அன்று, தாமதமாகத் தான் துாங்க முடிந்தது. பகலின் வேலைப் பளுவால், நல்ல உறக்கம். திடீரென அதிகாலை, 3:00 மணிக்கு, என் கால்கள் ஜிலீரென்றன. திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது, வீட்டிற்குள், படுக்கை அறையில் கட்டிலின் மேல் தண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. மனைவி, குழந்தைகளை எழுப்பி வாசலுக்கு வந்தபோது, என் கழுத்தளவு தண்ணீர்... தலை மேல் குழந்தைகளை சுமந்து, தெரு முனைக்கு ஓட்டம்... நான் ஒரு கார் மெக்கானிக்! அவரிடம் வந்திருந்த அத்தனை வாகனங்களும் நீருக்கு அடியில். என் அனைத்து கருவிகளும் தண்ணீருடன் போச்சு. அடித்துச் சென்றது. மீண்டும் புதிதாக தொடங்க வேண்டும் என் வாழ்க்கையை...
அடுத்து இன்னொருவர் -நீர் பெருகி வருவதைக் கண்டு, அடுத்த தெருவிலிருக்கும் அண்ணன் வீட்டுக்கு சென்று, என் வீட்டின் கதி என்ன என்று திரும்பிப் பார்த்தபோது, வீட்டிலிருந்து, சோபா, மேஜை, 'பிரிஜ், டிவி' என எல்லாம் மிதந்து வெளியேறிக் கொண்டிருந்தன. என் மொத்த சொத்தே அவ்வளவு தான்... எல்லாம் போச்சு!
இப்படி பல கதைகள்... பல இழப்புகள்... பல போராட்டங்கள்!ஆண்டுக்கு, 100 செ.மீ., மழை, அதுவும், 100 மணி நேரத்தில் சென்னையில் விழுவது வழக்கம்! அதற்கே அல்லோல கல்லோலப்படும் சென்னையால், சில மணி நேரங்களில் இந்த அளவு மழையைத் தாங்க முடியவில்லை.
சென்னை, பல ஆறுகளின் வால் பக்கம் உள்ள, ஒரு சம நிலப் பகுதி. ஈர நிலங்கள் மற்றும் சதுப்பு நிலம் கொண்ட இயற்கை கால்வாய்கள் கொண்ட நகரம். பல நுாறு ஏரிகளும், நீர் நிலைகளும் கொண்டது. அவை அனைத்தும் நிரம்பி, ஆயக்கட்டுகளை நிரப்பி, பின் கடலில் சேரும்.
கூவத்திற்கு, 75 ஏரிகளும், அடையாறுக்கு, 450க்கு மேலான ஏரிகளும் நிரம்பிய பின், அதிகப்படியான நீர் வெளியேறியது. வடிகால் வழிகள் சரியாக, சிறப்பாக இருக்கவில்லை என்றால், இந்த விரிந்த சம தளத்தில் பிரச்னை தான். இயற்கையாக அமைந்த வடிகால்களும் மனிதன் உருவாக்கியவையும் மிகவும் இன்றியமையாதவை.
ஆனால், அந்த நீர் நிலைகளும், வடிகால்களும் எங்கே?நீர் நிலைகளையெல்லாம், நெகிழியாலும், கட்டடங்களாலும் அடைத்து விட்டால்?
பெருமழையை பேரிடராக ஆக்கிய நம் சமூகத்தின் பேராசையை மறப்பதா, மறுப்பதா?இந்த பேரிடலிருந்து நாம் கற்றது ஒன்றுமே இல்லையா?
விமான நிலையத்தின் ஓடுபாதையே அடையாறு நதியின் மேல் தான் அமைக்கப்பட்டுள்ளது என்பதை, இந்த வெள்ளத்தின்போது தான் புரிந்து கொண்டோம்.
இது தவிர, திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பற்றி பேசுவதே இல்லை.
ஆனால், இந்த வெள்ளத்தில், மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியோர் ஏராளம். அப்படி தான், சேலம் மக்கள் குழு அறைகூவல் விடுக்க, பெரும் திரளாய் இளைஞர்கள் கூடி, பலவற்றை சேகரித்து, படகுகளும், தற்காலிக வீடுகளும், மூங்கிலில் செய்து அனுப்பினர்.
இதே குழு தான், சேலத்தில் ஏழு ஏரிகளை தத்து எடுத்துச் சீரமைத்து, பெரும் பணியைச் சீராக செய்து, அவற்றை பாதுகாத்தும் வருகின்றனர்.
அந்த அருமையான அமைப்பின், 20 இளைஞர்கள், மிதி வண்டியில் புறப்பட்டு, சென்னையை நோக்கி பயணம் செய்கின்றனர். 12 வயது சிறுவர் முதல், 30 வயது இளைஞர்கள் வரை, சேலத்திலிருந்து புறப்பட்டு, தர்மபுரியில், திருப்பத்துாரில் பல பள்ளி, கல்லுாரி மாணவர்களை சந்தித்து, ஏரிகளை பாதுகாப்பதின் முக்கியத்துவத்தையும், நெகிழி மற்றும் அத்திமீறி வந்த ஆக்கிரமிப்புகளைப் பற்றியும் எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்தக் குழு, வரும், 13ம் தேதியன்று, சென்னை வந்தடைகிறது. பியுஷ் மானுஷ் மற்றும் குழுவினர் கொண்ட இந்த அமைப்பினர் வரும் பாதையில், அவர்களுடன் கலந்துரையாடலாம். அவர்களுடன் பேச, 94432 48582 (அ) 95666 07077 எண்களை தொடர்பு கொள்ளவும்.
மாரி என்றால் மழை. மாரி என்னும் மழை மீதும், அந்த தெய்வத்தின் மீதும் ஆணையாக, நீர் நிலைகளை காப்பதன்
கட்டாயத்தை எடுத்துரைக்க வலம் வருகிறது இந்த சைக்கிள் யாத்திரை குழு!இவர்கள் வாயிலாக கற்போமா, நம் தவறுகளைக் களைந்து, நிவர்த்தி செய்வோமா அல்லது எல்லாவற்றையும் மறந்து, 'சகஜ நிலைக்கு' திரும்புவோமா?
- அனந்து -
ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு organicananthoo@gmail.com