எண்ணும், எழுத்தும் இரு கண்களாக மனிதர்களுக்கு அமைய வேண்டும் என்பது திருவள்ளுவர் வாக்கு. மனிதன் சேர்த்து வைக்கும் செல்வம், ஒரு கட்டத்தில் அழிந்து விடுகிறது; தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு வாரித்தருவதால், கரைந்து காணாமல் போகிறது. கற்ற கல்வி, எக்காலத்திலும் அழியாதது; பிறராலும் அழிக்க முடியாதது.
மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்கினாலும், கல்விச்செல்வம் குறைந்து போகாதது. ஏனெனில், கல்வி என்பது பொருளல்ல; அது, மனிதனை நல்வழிப்படுத்தும் அறிவாக விளங்குகிறது.
முந்தைய தலைமுறையை காட்டிலும், இப்போதுள்ள தலைமுறையில், கல்வியின் பயன் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பலமடங்கு அதிகரித்திருக்கிறது; தான் பெறாத செல்வமான கல்வியை, தங்களது பிள்ளைகள் கட்டாயம் பெற வேண்டும் என்ற திடமான எண்ணம், பெற்றோரிடம் காண முடிகிறது. தனது வருமானத்தில் பெரும்பகுதியை, பிள்ளைகளின் கல்விக்காக செலவழிக்கும் பெற்றோர், அதிகரித்து வருகின்றனர்.
அரசு தரப்பிலும், பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து, தரமான கல்வி வழங்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காலணியில் துவங்கி, "லேப்-டாப்' வரை மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாநிலமே, நாட்டில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக திகழ முடியும் என்பது, அரசின் திட்டமாக <உள்ளது.
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர், உயர்கல்வியில் சிறந்த வாய்ப்பு பெறுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., டாக்டர், இன்ஜினியர் போன்ற பணி
வாய்ப்புகளை பெறுகின்றனர். அவர்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைகிறது.
கற்கும் காலத்தில் அதன் மதிப்பை உணராமல் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலையில் படிக்கும் மாணவ, மாணவியர், குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களில் பலர், கல்லூரியில் "பொழுது போக்காக' நாட்களை கடத்துகின்றனர். அதன்பின், ஏதேனும் ஒரு வேலையில் சிக்கிக்கொண்டு, குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை தள்ளுகின்றனர்.படிக்கும் மாணவ பருவத்திலேயே, எதிர்காலம் குறித்த புரிதலை, மாணவர் மத்தியில்
ஏற்படுத்தி, படிப்பின் மீது
அவர்கள் முழு கவனத்தையும் செலுத்த, பெற்றோரும் தவறி விடுகின்றனர்; பள்ளி ஆசிரியர்களும் தவறி விடுகின்றனர். சில பெற்றோர்களும், ஆசிரியர்களுமே, இதற்கு விதிவிலக்காக உள்ளனர். மாணவர்களது இளம் மனதில், எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பை விதைக்கின்றனர். பிரகாசமான எதிர்காலம் அமைய, கல்வியின் முக்கியத்துவம் குறித்து உணர்த்துகின்றனர்.
பள்ளிகளில், மாணவர்களுக்கு கற்பித்தல் மட்டுமே நடத்தாமல், எதிர்காலம் குறித்த புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது கட்டாயம்; கல்வி என்ற வாய்ப்பு, எதிர்காலத்தின் வாசல்களை திறந்து விடும் அற்புதம் என்பதை, மாணவ, மாணவியருக்கு உணர்த்துவது அவசியம். இதுகுறித்த புரிதல் முதலில் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படுமானால், மாணவர்களின் அறிவு கண்கள், நிச்சயம் பிரகாசிக்கும்!