இரைப்பைக்கு இரக்கம் காட்டுங்கள்!| Dinamalar

இரைப்பைக்கு இரக்கம் காட்டுங்கள்!

Added : பிப் 10, 2016 | கருத்துகள் (2)
 இரைப்பைக்கு இரக்கம் காட்டுங்கள்!

நம் உணவுப் பாதையின் தலைமைச் செயலகமாக இயங்கி வருவது இரைப்பை. மார்புக் கூட்டின் இடதுபுறத்தில் உள்ள வயிற்றில், உதர விதானத்திற்குக் கீழே பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ளது, இரைப்பை.
இது உணவுக்குழாய் முடியும் இடத்தில் தொடங்குகிறது. ஆங்கில எழுத்து 'யு' மாதிரி வளைந்து, முன் சிறுகுடலில் இணைகிறது. இதன் கொள்ளளவு சுமார் 1000 மில்லி லிட்டரிலிருந்து 2500 மி.லி. வரை என்றாலும் இது உணவு இல்லாத போது காற்றிழந்த பலுான் போல சுருங்கி இருக்கும்: உணவு உள்ளேவரும் போது தேவைக்கேற்ப விரிந்து கொள்ளும்.
இரைப்பையில் உள்ள சவ்வு ஹைட்ரோகுளோரிக் அமலத்தையும் பெப்சின் எனும் என்சைமையும் சுரக்கிறது. இவ்விரண்டும் இரைப்பையில் உணவு செரிமானம் ஆவதற்கு உதவுகின்றன. உணவு இரைப்பைக்குள் வந்ததும் இரைப்பை ஒரு மிக்சி மாதிரி செயல்பட்டு உணவை உடைத்துக் குழைத்து கூழ் போலாக்கிவிடுகிறது. அப்போது உணவில் உள்ள புரதம் இங்கு செரிமானமாகிறது.
இரைப்பைப் புண்
இரைப்பையில் முக்கியமாக இரண்டு பிரச்னைகள் தலைதுாக்கும். ஒன்று, இரைப்பைப் புண், மற்றொன்று, இரைப்பைப் புற்றுநோய். இரைப்பையில் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும், பெப்சின் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் போது, இரைப்பை மற்றும் முன்சிறு குடல் சுவற்றில் உள்ள மியூக்கஸ் படலம் வீங்கிச் சிதைவடையும். இதை' இரைப்பை அழற்சி (Gastritis) என்கிறோம். இதைக்காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும்.
காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது, மது அருந்துதல், புகைபிடித்தல், கோலா, காபி மற்றும் தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் ஆஸ்பிரின், புரூபென் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல்அடிக்கடி சாப்பிடுவது, உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது, அதிகச் சூடாகச் சாப்பிடுவது, பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் இரைப்பைப் புண்ணுக்கு வரவேற்பு கொடுக்கின்றன.
சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால்' ஹெலிக்கோபாக்டர்பைலோரி (Helicobacterpylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது. மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம்,
துாக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் துாண்டுகின்றன. வேளை தவறிச் சாப்பிட்டால்.....? தினமும் வேளை தவறி சாப்பிடுபவர்களுக்கும், காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கும் இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இதற்குக் காரணம், நமக்குப்பசி உணர்வு தோன்றியதுமே, ஹைட்ரோ
குளோரிக் அமிலமும் பெப்சின் என்சைமும் சுரக்கத் தொடங்கிவிடும். அப்போது நாம் உணவு
சாப்பிடா விட்டால், இந்த அமிலம் இரைப்பையின் மியூக்கஸ் படலத்தைத் தின்னத் தொடங்கும். இது நாளடைவில் இரைப்பைப் புண்ணுக்கு வழிவகுக்கும்.
தடுப்பது எப்படி
சரியான உணவுமுறையைக் கையாள்வது முக்கியம். காரம், மசாலா, புளிப்பு, கொழுப்பு, சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவேண்டும். நேரத்தோடு சாப்பிடுவது, அளவோடு சாப்பிடுவது, நிதானமாகச் சாப்பிடுவது முக்கியம்.
புகைபிடிப்பது, மது அருந்துவது வேண்டவே வேண்டாம். வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமேபயன்படுத்த வேண்டும். காபி மற்றும் கோலா பானங்களை அளவோடு உபயோகிக்க வேண்டும். கவலை, மன அழுத்தம், பரபரப்பு, கோபம், எரிச்சல் போன்ற உளம் சார்ந்த குறைபாடுகளுக்கு இடம் தரக்கூடாது.
தியானம், யோகாசனம் போன்றவற்றைப் பின்பற்றுவது நல்லது.
இரைப்பைப் புற்றுநோய்
இந்தியாவில் புற்றுநோய் வந்து, ஆண்டுக்கு 3.5 லட்சம் பேர் இறக்கின்றனர். இவர்களில் இரைப்பைப் புற்று நோயால் இறப்பவர்களே அதிகம். அந்த அளவுக்கு மோசமானது இரைப்பைப் புற்று நோய். இந்த நோய் ஏற்படுவதற்கு தவறான உணவுப் பழக்கம் தான் முக்கியகாரணம். அதிகசூடான, காரமான, மசாலா அதிகமான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையோ, குளிர்பானங்களையோ அடிக்கடி சாப்பிடும் போது இந்த நோய் விரைவில் உருவாகிறது.
உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக் கொள்வோருக்கும், மாவுச் சத்து நிறைந்த உணவுகளை, குறிப்பாக கிழங்கு வகைகளை அதிக அளவில் சாப்பிடும் பழக்கம் உள்ளோருக்கும் இந்த நோய் வரலாம். காய்கறிகள், பழங்களைக் குறைவாகவும், கொழுப்பு மிகுந்த பீட்ஸா, பர்கர், சாண்ட் விச், சிப்ஸ் போன்ற விரைவு உணவுகளை அடிக்கடி சாப்பிடும் போதும் இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
புகைபிடித்தல், வெற்றிலை பாக்கு, புகையிலை, பான்மசாலா, நிறைய மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களாலும், வயலில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றாலும் இந்த நோய் வருகிறது.
புகைப்பதை நிறுத்துங்கள் புகையிலை கலந்த பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். மது அருந்தாதீர்கள்.செயற்கை வண்ண உணவுகளைத் தவிருங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகளையும் தவிருங்கள். உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள் குளிர்பானங்கள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், உலர் பழங்கள், சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்தவும். வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவற்றுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இவற்றை அதிகப்படுத்துங்கள். ஆர்கானிக் உணவுகளை அதிகப்படுத்துங்கள்.
சமைக்கும்போது கருகிவிட்ட உணவுகளைச் சாப்பிடாதீர்கள். காரணம், அந்தக் கருகலில்தான் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் குடியிருக்கும். மீண்டும் மீண்டும் எண்ணெயைச் சூடுபடுத்திச் சமைக்காதீர்கள்.
ஒருவருக்குப் பசி குறைந்து, உடல் எடை குறைந்து கொண்டே போனால் உடனே இரைப்பை எண்டோஸ்கோப்பி பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள். புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உயிருக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுத்துவிடலாம்.
-டாக்டர் கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம். gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X