வேண்டியதை சாப்பிடுங்க, விரும்பியதை கொடுங்க...| Dinamalar

வேண்டியதை சாப்பிடுங்க, விரும்பியதை கொடுங்க...

Updated : பிப் 05, 2016 | Added : பிப் 05, 2016 | கருத்துகள் (9) | |
வேண்டியதை சாப்பிடுங்க, விரும்பியதை கொடுங்க... நான் எழுதும் பல நிஜக்கதைகளின் பின்னனியில் பெருமைக்குரிய பல வாசகர்களின் பங்களிப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட வாசகர்களில் ஒருவர்தான் சிங்கப்பூர் மோகன்ராஜ். மதுரையில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்கிறார் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே இன்று யாருக்கு உதவலாம் என்ற எண்ணத்துடன்தான் எழுந்திருப்பார். இன்னும்
வேண்டியதை சாப்பிடுங்க, விரும்பியதை கொடுங்க...


வேண்டியதை சாப்பிடுங்க, விரும்பியதை கொடுங்க...


நான் எழுதும் பல நிஜக்கதைகளின் பின்னனியில் பெருமைக்குரிய பல வாசகர்களின் பங்களிப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட வாசகர்களில் ஒருவர்தான் சிங்கப்பூர் மோகன்ராஜ்.

மதுரையில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்கிறார் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே இன்று யாருக்கு உதவலாம் என்ற எண்ணத்துடன்தான் எழுந்திருப்பார்.

இன்னும் நாங்கள் இருவரும் ஒருவர் ஓருவர் சந்தித்தது இல்லை அவ்வளவு ஏன் இன்னும் புகைப்பட பரிமாற்றம் கூட கிடையாது ஆனால் போன் மூலமாகத்தான் தொடர்பு ஆரம்பித்தது. மக்களின் ஜனாதிபதியான அப்துல்கலாமின் பெயரில் அமைந்த நற்பணி மன்றம் மூலம் பலருக்கு அங்கே உதவிவருகிறார் என்பதால் மதிப்பு ஏற்பட்டது.சுதந்திர போராட்ட வீரர் தனஷ்கோடி ராஜா-பூபதி தனுஷ்கோடி தம்பதியரின் மகன் என்பது தெரிந்தபிறகு அவர் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது.கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எங்கள் இருவருக்கிடையிலான அன்பு ஆழமாக ஒடிக்கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு நிஜக்கதையையும் படித்துவிட்டு விரிவான விமர்சனம் தருவார் நிஜக்கதைகளில் இடம் பெற்றவர்களிடம் போன் பேசி உற்சாகப்படுத்துவார், வெளியில் சொல்லிக்கொள்ளாமல் சம்பந்தபட்ட நிஜக்கதை நாயகர்களுக்கு முடிந்தவரை உதவுவார்,இவரது உதவி பெற்றவர்கள் சொல்லித்தான் எனக்கு இவர் உதவியதே தெரியுமே தவிர இவராக சொன்னது கிடையாது.

தான் படித்த கேள்விப்பட்ட நியாயமான நிதர்சனமான விஷயங்களை பேசலாமா சார்? என்று கேட்டு பகிர்ந்து கொள்வார்.அப்படி முளைத்த நிஜக்கதைகள் பல உண்டு.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன்

சிங்கப்பூர் இவருக்கு இரண்டாவது தாய்வீடு எனலாம் அங்குள்ள பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வார் அப்படி அவர் பகிர்ந்துகொண்ட விஷயம்தான் அங்குள்ள அன்னலட்சுமி ரெஸ்டராண்ட். இங்குள்ளவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு தாயன்போடு தமிழக உணவை அதே சுவையுடன் அளித்துவருகிறது.

எல்லா ஒட்டல்களும் அதைத்தானே செய்கிறது இதில் அன்னலட்சுமி என்ன விசேஷம் என்று கேட்ட போது, இந்த ஒட்டலில் வேண்டியதை வேண்டியவரை சாப்பிடலாம் எந்த உணவிற்கும் இங்கு விலையில்லை கிளம்பும்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அவ்வளவு கொடுத்தால் போதும் இதுதான் விசேஷம் என்றார்.

ஆச்சரியமாக இருந்தது ஒட்டல் நிர்வாகத்தை பார்த்துக்கொள்ளும் சுரேஷ் கிருஷ்ணன் என்பவரிடம் பேசி மேலும் தெரிந்துகொண்ட விஷயத்தின் சுருக்கமாவது.

இதை 1986-ம் ஆண்டு இந்த உணவகத்தை ஆரம்பித்துவைத்தவர் சுவாமி சிவானந்தா ஆவார்.

வாழ்க்கையில் யாருக்கு எவ்வளவு பொன்னும் பொருளும் கொடுத்தாலும் இன்னும் இன்னும் என்று மனசு எதிர்பார்க்கும் ஆனால் சாப்பாடு விஷயத்தில் மட்டும் வயிறு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது.

வயிறு நிறைந்து மனசும் நிறைந்து போதும் போதும்னு சொல்வாங்க, இந்த சந்தோஷம் சாப்பிடறவங்களுக்கு மட்டும் இல்லை சாப்பாடு போடுறவங்களுக்கும் கிடைக்கும் என்பதுதான் முக்கியம்.

சிங்கப்பூரின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன உணவகமாக்கினார்.அந்த வகையில் அன்னலட்சுமி ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் சென்ட்ரல் ஸ்கொயர் பகுதியில் இயங்கும் இந்த சைவ உணவகத்தில் தமிழக சாப்பாடு அனைத்தும் தமிழ்நாட்டின் அதே சுவையுடன் மதியமும் இரவும் கிடைக்கும்.

சாப்பாடு சாம்பார் மோர்குழம்பு ரசம் தயிர் பாயசம் காய்கறி கூட்டு என பல விதங்களில் பல ரகங்களில் சுடச்சுட வைத்திருப்பார்கள், 'பூபே' முறையில் வரக்கூடிய விருந்தினர்கள் வேண்டியதை தட்டில் எடுத்துப்போட்டு சாப்பிட்டுக்கொள்ளலாம்,கிளம்பும் போது கல்லாவில் இருப்பவர் நீங்கள் ஒரு டாலர் கொடுத்தாலும் சரி பத்து டாலர் கொடுத்தாலும் சரி நுாறு டாலர் கொடுத்தாலும் சரி புன்னகையுடன் கூடிய வணக்கத்தை செலுத்தி வாங்கிக்கொள்வார்.

எதுவும் கொடுக்கவிட்டாலும் கேட்பது இல்லை ஆனால் இங்கு வரக்கூடியவர்கள் யாரும் பணம் கொடுக்காமல் போவது இல்லை இப்படி கொடுக்கப்படும் பணத்தை வைத்து இந்த உணவகம் நடத்தப்படுவதுடன் கூடுதலாக பல நற்பணிகளும் நடந்துவருகின்றன.அதில் இலவச மருத்துவமுகாம், கல்வி உதவித்தொகை வழங்கல்,ஆதரவற்றவர்களுக்கு கைவினைப்பொருட்கள் செய்ய கற்றுத்தருதல் உள்ளீட்டவை அடங்கும்.இது தெரிந்த பிறகு உணவகம் வருபவர்கள் உண்ணும் உணவின் மதிப்பிற்கும் கூடுதலாக கொடுக்கின்றனர் என்பதுதான் நிஜம்.

சிங்கப்பூருக்கு சுற்றுலா வருபவர்கள் ஒரு நாள் ஒரு வேளையாவது அன்னலட்சுமி உணவகத்திற்கு சென்றுவிடுவர் அந்த அளவிற்கு இங்கு இந்த உணவகம் தற்போது பிரபலம்.

சுவாமி சிவானந்தாவின் உருவச்சிலை வரக்கூடிய விருந்தினர்களை வரவேற்கும் விதமாக ஒட்டலின் மத்திய பகுதியில் காணப்படுகிறது.உணவகத்தின் உள்ளும் புறமும் தமிழக கலையை பறைசாற்றும் ஒவியங்கள் சிற்பங்கள் இருப்பது மேலும் இனிமையான உணர்வை உணவுடன் வழங்குகிறது.

இந்த உணவகத்தின் சிறப்பான செயல்பாடு காரணமாக தற்போது இந்த ஒட்டலின் கிளைகள் மலேஷியா,ஆஸ்ட்ரேலியா உள்ளீட்ட நாடுகளிலும் உள்ளது.

அன்னலட்சுமியின் இந்த நல்ல காரியம் நாடு முழுவதும் இன்னும் பல்கி பெருகட்டும், தர்ம சிந்தனை தழைத்தோங்கட்டும்.

சிங்கப்பூர் அன்னலட்சுமி உணவகத்தின் பொறு்பபாளர் சுரேஷ் கிருஷ்ணனுடன் தொடர்பு கொள்ள:97813593.

-முருகராஜ்
murugaraj@dinamalar.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X