20 ஆயிரம் கனஅடி வெள்ளத்திற்கு வெறும் 3 கண் மதகு| Dinamalar

20 ஆயிரம் கனஅடி வெள்ளத்திற்கு வெறும் 3 கண் மதகு

Updated : பிப் 13, 2016 | Added : பிப் 10, 2016 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை - திருச்சி, சென்னை - கோல்கட்டா, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகள், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை, சென்னை புறவழிச்சாலை உள்ளிட்ட பல சாலைகள், வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் சிக்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இதில், அடையாற்று வெள்ளத்தால் வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், 2015, நவ., 16, 17ம் தேதிகளிலும், டிச., 1, 2 ஆகிய தேதிகளிலும் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த வெள்ளத்தால் அந்த சாலையில் ஏற்பட்ட அரிப்பு, உடைந்த பாலங்கள் ஆகியவை இன்னும் கூட சீரமைக்கப்படாத நிலையில், அந்த நான்கு நாட்கள் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக, படப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த சாலை வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம், மழைநீர் தடையின்றி செல்ல ஏற்ற கட்டமைப்பு இருக்கிறதா என, நமது நிருபர் குழு, அங்கு கள ஆய்வு செய்தது. அதில், மழைநீர் தடையின்றி வெளியேற ஏராளமான கால்வாய் புறம்போக்கு நிலங்கள் இருந்தும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வெள்ளம் சாலையில் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது, தெரியவந்துள்ளது. மேலும், கரசங்கால் முதல் மண்ணிவாக்கம் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு வெள்ளம் சாலையில் பாய்ந்ததால், அவை முழுவதுமாக அரிக்கப்பட்டு சேதமடைந்ததுடன், சாலையை மழைநீர் கடக்க வசதியாக அமைக்கப்பட்ட சிறுபாலங்களும் உடைந்துள்ளன.
எப்படி செல்ல வேண்டும் மழைநீர்?காஞ்சிவாக்கம், ஒரத்துார், நாட்டரசன்பட்டு, வஞ்சுவாஞ்சேரி, ஒரகடம், வட்டம்பாக்கம், சாவடி, செரப்பணஞ்சேரி, ஆரம்பாக்கம், படப்பை, ஆத்தனஞ்சேரி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரும், மழைநீரும் அடையாற்றுக்கு செல்லும் வகையில், ஒரத்துார் ஓடை உள்ளது.இந்த ஓடை ஒரத்துார், படப்பை காட்டு காலனி, சமத்துவபுரம், கரசங்கால் சுடுகாடு பின்புறம் வழியாக வண்டலுார் - வாலாஜாபாத் சாலைக்கு மிக அருகில் வந்ததும், இரண்டாக பிரிகிறது. ஒரு பிரிவு, கரசங்கால் பெட்ரோல் பங்க் அருகே, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையைgf கடந்து, மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாயுடன் இணைகிறது.

மற்றொரு பிரிவு, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் வழியாக, ஆதனுார் சாலையைக் கடந்து, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையை ஒட்டி, 100 மீ., துாரம் பயணித்து, மீண்டும் வண்டலுார் - வாலாஜாபாத் சாலையை சிறுபாலம் வழியாக கடக்கிறது. இவ்வாறு கடக்கும் ஓடை, 300 மீ., துாரத்தில், ஆதனுாரில் இருந்து வரும் அடையாற்றுடன் இணைகிறது. வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் ஒரத்துார் ஓடை குறுக்கிடும் இடத்தில் இருந்து, 200 அடி துாரத்தில், அடையாறும், சாலையைக் கடக்கிறது.ஆதனுாரில் இருந்து வரும் அடையாற்றில், மாடம்பாக்கம், ஆதனுார், ஊரப்பாக்கம், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, நந்திவரம், பொத்தேரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரும், மழைநீரும் செல்லும். இவ்வாறு, 30 கிராமங்களின் உபரிநீர் வந்து ஒன்றாக இணையும் இடம் மண்ணிவாக்கம். ஓடை, ஆறு இரண்டும் சாலையை கடக்கும் கட்டமைப்பு, மூன்று கண் மதகுடன் கூடிய சிறுபாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
பட்டா நிலம் ?இதன் வழியாக வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் மட்டுமே செல்லும். ஆனால், கடந்த பருவமழைக்கு, 20 ஆயிரம் கனஅடி நீருக்கு மேல் கரைபுரண்டு வந்ததால், கட்டுக்கடங்காமல் வெள்ளம் சாலை மீது பாய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாலையை மழைநீர் கடக்க, அகலமான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், வண்டலுார் - வாலாஜாபாத் சாலை, வெள்ளத்தில் சிக்கி இருக்காது. மேலும், சாலையை கடந்த பின், ஒரத்துார் ஓடையும், அடையாறும் இணையும் இடத்தில், ஆங்காங்கே மணல் திட்டுகள் ஆற்றை இரண்டாக பிரித்து கால்வாய் போல மாற்றுகின்றன. இந்த பகுதிகளில் ஆற்றை துார்வாரி பல ஆண்டுகள் ஆகின்றன என்பது இதில் இருந்து தெளிவாகிறது. இதனாலும் வெள்ளம் தடையின்றி செல்ல முடியாமல், கரையை உடைத்துக் கொண்டு நிலபரப்பில் பாய்ந்து, வரதராஜபுரம், பி.டி.சி., குவார்ட்டர்ஸ், முடிச்சூர் ஆகிய பகுதிகளை சூறையாடி உள்ளது.மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாய், பாதியில் மாயமாவதால், ஒரத்துார் ஓடையில் ஒரு பிரிவாக பிரிந்து வரும் கால்வாய் நீர், மணிமங்கலம் உபரிநீர் கால்வாயுடன் இணையும் இடத்தில் இருந்து, விவசாய நிலங்களில் பாய்கிறது.இந்த நீரோட்டம் காரணமாக, கரசங்கால் ஊராட்சி பகுதியில் மல்லீஸ்வரர் கோவில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் வெள்ளம் பாய்ந்து, விவசாய நிலங்களை சீரழித்துள்ளது.
ஒரத்துார் ஓடையின் மற்றொரு பிரிவு கால்வாயை ஆக்கிரமித்து சிலர் சுற்றுச்சுவர் அமைத்துள்ளனர். இந்த பிரிவு கால்வாய், கடுமையான ஆக்கிரமிப்பில் இருப்பதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டும் நிலையில், 'அது கால்வாயே இல்லை; தனியார் பட்டா நிலம்; யாரும் கண்டுகொள்ளாததால், நீர் வடிந்து செல்லும் பாதையாக மாறிவிட்டது' என்கிறது பொதுப்பணி துறை.'ஒரத்துார் ஓடை, ஒரு கால்வாயாக மட்டும் தான் செல்ல வேண்டும். அப்படித்தான் வரைபடத்தில் காட்டப்பட்டிருக்கிறது' என, பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அந்த ஒரு கால்வாய் வழியாக பெரிய அளவிற்கு மழைநீர் செல்ல முடியாது என்பதாலும், பட்டா நிலமாக இருந்தாலும், உபரிநீர் செல்லும் கட்டமைப்பு இயற்கையாக அமைந்திருப்பதாலும், ஒரு வேளை பட்டா நிலமாகவே இருந்தாலும், அந்த நிலத்தை கையகப்படுத்தி, கால்வாய் அமைத்திருக்க வேண்டும் என்பதே பகுதிவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.
என்ன செய்ய வேண்டும்?l ஒரத்துார் ஓடையை அகலப்படுத்த வேண்டும். மணிமங்கலம் ஏரி உபரி நீர் கால்வாயுடன் சேரும் ஒரு பிரிவு ஓடையை துார்வாரி, மணிமங்கலம் ஏரி உபரிநீர் கால்வாயை முழுமையாக மீட்க வேண்டும்l மற்றொரு பிரிவு ஓடையை, 20 மீ.,க்கு அகலமாக்கி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்l வண்டலுார் - வாலாஜாபாத் சாலையை ஒட்டி செல்லும் ஒரத்துார் ஓடையை, 20 மீ.,க்கு அகலப்படுத்த வேண்டும். இரண்டு பக்கமும் பாறைகளை அடுக்கி, அரிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் அல்லது பக்கவாட்டு கான்கிரீட் சுவர் அமைக்க வேண்டும்l ஒரத்துார் ஓடையையும், அடையாற்றையும் இணைத்து, வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் 100 மீ., துாரத்திற்கு ஒரே பாலமாக அமைக்க வேண்டும். இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைப்பதன் மூலம், வெள்ள காலத்தில் போக்குவரத்து பாதிப்பை தடுக்கலாம்l இந்த பாலம் கட்ட நெடுஞ்சாலை துறை, 10 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதிகமான மழைநீர் ஆற்றில் செல்ல வேண்டும் என்பதால், ஒரத்துார் ஓடைக்கும், அடையாற்றுக்கும் இடைப்பட்ட, 200 அடி துாரத்திலும், ஆறு, ஓடைக்கு இரண்டு பக்கமும் அரசு புறம்போக்கு நிலங்கள் தாராளமான விடப்பட்டுள்ளனl இந்த, 10 கோடி ரூபாயை பாலம் கட்டுவதற்காக செலவழித்தால், ஒவ்வொரு பருவமழைக்கும், வண்டலுார் - வாலாஜாபாத் சாலை வெள்ளத்தில் மூழ்குவதை தடுக்கலாம். ஒரே செலவில் நிரந்தர தீர்வை எட்ட முடியும். இல்லாவிட்டால் ஒவ்வொரு பருவமழைக்கும் பாலம் சேதம், சாலை சேதம் என, பல கோடி ரூபாய் செலவு செய்து கொண்டிருக்க வேண்டும்l வண்டலுார் - வாலாஜாபாத் சாலையை கடந்து செல்லும் அடையாற்றையும், 150 மீ., வரை அகலப்படுத்தி, உபரிநீர் தங்கு தடையின்றி செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். இதற்கும் புறம்போக்கு நிலங்கள் தாராளமாக உள்ளன. எந்த தனியார் நிலத்தையும் கையகப்படுத்த வேண்டியதில்லைl அவசர அவசியத்தை உணர்ந்து, இந்த பணிகளை பொதுப்பணி துறை செய்யுமா; செய்வதற்கு அரசு அனுமதிக்குமா?l பொதுப்பணி துறை இந்த பணிகளை எல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். காரணம், தற்போது ஆற்றை ஒட்டி உள்ள புறம்போக்கு நிலங்களில் எந்த கட்டுமானமும் இல்லை. காலம் கடத்தினால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் முளைக்கும். அவற்றை இடிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
11-பிப்-201617:07:23 IST Report Abuse
Rajasekaran Palaniswamy குறைட்டைவிடும் பொதுபணிதுறையும் , அதிகாரிகளும் இந்த உபதேசத்தை எழுத்து கூட்டி கூட படிக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு படிக்க தெரியாது. அந்த துறையில் எத்துனை பேர் போலி சான்றிதழ்கள் மூலமும், லஞ்சம் மூலமும் வேலையில் செர்ந்துள்ளார்களோ? விட்ட பணத்தை மீட்பதில்தான் குறியாக இருப்பார்களே தவிர வேறு எதுவும் செய்யமாட்டார்கள். கேட்டால ஒருவர் மற்றொருவரை கைகாட்டுவார். மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது.
Rate this:
Share this comment
Cancel
Parthiban Pandian - Chennai,இந்தியா
10-பிப்-201611:26:27 IST Report Abuse
Parthiban Pandian 20 ஆயிரம் கனஅடி வெள்ளத்திற்கு வெறும் 3 கண் மதகு திட்டமே இல்லாமல் தொடரும் சாலைகள் கட்டமைப்பு- அரசு ஆவணத்தில் சேர்க்கப்படவேண்டிய கள ஆய்வுக்கட்டுரை. தினமலருக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Parthiban Pandian - Chennai,இந்தியா
10-பிப்-201611:23:28 IST Report Abuse
Parthiban Pandian 20 ஆயிரம் கனஅடி வெள்ளத்திற்கு வெறும் 3 கண் மதகு திட்டமே இல்லாமல் தொடரும் சாலைகள் கட்டமைப்பு. கட்டுரை அருமை. சமூக அக்கரையில் தினமலர் முன்னோடி என்பதை நிரூபித்துள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X