கணவனே கண்கண்ட தெய்வமா! - என்பார்வை| Dinamalar

கணவனே கண்கண்ட தெய்வமா! - என்பார்வை

Added : பிப் 04, 2016 | கருத்துகள் (4)
 கணவனே கண்கண்ட தெய்வமா! - என்பார்வை


அன்றாட செய்திகளைப் படித்தால், பார்த்தால் கணவனுக்கு மனைவி மீது சந்தேகம், மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை. கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவனைக் கொன்றாள் காதல் மனைவி. மனைவி கொலை, கள்ள காதலனுக்கு தொடர்பா?, பெண் கொலையில் மர்மம்!
கள்ளக்காதலா? என்ற செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பது மனதை அவ்வளவாக பாதித்ததில்லை.ஆனால் ஒரு ஐந்து ஆண்டுகளாக நெருங்கிய தோழியிடம், பக்கத்து வீட்டில், அடுத்த தெருவில், ஏன் நம்முடைய நெருங்கிய சொந்தத்தில் இவ்விஷயங்கள் நடந்தேறிய போது மனதை மிகவும் பாதிக்க தொடங்கியது.
எனது தோழி திடீரென்று தற்கொலை செய்து கொண்டாள். விசாரித்ததில் அவளுக்கு ஒருவருடன் கள்ளக்காதல். குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்ததால் தற்கொலை செய்து கொண்டாளாம். இரண்டு குழந்தைகளின் நிலை என்னவாயிற்று என்ற கவலை அவளுக்கு இல்லையா?
தமிழ் பாரம்பரியம்
பீப் பாடலா... உடனே வெகுண்டு எழுகிறோம். ஜல்லிக் கட்டு நடக்கவில்லையா... தமிழ் பாரம்பரியம் என்ன ஆயிற்று என்று பதறுகிறோம்.
ஆனால் மேற்சொன்ன விஷயங்கள் தொடருமானால்... ஒன்று ஐந்தாகி, ஐந்து பத்தாகி, பத்து நுாறானால்...'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கலாசாரம் மாறினால் என்னவாகும் தமிழ் பாரம்பரியம். சரி இன்று தானே இந்த நிலைமையா,
அல்லது முன்பும் இதே நிலைமைதானா. இப்போது ஜனத்தொகை பெருக்கத்தாலும், தொலைக்காட்சி, செய்திதாள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலமாக இவை பூதாகரமாக தெரிகிறதா?கற்பு என்பது கல்வி சார்ந்த ஒன்றாக, அதன் ஊடாக வாழுகின்ற ஒழுக்கம், வலிமை, ஞானம் என்பதற்காகத் தான் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கற்பை இழப்பது என்பது, கற்பதன் ஊடாக வருகின்ற ஒழுக்கத்தை, ஞானத்தை, வலிமையை
இழப்பது தான். கற்பு என்பது இலக்கியங்களை பொறுத்தவரை கல்வி சார்ந்தது. உடல் சார்ந்தது அல்ல. கற்பை யாரும் பலவந்தமாக அழிக்க முடியாது.
களவொழுக்கம் திருமணத்திற்கு முன்னரே ஆணும், பெண்ணும் காதல் புரிந்து ஆணிடம் பெண் தன்னை இழப்பது களவொழுக்கம். இந்த களவொழுக்கத்திற்கு பிறகு இருவரின் உறவையும் பெரியவர்கள் உறுதிப்படுத்தி, ஊரார் முன்னிலையில் திருமணம் செய்து வைப்பார்கள். இந்த ஒழுக்கத்தையும், அதாவது இந்த களவொழுக்கத்தையும் கற்பு என்பார்கள். சரி கற்பு, களவொழுக்கம், கற்பை இழப்பது இப்படியென்றால், திருமணம் செய்த பெண் வேறொரு ஆணிடம் தன்னை இழப்பது... தாலி கட்டிய கணவனுக்கு துரோகம் செய்து விட்டு அடுத்த ஆணுடன் செல்வது, பழகுவது பற்றி இலக்கியங்களும், புராணங்களும் என்ன சொல்கின்றன.
பிறன் மனை நோக்கல்
வேதங்கள் உள்ளிட்ட புராணங்களும் 'பிறன் மனை நோக்காதே' அதாவது ஆண் மகனாகிய நீ பிறருடைய மனைவியை பார்க்காதே. மனதளவில் கூட நினைக்காதே என்கிறது. அக்காலத்தில், கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களைப் பற்றி எதுவும் கூறவில்லையா அல்லது அதைப்பற்றி கூறும் தைரியமில்லையா அல்லது அக்கால பெண்கள் நுாறு சதவீதம் கற்புக்கரசிகளாக இருந்தார்களா.
கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்தார்களா. இந்த நிலைமை எந்த நுாற்றாண்டில் மாறியது. புராணங்கள், இதிகாசங்கள் கூறுவது இருக்கட்டும் குடும்பத்தலைவிகளாகிய நம் கருத்து என்ன...
''ஒருவருக்கே வாழ்க்கைப்பட்டு, பல துன்பங்களை அனுபவித்த கண்ணகி, கற்புக்கரசி என்றால்... என் கணவரிடம் இல்லற சுகத்தை அனுபவிக்க முடியவில்லை. போதிய பணம் இல்லை; எதற்கும் பற்றாக்குறை. தினமும் என்னை சந்தேகப்பட்டு அடி, உதை வாங்குகிறேன். தினமும் 24 மணி நேரமும் குடிக்கிறார். ஒரு கணவன் காட்டக்
கூடிய பாசம், அன்பில் சிறு துளி கூட காட்டவில்லை. நான் வேறு என்ன செய்வேன்'' என்கிறீர்களா. பாதிப்புக்கு எல்லையில்லை ஒரு சில நிமிடங்கள் உங்களையும் உங்களை சார்ந்த பிறந்த வீடு, புகுந்த வீட்டை நினைத்துப் பாருங்கள். அந்த இரண்டு குடும்பங்களின் கவுரவம் இந்த சமுதாயத்தில் எந்த அளவு பாதிக்கப்படும். அடுத்த மிக முக்கியமான விஷயம் உங்கள் குழந்தைள். சிறு வயதில் அந்த குழந்தைகளின் வேதனை, எவ்வளவு
அவமானச் சொற்கள், சமூகத்தில் எந்த குற்றமும் செய்யாத அவர்கள், இவ்வளவு வேதனைகளை சுமக்க வேண்டுமா.தன்னை பெற்ற தாயே, தங்களை அசிங்கப்படுத்திவிட்டு சென்றால் அந்த குழந்தைகளின் மனநிலை என்னாவது. தாயும், தந்தையும் உயிருடன் இருந்தும் அனாதைகளாகிவிடாதா அந்த குழந்தைகள். அல்லது தற்கொலையும், கொலையும்
நடந்தேறினால் அவர்களின் எதிர்காலம் என்னாவது? எதற்கும் தீர்வுகள் உண்டு 'ஐவருக்கும் பத்தினி அழியா கற்புடையாள்' என ஐந்து பேரை மணமுடித்தாலும் திரவுபதி பத்தினி தானே. யார் என்ன சொன்னாலும் நான் அடுத்த ஆணுடனான உறவை விடமாட்டேன் என்றால்... நீங்கள் என்ன செய்ய வேண்டும்.
முறைப்படி கணவரிடமிருந்து விவாகரத்து பெறுங்கள். குழந்தைகளுக்கு எதிர்காலத்தேவைகள் என்ன. அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளை மனதளவில் தயார்
படுத்திவிட்டு அந்த வேறொரு ஆணை முறைப்படி திருமணம் செய்து கொண்டு சமுதாயத்தில் சந்தோஷமாக வாழுங்கள். தவறான ஒரு உறவை சரியான ஒரு உறவாக மாற்றுங்கள். தலைநிமிர்ந்து வாழுங்கள். ஆனால் இதற்கு பதிலாக கொலைகளும், தற்கொலைகளும் ஒருபோதும் தீர்வாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- அமுதா நடராஜன்மனநல பயிற்றுனர், மதுரை.r_amudha@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X