திரும்பிய பக்கமெல்லாம், கோவில்கள் அமைந்து, பழங்காலத்தில் சிறப்பு பெற்றிருந்த ஒரு கிராமம், தற்போது சிற்றுாராக மாறியுள்ளது. தங்கள் கிராமத்துக்கான வரலாற்றை வெளிப்படுத்த, ஆய்வுகள் நடத்த வேண்டும் என்பது அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், அமைந்துள்ள கிராமம் குறிஞ்சேரி. இக்கிராமத்தில், திரும்பிய பக்கமெல்லாம் பழங்கால கோவில்கள் காணப்படுகின்றன. கிராமத்தை சுற்றிலும், உப்பாறு உட்பட ஓடைகள் சென்றாலும், எந்த காலத்திலும் மழை வெள்ளம் குடியிருப்புக்குள் வந்ததில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில், பழமை வாய்ந்த, பூமிலட்சுமியம்மன், மாகாளியம்மன், குறிஞ்சேரியம்மன், விநாயகர், பாலமுருகன் உட்பட கோவில்கள் அமைந்துள்ளன. இதில், குறிஞ்சேரியம்மன் கோவில், கோபுரம், முன்மண்டபம் ஆகியவை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில், பல்வேறு சிலைகள் சிதைந்த நிலையில் கிடக்கின்றன. இதே போல், கிராமத்தின் மையப்பகுதியில், அரச மரத்தின் அருகில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் பாலமுருகன் கோவில், பராமரிப்பு இல்லாமல், பாழடைந்து வருகிறது. பெரிய கற்களால், கட்டப்பட்ட, சுவரில், விரிசல் ஏற்பட்டதில், பல்வேறு சிற்பங்களும் சிதிலமடைந்து வருகின்றன. கோவிலின் வெளிப்புறத்தில், 4 அடி உயர சிலை பராமரிப்பு இல்லாமல், பரிதாப நிலையில் உள்ளது. இக்கோவில்களை பராமரிக்க, இந்து அறநிலையத்துறைக்கு கிராம மக்கள் சார்பில், பல முறை கோரிக்கை விடப்பட்டும், நடவடிக்கை இல்லை.
கிராமத்தின் சிறப்பாக, பூமித்தாய்க்கு என தனியாக கோவில் இருப்பதுதான். பழமை வாய்ந்த கோவிலில் தற்போது சிறப்பாக பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவிலின் அருகில், ரோட்டோரத்தில், பழங்கால ஆட்சியாளர்களின் சிலை மண்ணில் புதைந்து காணப்படுகிறது. சிலைக்கு எதிராக இருந்த கல்துாணில் இருந்த கல்வெட்டு சிதிலமடைந்துள்ளது.
கிராமத்திலுள்ள சில வீதிகளிலும், சில கோவில்கள் உள்ளன. இவ்வாறு, மக்கள் தொகையில், 'சிற்றுாராக' இருந்தாலும், கோவில்கள் எண்ணிக்கையில், 'பேரூராக' உள்ள குறிஞ்சேரி கிராமத்தில், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி, வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- நமது நிருபர் -