'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்' என, மத்திய அரசு சட்டம் இயற்றி, அக்குற்றத்திற்கான தண்டனைகளை யும் வரையறுத்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று, 68 ஆண்டுகளுக்கு பின், லஞ்சம் கொடுப்பதும் ஓர் குற்றம் தான் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கின்றனர்.
நாடு முழுவதும் லஞ்சப்பேய் தலைவிரித்தாடுகிறது என, குறிப்பாக அரசியல் தலைவர்கள், - நீதிமன்றத்தால் ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் உட்பட, -அனைவரும் முழங்குகின்றனர். ஒவ்வொருவரும், தான் மிகவும் நேர்மையாளன் என்றும், சுத்தமானவன் என்றும், மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்றும் போடுகிற கூப்பாடு, உண்மையிலேயே மக்களை குழப்பமடையச் செய்கிறது. ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மையென்று நம்ப வைக்க படாத பாடுபட்டு, மக்களை முட்டாளாக்கி, அரசியலையும் கேலி கூத்தாக்குகின்றனர்.
இந்த லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் தான் யார் என்பது தான் விடையளிக்க இயலாத கேள்வி.திருடனும் கூட்டத்தில் கலந்து விட்டு, 'திருடனை பிடி' என, கத்திக் கொண்டே ஓடுவது போல்தான் இதுவும். ஆகவே, எல்லாரும் லஞ்சத்தை எதிர்க்கின்றனர் என்ற தோற்றம் உண்மை அல்ல. முன்பெல்லாம் லஞ்ச ஊழலே இல்லையா என்ற கேள்விக்கு பதில், -'இருந்தது' என்பது தான். ஆனால், அச்சப்பட்டுக் கொண்டே, வெட்கப்பட்டுக் கொண்டே, யாருக்கும் தெரியாமல், தன் மனைவி மக்கள் கூட அறியாமல் ஒரு சிலர் தான் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தனர்.
கடந்த, 1967க்கு பின், 'லஞ்சம்' என்ற கீழ்த்தரமான செயலுக்கு அரிதாரம் பூசி, மாறுவேடமிட்டு 'அன்பளிப்பு' என்ற புதிய நாமகரணம் சூட்டி விட்டனர். அதை எங்கும் கவுரவமாக பவனி வரச் செய்ததுடன், அது ஒரு சமூக அவலம், தேசத்துரோக செயல் என்ற எண்ணத்தையே, மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்க செய்த பெருமை, இன்றைய அரசியல்வாதிகளையே சாரும்.இன்று இறைவனுக்கு அடுத்ததாக, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சம் மட்டுமே. பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்குகூட லஞ்சம் தரவேண்டும் என்பது மிகவும் கொடுமையான சூழல்.ஒருவர் தனக்கு நியாயமாக, உரிமையோடு வரவேண்டிய ஒரு விஷயத்தை பெறுவதற்கே, அரசு அதிகாரிக்கு கொடுக்கிற பணம், 'லஞ்சம்!' பெரும்பாலும் அதை அரசு அதிகாரியே நிர்ப்பந்தப்படுத்தி கேட்டு பெற்றுக் கொள்வதாகவே இருக்கும்.
அந்த அரசு அதிகாரியோ, சட்டத்திற்கு புறம்பான அந்த வேலையை செய்ய முடியாது என்று மறுப்பதற்கு பதிலாக, அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, பேரம் பேசி, முடிந்த அளவு பெருந்தொகையை கறந்து கொள்கிறார். பல அதிகாரிகள், தங்கள் மாத சம்பளத்தைக் காட்டிலும் பன்மடங்கு பெரும் பணத்தை மாதா மாதம் லஞ்சமாக பெற்றுக் கொண்டிருந்தனர் என்று விசாரணைகள் தெரியபடுத்தி இருக்கின்றன.
சமீபத்தில் ஒரு பெண்மணி, வருவாய் அதிகாரி பதவிக்கு தேர்வெழுதி, தேர்வாகி பணியில் சேர்ந்து ஐந்தே மாதங்களில், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கி, பிடிபட்டு தண்டிக்கப்பட்டார். அவருடைய கனவு, நோக்கம் எல்லாம் அரசு அதிகாரியாகி லஞ்சத்தில் திளைத்து பணக்காரராக வேண்டும் என்பதாகத்தானே இருந்திருக்கும்.இப்படி மாட்டிக் கொண்டவர்கள் மட்டும் தங்கள் முகத்தை மறைக்க முயற்சி செய்கின்றனர். பிடிபடாதவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. நல்ல நேர்மையான அதிகாரிகளின் விழுக்காடு குறைந்து கொண்டே போகிறது.
பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கம், அதிகாரிகளுக்கு, 45 சதவீத கமிஷன் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவதாக வாக்குமூலம் கொடுத்து, புகாரும் தெரிவித்திருக்கின்றனர். அதிகம் லஞ்சம் கேட்கும், 10 அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டிருக்கின்றனர். நேர்மையான அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் துன்புறுத்தப்படுகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த ரகசியம்.லஞ்சத்தைப் பற்றி குறிப்பிடும்போது, அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என்று மூன்று கூறுகளாக பேசுகின்றனர். இந்த மூன்று கூறுகளுமே, 'மக்கள்' என்பதில் தானே இருக்கின்றனர். ஆகவே, மக்கள் தாங்கள் போடுகிற வேஷத்திற்கு ஏற்றார்போல் செயல்படுகின்றனர் என்பதுதான் உண்மை.
நம்மில் எத்தனை பேர் எக்காரணம் கொண்டும், எதற்காகவும் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று தீர்மானமாக முடிவெடுத்திருக்கிறோம் என்ற கேள்விக்கு, நிச்சயமாக திருப்தியான பதில் இல்லை. எப்படியாவது வேலை முடிந்தால் சரி என்பதோடு, நம்மில் பலர் சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை நடத்த லஞ்சம் கொடுக்க தயங்குவதில்லை என்பது தான் யதார்த்தம். அரசியல் என்பது, 'மக்கள் பணி' என்பது போய், 'செல்வம் கொழிக்கும் தொழில்' என்ற
கோட்பாடு வேரூன்றி நீண்ட
காலமாகிறது.
பல கோடிகளை செலவு செய்து பதவிக்கு வரும் அரசியல்வாதிகள், போட்ட தொகையைவிட பலமடங்கு வருமானம் பார்க்க முடியும் என்பதனால் தான், அவர்களுடைய இலக்கை எளிதாக அடைய எல்லா வழிகளையும் பின்பற்றுகின்றனர். அதில் முக்கியமான ஒன்றுதான் அதிகாரிகளை லஞ்சம் வாங்க துாண்டி, அதில் பெரும்பங்கை தாங்கள் பெற்று கொள்வதும். அவர்கள் கருத்துப்படி மக்கள் அனைவரும் முட்டாள்கள்தான்.'இன்டர்நெட், பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' போன்ற நவீன தொழில்நுட்பங்கள் காரணமாக, லஞ்ச செய்திகள் எல்லாம் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இந்த செய்திகளில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், நெருப்பில்லாமல் புகையாது என்பது மட்டும் மக்களுக்கு புரிகிறது.
இந்த பரபரப்பு காரணமாக இரண்டு விஷயங்கள் நடக்கலாம்... லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இன்னும் கவனமாக இருந்து, சாதுரியமான வழிகளை கண்டறிந்து லஞ்சம் வாங்க முயற்சிக்கலாம். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மாயிருக்குமா அல்லது லஞ்சலாவண்யம் சற்று குறையவும் வாய்ப்புள்ளது.எதுவானாலும், மக்கள் வரிப்பணம் மக்களுக்கு பயன்படாமல் இவ்விதம் தனிநபர்கள் கபளீகரம் செய்வது தடுக்கப்பட வேண்டும்
என்பதே மக்கள் விருப்பம்.
இ-மெயில்:
ahanathapillai@gmail.com
- டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளை -
முன்னாள் பேராசிரியர்
மதுரை மருத்துவக் கல்லுாரி