கொற்றலை கரை உடைப்புக்கு யார் காரணம்?| Dinamalar

கொற்றலை கரை உடைப்புக்கு யார் காரணம்?

Added : பிப் 05, 2016 | கருத்துகள் (1)
Advertisement

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை வெள்ளத்திற்கு, செம்பரம்பாக்கம் ஏரியை திட்டமிட்டு திறக்காதது தான் காரணம் என, அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேநேரம், சத்தமே இல்லாமல், கொற்றலை ஆற்றின் கோர தாண்டவத்திற்கு, திருவள்ளூர் மாவட்டத்திலும், வட சென்னையிலும், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை.


குறிப்பாக, கொற்றலை ஆற்றால், மணலி புதுநகர், விச்சூர், கொசப்பூர், சடையங்குப்பம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும், பல ஆயிரம் குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கின. பூண்டி, பிச்சாட்டூர் என, பல பெரிய ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நீர்நிலைகளும் நிரம்பி, கொற்றலை ஆற்றில் உபரிநீர், பல ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டது தான், இந்த கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்க காரணமா?வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த கிராமங்களுக்கு, நமது நிருபர் குழு களஆய்விற்கு சென்றது. அதில், தற்போதும் நம் கண் முன்னே மாறாத வடுவாக, வெள்ள பாதிப்புகள் அந்த கிராமங்களில் இருப்பது தெரியவந்தது.
கண்ணீர் மல்க...இன்னும் கொற்றலை ஆற்றின் கரைகள், பல இடங்களில் உடைப்பெடுத்த வடு மாறவில்லை. அவற்றை சீரமைக்கவும் பொதுப்பணி துறை முன்வரவில்லை.கிராமவாசிகளிடம் பேசியதில், கொற்றலை ஆற்றின் கரைகள் உடையாமல், உபரிநீர் முறையாக ஆற்றில் சென்றிருந்தால், கிராமங்களுக்கு பாதிப்பில்லை. விவசாயத்திற்கான கால்வாய்கள், ஏரிகளுக்கு வரும் கால்வாய்கள், ஆற்றின் கரைகளை உடைத்து, கொற்றலை ஆற்றில் பொங்கியதால் தான், இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டது என, கண்ணீர் மல்க கூறுகின்றனர். இதற்கு, கரைகளை பொதுப்பணி துறை முறையாக பராமரிக்காதது தான், முக்கிய காரணம் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு.ஆந்திர மாநிலத்தில் இருந்து புறப்பட்டு, பூண்டி நீர்த்தேக்கத்தை கடந்து வரும் கொற்றலை ஆறு, பின் ஆரணி, பெரியபாளையம், காரனோடை, நாப்பாளையம், மணலி புதுநகர், சடையங்குப்பம் தாண்டி வருகிறது.

அதையடுத்து, எர்ணாவூர் பக்கிங்ஹாம் கால்வாய் பத்துக்கண் மதகு அருகே, புழல் ஏரி உபரி நீருடன் சங்கமித்து, எண்ணுார் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. கொற்றலை ஆறு, நாப்பாளையம் வரை பிரச்னையின்றி பயணிக்கிறது. நாப்பாளையத்தில் இருந்து ஆவேசமாக மாறி, நாசப்படுத்துகிறது. அங்கிருந்து தான் கரைகளை உடைத்து, ஊருக்குள், மளமளவென வெள்ளம் புகுந்துள்ளது. இதில் விச்சூர் அடுத்த வெள்ளிவாயல் என்னும் பகுதியில் கரைகள் உடைந்து, வெள்ளிவாயல் ஏரி வேகமாக நிரம்பி இருக்கிறது. ஏரியில் அளவுக்கு அதிகமான வெள்ளம் புகவே, ஏரி உடைந்து விச்சூர் மூழ்கியது. விச்சூர் மூழ்கி, வெள்ளம், 2 கி.மீ., பயணித்து, கண்ணியம்பேடு ஏரியை முழுமையாக நிரப்பி, அங்கிருந்து வெளியேறியது.
அதனால், கண்ணியம்பேடு, அரியலுார், ஆண்டார்குப்பம் பகுதிகள் மூழ்கின. பின், அந்த வெள்ளம் மணலி விரைவு சாலையை கடந்து, மணலி புதுநகரில் காட்டாறாக பாய்ந்துள்ளது. விவசாய பாசனத்திற்கு வெட்டப்பட்ட கால்வாய்கள் மூலம் தான் வெள்ளம், சில மணிநேரங்களில் ஊருக்குள் புகுந்து வீடுகளை மூழ்கடித்து உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து, கொற்றலை ஆறு சடையங்குப்பம் நோக்கி பயணிக்கிறது. இடையில் மணலி புதுநகர் அருகே சிறு ஓடைகளாக பிரிகிறது. அந்த ஓடைகள், மணலி புதுநகர் ஊருக்குள் புகுந்து, சடையங்குப்பத்திற்கு முன், மீண்டும் கொற்றலை ஆற்றுடன் இணைகின்றன. கொற்றலை ஆற்று வெள்ளத்தால், மணலி புதுநகர் இம்முறை சின்னாபின்னமானது.கொற்றலை ஆற்றில் இருந்து பிரியும் ஒரு கால்வாய், சடையங்குப்பம் ஏரியை நிரப்புகிறது. அந்த ஏரியின் கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர், மீண்டும் கொற்றலை ஆற்றில் சேர்ந்து கடலுக்கு செல்கிறது.
சேதம் ஏற்பட்டது எப்படி?வெள்ளிவாயல் பகுதியில் கரைகள் உடைந்து, விச்சூர், ஆண்டார்குப்பம் முதல் காட்டுப்பாக்கம் வரையில், 150 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த பகுதியில் இருந்த, 5,000க்கும் மேற்பட்ட வீடுகளும், வீட்டு உபயோகப் பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டன. மணலி புதுநகரில் உள்ள ஓடைகள் மூலம் தான், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அந்த ஓடைகள் துார்வாரப்படாததும் இந்த பேரழிவுக்கு காரணம்.
சடையங்குப்பம் அருகே கொற்றலை ஆற்றின் கரைகள், மூன்று இடத்தில் உடைப்பெடுத்துள்ளன. ஒன்று, சடையங்குப்பம் ஊருக்குள் அமைந்திருக்கும் ஏரிக்கு தண்ணீர் வரத்து செல்லும் கலங்கல் செல்லும் பாதை. மற்ற இரு இடங்கள் சடையங்குப்பத்திலேயே உள்ளன. சடையங்குப்பம் ஏரிக் கரை பலமாக இல்லாததால், அதுவும் பல இடங்களில் உடைந்துள்ளது. இதற்கு முழு முதற்காரணம், பொதுப்பணி துறை சரியாக கரைகளை பலப்படுத்தாதது தான்.


- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-பிப்-201608:41:10 IST Report Abuse
Srinivasan Kannaiya நீர்நிலைகளை கவனிக்காமல் அவற்றை சரிவர பாரமரிக்கததால் கொற்றலை ஆற்றில் பிரச்சினை வந்தது... பொதுப்பணி துறைக்கு அமைச்சர் வீட்டு வேலை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது... அப்பறம் எங்கே ஆறு,ஏரி குளங்களின் கரையை பார்ப்பது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X