக்கு ஆட்டம் காட்டணும்னு, கம்யூ., கட்சிக்காரங்க தீர்மானாம இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"அதெல்லாம் சரி, த.மா.கா.,ன்னு ஒரு கட்சி இருக்கே. அடிக்கடி, நம்மூர்ல ஏதாவது ஒரு போராட்டம் செஞ்சுக்கிட்டு இருக்காங்களே. அவுங்களும் களமிறங்கப் போறாங்களா,'' என, அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.
"அவுங்களுக்கு ஓட்டு வங்கி பெரிசா இல்லை. மாநில இளைஞரணி தலைவரா இருக்கறவரின் மாமனார் வீடு, திருப்பூர்ல இருக்கு. அதனால, கட்சி போராட்டம் நடந்தா, தவறாம கலந்துக்கிறாரு அல்லது மாமனார் வீட்டுக்கு வரும்போது, கட்சிக்காரங்க போராட்டம் நடத்துறாங்க. அவ்ளோ தான் விஷயம்,'' என, போட்டு உடைத்தாள் மித்ரா.
"ஆடு மேய்த்தது போலாச்சு; அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது போலாச்சுன்னு, இதைத் தான் சொல்வாங்களா?'' என, கிண்டலடித்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE