நல்ல தலைவர்களை உருவாக்குவோம்!| Dinamalar

நல்ல தலைவர்களை உருவாக்குவோம்!

Added : பிப் 11, 2016 | கருத்துகள் (5)
 நல்ல தலைவர்களை உருவாக்குவோம்!

நமக்கு தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, போக்குவரத்து பிரச்னைகள் அத்தனையும் கடந்து மிகவும் முக்கியத் தேவையாக இருப்பது நல்ல தலைவர்கள் தான். இருப்பவர்கள் எல்லோரும் பொதுநலத்தையே சுயநலமாக மாற்றி சிந்தித்து செயல்படுவதால் இந்த தேவை எழுகிறது.
நல்ல தலைவர் என்பவர் யாராக இருக்க முடியும். அவர் இந்த ஜாதியில் இருந்துதான் வரமுடியும், இந்த மதத்தில் இருந்துதான் வரவேண்டும் என்பது இல்லை. அரசு அதிகார அடுக்குகள் அத்தனையிலும், அரசியலின் அத்தனை பதவிகளிலும், கவுன்சிலர் முதல் கடைக்கோடி தலைவர் வரை, பொதுநலத்துடன் கூடியவர்கள் பதவியில் இருக்க வேண்டும்.
இவர்கள்தான் நாம் விரும்பும்படி லஞ்ச லாவண்யமற்ற நல்ல சமுதாயத்தை எடுத்து செல்லக் கூடியவர்களாக இருக்க முடியும். ஒரு அப்துல்கலாம் மட்டும் போதாது; அவரும் இன்று நம்மிடம் இல்லை. 'மக்களுக்காக நான்' என்று சொல்லிக்கொண்டு பொதுநல போர்வையில், சுயநலத்துடன் இருக்கும் தலைவர்களால் நாம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறோம்.
சிங்கப்பூரை பாருங்கள்
சிங்கப்பூரை பற்றி இவ்வளவு பேசுகிறோம் என்றால், அதன் அமைப்பும் வளர்ச்சியும் கடந்த ஆண்டுகளில் உருவானதுதான். நாமும் அந்த அளவிற்கு வளர வேண்டியவர்கள்தான். அந்த வளர்ச்சி தடைபட்டதற்கு யார் காரணம்? நாம்தான். நாம் ஒரு லீகுவான் போன்று தன்னலமில்லாத தலைவரை உருவாக்க தவறிவிட்டோம்.
நம் அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறியாது, அத்தனைக்கும் ஆசைப்பட்டு, இன்று நம் அடிப்படைத் தேவை என்பதே கேள்விக்குறியாகி
விட்டது. யோசித்துப்
பார்ப்போமானால், தண்ணீரே வராத குழாய்க்கு அல்லது எப்போது வரும் என்று
தெரியாத குழாய்க்கு தண்ணீர் வரிகட்டுகிறோம். சரியான ரோடே இல்லாத பகுதிகளுக்கு, வரி செலுத்துகிறோம்.
வாகனம் வாங்கும் போது சாலை வரி செலுத்துகிறோம். ஆனால் நல்ல சாலைகளை பார்க்க முடிகிறதா? வாஜ்பாய் புண்ணியத்தால் தங்க நாற்கர சாலை ஒன்றை பெற்றோம். அதற்கும், நாம் இன்றும் வரி செலுத்திக் கொண்டு இருக்கிறோம்.
நம் தலைமுறை நன்றாக இருக்க வேண்டுமானால், நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எப்படி உருவாக்குவது? அப்படி நல்ல தலைவர்கள் வந்தால் நமக்கு என்ன கிடைக்கும்? என்பதை சற்றே யோசிக்க வேண்டும். தலையில் தலைக்கவசம் அணியாவிட்டால், வண்டியை நிறுத்தி கேள்வி கேட்கும் அரசிடம், சாலை வரிகட்டும் நாம், 'ஏன் சாலை சரியில்லை' என்று கேட்கமுடியுமா? முடியாது.
லஞ்சமும் சமூகமும்
லஞ்சம் கொடுத்து வேலை பெறும் அரசு ஊழியரிடம், நேர்மையையும், கண்ணியத்தையும் எதிர்பார்க்கமுடியுமா? அவர் அளித்த பணத்தை எப்படி வேகமாக எடுக்கலாம் என நினைத்துதானே பதவியில் சேருகிறார். இவரால் சமூகத்தில் என்ன நல்ல மாற்றத்தை கொண்டுவந்துவிட முடியும்? பெரும்பாலான துறைகளில், சிறிய வேலைகூட, காசில்லாமல் நடக்காது என்பது காலத்தின் கட்டாயமாக மாற்றப்பட்டு, நாமும் பழகிப் போனோம். வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்களின் வரிப்பணத்தை அல்லவா கொள்ளையடிக்கிறார்கள்.
இதற்கு இந்த கட்சி ஆட்சி, அந்த கட்சி ஆட்சி என்ற வேறுபாடு இல்லையே. அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்திற்காக ஜாதி, மதம் என்னும் போர்வைகளையும் போர்த்திக் கொள்கிறார்கள். நடந்ததை பற்றி பேசி ஒன்றும் பலன் இல்லை.
இனிஎன்ன செய்வது. பொதுநலம் மிக்க தலைவர்களால்தான் சமூகத்தை மாற்றி அமைக்க முடியும். யார் அவர்கள்? அவர்களை எப்படி உருவாக்குவது? நல்ல தலைவர்களை சினிமாவிலும், ஜாதியிலும், மதத்திலும் தேடுவதை முதலில் நிறுத்திக் கொள்வோம். அவர்கள் நல்ல தலைவராவதை நாம் தடுக்கவில்லை. அவர்கள் மட்டும்தான், நல்ல தலைவராக முடியும் என்ற மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும்.
மக்களே காரணம்
லீகுவான், சிங்கப்பூரையே மாற்றியதற்கு அந்த மக்களே காரணம். மக்கள் இனம், மொழி, தவிர்த்து அவரை உருவாக்கினார்கள். அவர் அதற்கு பிரதிபலன் பாராது உழைத்து, உலகின் மிகச்சிறந்த ஒழுக்கமான, அடிப்படை வசதிகள், கட்டமைப்புடன் கூடிய நாடாக அதைமாற்றிக் காட்டினார். அதனைக்கண்டு வியக்கிறோம். ஆனால் நாம் மாற மறுக்கிறோம்.
சற்றே உற்றுபாருங்கள். அங்கு மக்கள் சினிமாவையோ, இனத்தையோ, மொழியையோ அவரிடம் பார்க்கவில்லை. அவரும் கடைசிவரை அந்நாட்டின் எல்லா மக்களுக்காகவும் திட்டங்கள் வகுத்தார். அங்குதான் தனிமனிதனின் அடிப்படை வசதிகள் நிறைவடைகின்றன.
நமக்காக உழைக்கப்போகும் தலைவரை தேர்ந்தெடுக்கும் போது, அவர் பொதுநலம் உடையவரா எனப் பார்ப்போம். அவர் மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவரா என பார்ப்போம்.
படித்தவர்கள் எல்லாம் நல்ல தலைவர்கள்; படிக்காதவர் எல்லாம் தலைவர் ஆகமுடியாது என்பதும் இல்லை. நல்ல சிந்தனையும், உயர்ந்த சமுதாய நோக்கமும்தான் நல்ல தலைவனுக்கு அவசியம்.
இது நமக்கு கட்டாயம்
மக்களாகிய நாம் நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொதுநலன் உடைய மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கினால் என்ன கிடைக்கும்? கலப்படமற்ற உணவு பொருட்கள், துாய குடிநீர், அனைவருக்கும் சுகாதாரமான வாழ்க்கை, கட்டுப்பாடற்ற மின்சாரம், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சாலைகள், போக்குவரத்து வசதிகள் கிடைக்கும். அரசு அலுவலகங்களில் உடனுக்குடன், லஞ்சம் தராமல் வேலை நடக்கும். எல்லோருக்கும் தேவையான கல்வி சமமாக கிடைக்கும். இளைஞர்களுக்கு சிபாரிசின்றி வேலை கிடைக்கும்.
இந்த மாற்றங்கள் நிகழ அரசியலுக்கு நல்லவர்கள், இளைஞர்கள் வரவேண்டும். சமூகத்தை மாற்றும் எழுச்சி உணர்வு மிக்க இளைஞர்கள் அரசியலுக்கு அவசியம். எந்த கட்சியினராக இருந்தாலும் பரவாயில்லை; இவர்களால் மட்டும்தான் நாம் எதிர்பார்க்கும் நல்ல சமுகத்தை உருவாக்கமுடியும்.-முனைவர் எஸ்.ராஜசேகர்எழுத்தாளர், மதுரை90958 99955

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X