ரியல் எஸ்டேட்டால் கபளீகரமான மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாய் | Dinamalar

ரியல் எஸ்டேட்டால் கபளீகரமான மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாய்

Added : பிப் 09, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தின், 10 பெரிய ஏரிகளில் ஒன்று மணிமங்கலம் ஏரி. ஒரு டி.எம்.சி.,க்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில், மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் ஆண்டுகளில், கணிசமாக உபரிநீரும் வௌியேற்றப்படும். இந்த ஏரிக்கு மூன்று கலங்கல்கள் உள்ளன. அவற்றில் இருந்து உருவாகும் உபரிநீர் கால்வாய், 10 மீ., முதல் 15, 20 மீ., வரை இடத்திற்கு ஏற்ப சுருங்கி, விரிந்து செல்கிறது. பருவமழை காலத்தில் அடையாறு கடத்தும் நீரில், குறிப்பிட்ட பங்கு மணிமங்கலம் ஏரி நீர் தான்.கடந்த பருவமழையில் மணிமங்கலம் ஏரி உபரிநீர், முறையாக வெளியேறாததால் தான், மணிமங்கலம் கஜலட்சுமி நகர், வரதராஜபுரம் பி.டி.சி., குவார்ட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டது.
பொதுப்பணி துறையின் உபரிநீர் கால்வாய் இருந்தும், ஏன் மணிமங்கலம் ஏரி உபரிநீர் முறையான பாதையில் செல்லவில்லை?கால்வாய் மாயம்:நமது நிருபர் குழு, மணிமங்கலம் ஏரியில் இருந்து துவங்கிய கள ஆய்வில், பல்வேறு உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் விவரம்:மணிமங்கலம் ஏரி பெரிய கலங்கலில் இருந்து துவங்கும் உபரிநீர் கால்வாய், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தை கடந்து, கரசங்கால் ஊருக்குள் பயணிக்கிறது. பிரசித்தி பெற்ற மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ள தெருவைக் கடக்கும், இந்த உபரிநீர் கால்வாய், அடுத்த 300 மீ., துாரத்தில் தனது அகலத்தை வெகுவாக இழக்கிறது. 10 மீ.,க்கும் குறைந்த அகலத்திற்கு மாறும் கால்வாய், ஒரு இடத்தில் ஒரத்துார் ஓடையில் இருந்து பிரிந்து, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையைக் கடந்து வரும், 10 மீ., அகலம் கொண்ட மற்றொரு ஓடையுடன் இணைகிறது.

மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாய், ஒரத்துார் ஓடையின் பிரிவு ஓடை ஆகிய இரண்டும் இணைந்து, 100 மீ., துாரத்திற்கு தொடர்ந்து ஒரே உபரிநீர் கால்வாயாக செல்கின்றன. அந்த இடைவெளியில் ஒரு மண் சாலை, கால்வாயை குறுக்கிடுகிறது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அப்பகுதியில் விவசாய நிலங்களை மனைகளாக பிரித்த போது உருவாக்கியது. இந்த சாலை ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதா, இல்லையா என்ற விவரம் இல்லை. இந்த சாலை குறுக்கிடும் ஒரு பகுதி வரை கால்வாய் இருக்கிறது. மற்றொரு பகுதியில், 10 அடி துாரத்திற்கு மட்டும், தொடர்ந்து கால்வாய் இருந்ததற்கான தடம் தெரிகிறது. அந்த 10 அடி துாரத்திற்கு மேல், கால்வாய் மாயமாகி விட்டது. அங்கிருந்து தொடர்ந்து கால்வாயை தேடியதில், எல்லா இடமும் சமவெளியாகவே இருக்கிறது.
ஆனால், குறிப்பிட்ட உபரிநீர் கால்வாய், அடையாற்றுடன் இணைவதாக, பொதுப்பணி துறை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள இடத்திற்கு சென்றதில், அங்கு, வரைபடத்தில் இருப்பதைப் போல, மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாய், இரண்டு பிரிவாக பிரிந்து, அடையாற்றில் கலந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.வெள்ளத்தால் சேதம்ஒரு பிரிவு கால்வாய், இரண்டு கண் மதகுகள் வழியாகவும், மற்றொரு பிரிவு கால்வாய் ஒரு கண் மதகு வழியாகவும், அடையாற்றுடன் இணைகின்றன. இதற்காக கட்டப்பட்ட குழாய் வடிவிலான சிறுபாலங்கள் மட்டுமே தற்போது அங்கு உள்ளன. அந்த பாலத்திற்கு மேல், கால்வாய் இருந்ததற்கான தடமே இல்லை. இரண்டு கண் மதகுகளிலாவது, குழாய் தெரிகிறது. ஒரு கண் மதகில் மணல் மூடி, குழாய் துார்ந்து கிடக்கிறது. சமீபத்திய வெள்ளத்தில், வெள்ளம் தன் பாதையை சரியாக தேடி வந்ததன் சாட்சி தான், இந்த மணல் மூடி கிடக்கும் மதகு. இந்த மதகுக்கும், கால்வாயை இரண்டாக பிரிக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த உபரிநீர் கால்வாய் தான், மனைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பலருக்கும் இந்த இடங்கள் விற்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை இதை பொதுப்பணி துறையும் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறது.
சமீபத்திய பெருமழை வெள்ளத்தில், மணிமங்கலம் ஏரி உபரிநீர், தொடர் கால்வாய் இல்லாததால், பட்டா நிலங்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து, மணிமங்கலம் கஜலட்சுமி நகர் முதல் பி.டி.சி., குவார்ட்டர்ஸ் வரை பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சேதத்தை தொடர்ந்து, மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாயை முழுமையாக மீட்கும் முயற்சியில் பொதுப்பணி துறை களம் இறங்கி உள்ளது.
மறுபிறவி கிடைக்குமா?முதல்கட்டமாக வருவாய் ஆவணத்தின் அடிப்படையில், கால்வாயை தேடியதில், 500 மீ.,க்கும் அதிகமான துாரத்திற்கு கால்வாய் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, மனைகளாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மனைக்கற்களை பிடுங்கி போட்டுவிட்டு, விரைவில் மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாயை, அதன் உண்மையான அகலத்திற்கு கால்வாயாக வெட்ட பொதுப்பணி துறை முடிவு செய்துள்ளது. இதுவரை கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில், எந்த வீடும் கட்டப்படாததால், மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாயை மீட்பது சாத்தியமே என்கின்றனர் பொதுப்பணி துறை அதிகாரிகள். மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாய்க்கு, அடுத்த பருவமழைக்கு முன் மறுபிறவி கிடைக்குமா என்பது, பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201608:42:56 IST Report Abuse
Srinivasan Kannaiya இனியும் அரசு நீர் நிலைகள், நீர்வழி தாரைகள், ஆறு, குளம், ஏரி, ஆற்று பொறம்போக்கு, மேய்ச்சல் பொறம்போக்கு,வாய்கால் பொறம்போக்கு, நீர் பிடிப்பு பகுதிகளை மீட்டு எடுக்க வில்லை என்றால் தமிழகம் அடுத்த மழையின் பொழுது சுடு காடு ஆகிவிடும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-பிப்-201608:39:02 IST Report Abuse
Srinivasan Kannaiya மனிதர்களின் மண்ணாசை நம் வாரிசுகளின் எதிர் காலத்தை மண்ணில் புதைத்து விடும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X