திருப்பூர் : ஏற்றுமதி ஆடைகளுக்கான சேவை வரி, "ரீபண்ட்' சதவீதம், 0.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், திருப்பூர் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஆடை உற்பத்தியின்போது செலுத்தும் பல்வேறு வகையான உள்ளீட்டு வரியினங்களில், குறிப்பிட்ட சதவீதத்தை, ஏற்றுமதி வட்டி சலுகையாக, தொழில் துறையினருக்கு மத்திய அரசு திருப்பி வழங்குகிறது. ஆடை
உற்பத்திக்குபின், போக்குவரத்து, துறைமுகம் போன்றவற்றில், பல்வேறு பயன்பாடுகளுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சதவீத சேவை வரி திரும்ப வழங்கப்படுகிறது.
சேவை வரி, 12.36 சதவீதமாக இருந்து, 2015-16ம் ஆண்டு பட்ஜெட்டில், 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2015, நவ., மாதம், 14.5 சதவீதமாக உயர்ந்தது. இதுவரை, 0.18 சதவீதமாக இருந்த, திருப்பி வழங்கப்படும் சேவை வரியை, உயர்த்த வேண்டும் என, ஏற்றுமதியாளர்கள் சங்கம், பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்து கேட்பில், மத்திய வர்த்தகத்துறை, ஜவுளித்துறை, நிதித்துறை அமைச்சகங்
களுக்கு தெரிவித்திருந்தது. அதையேற்று, திருப்பி வழங்கப்படும் சேவை வரியை, 0.18 சதவீதத்தில் இருந்து, 0.21 சதவீதமாக, மத்திய அரசு உயர்த்தியுள்ளது.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேவை வரி "ரீபண்ட்' சதவீதத்தை, 0.21 சதவீதமாக உயர்த்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, பிற நாடுகளுடனான போட்டியை எதிர்கொள்ள, பின்னலாடை துறைக்கு கைகொடுக்கும்' என, தெரிவித்துள்ளார்.