எதிர்கால சந்ததியினருக்கு, மிகப்பெரும் தலைவலியாக இருக்கப்போவது, 'இ-வேஸ்ட்' எனப்படும், மின்னணு குப்பை. அவற்றை கையாள வேண்டிய முறைகள் குறித்து, இளம் தலைமுறையிடம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, கல்வியாளர்களுக்கு உள்ளது என்கிறார், சுற்றுச்சூழல் ஆர்வலர், ரவி செந்தில்குமார், 37. மின்னணு குப்பை மேலாண்மை குறித்து அவர் கூறியதாவது:
குறைத்தல், மீண்டும் மீண்டும் பயன்படுத்தல், மறுசுழற்சி ஆகிய குறிக்கோளுடன், 'யங் இண்டியன்ஸ்' எனும், இளைஞர் அமைப்பு மூலம், மின்னணு குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வில், நாங்கள் இறங்கி உள்ளோம்.
நச்சுப்பொருட்கள்ஐ.நா., கருத்துப்படி, ஆசியாவில், மின்னணு குப்பை அதிகமுள்ள இரண்டாவது நாடு இந்தியா. அதில், மும்பைக்கு அடுத்துள்ள தமிழகத்தில், சென்னை முதலிடத்தில் உள்ளது.
கணினி, மடிக்கணினி, அலைபேசி, சார்ஜர், 'டிவி' வானொலிப்பெட்டி, குறுந்தகடு, குளிர்சாதனம் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் தான், எதிர்கால சந்ததியினரை அச்சுறுத்தும் பூதங்களான மின்னணு குப்பை.அந்த கருவிகள், பயன்பாடற்ற நிலைக்கு சென்றால், அவற்றை தயாரித்த நிறுவனங்களே, வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவற்றை மறுசுழற்சி செய்யவேண்டும் எனும் சட்டம், பல்வேறு நாடுகளில் உள்ளது. நம்நாட்டில், அப்படி இல்லை.
நாம் பயன்படுத்தும் கருவிகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப் பொருட்கள், பாதரசம், காரீயம் போன்ற நச்சுப்பொருட்கள் உள்ளன. கடந்த, 1990களில், தேவையான வீடுகளில் மட்டும், 'டிவி', தொலைபேசி போன்ற கருவிகள் இருந்தன. அவை பழுதானாலும், பழுதுநீக்கும் கடைகள் அதிக அளவில் இருந்தன. ஆனால், 2000ம் ஆண்டு முதல், ஒருவரிடமே, ஒன்றுக்கும் மேற்பட்ட அலைபேசிகள், ஒரு வீட்டில், இரு 'டிவி'க்கள் என்ற நிலை ஏற்பட்டது.
புதிய தொழில்நுட்பம்:அதற்கு, பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு, புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, பல்வேறு வசதிகளுடன், மின்னணு பொருட்களை தயாரித்ததே காரணம். அதிக போட்டி இருந்ததால், குறைந்த வட்டியில் கடன் வசதி கூட, செய்து தரப்பட்டது.
புதிய தொழில்நுட்ப மோகத்தில் இருந்தோர், அந்த கருவிகளை அடிக்கடி மாற்றி, குப்பை தொட்டியில் வீசும் பழக்கத்திற்கு மாறினர். அதன் விளைவு, 2006ம் ஆண்டு மட்டும், 1.5 லட்சம் டன்னாக இருந்த மின்னணு குப்பை, 2012ல், 8 லட்சம் டன்னாக உயர்ந்தது.
குப்பையை, தொட்டிகளில் வீசுவதால், நிலம் விஷமாகி, நிலத்தடி நீர், காற்றை, நச்சுத்தன்மை ஆக்குகிறது. மாசடைந்த நிலம், நீர், காற்றை பயன்படுத்தும் உயிரிகளுக்கு, புற்று, தொற்று, தோல், சிறுநீரக, இதய, பாலின குறைவு, கருச்சிதைவு உள்ளிட்ட நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளதாக, மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நமக்கு பயன்படாத கருவிகளை, குப்பை மற்றும் காயலான் கடையில் வீசுகிறோம். அந்த கடைக்காரர்கள், கருவியில் உள்ள முக்கிய பாகங்களில் இருக்கும் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் போன்ற உலோகங்களை உடைத்து எடுத்துவிட்டு, மீதியை வீசிவிடுகின்றனர். சிலர் அவற்றை எரித்து, சுவாசக் கோளாறை ஏற்படுத்தும், நச்சு வாயுவை வெளியிட வைக்கின்றனர்.
மறுசுழற்சிஅந்த கருவிகளால், பூமிக்கும், உயிரிகளுக்கும் ஏற்படும் பாதிப்பு களை, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கி, அவர்களிடம் இருந்து, பெரும் அளவிலான மின்னணு குப்பையை பெற்று, முறைப்படுத்தப்பட்ட மறுசுழற்சியாளர்களிடம் கொடுத்து, மேற்பார்வை செய்கிறோம்.
அதை ஆரோக்கியமானதாக மாற்ற, அவர்களுக்கு போட்டிகளை அறிவித்து, பரிசு வழங்குகிறோம். கடந்த, 2013ல், 500 கிலோ குப்பையை, நான்கு பள்ளி மாணவர்களிடம் இருந்தும், 2014ல், 3,000 கிலோ குப்பையை, 36 பள்ளி மாணவர்களிடம் இருந்தும், கடந்த ஆண்டு, 10,000 கிலோ குப்பையை சேகரித்து, மறுசுழற்சி செய்தோம்.
அந்த போட்டியில் வென்று, முதலிடம் பிடித்தவருக்கு, 10,௦௦௦ ரூபாய், இரண்டாம் இடத்திற்கு, 7,500 ரூபாய், மூன்றாம் இடத்திற்கு, 5,௦௦௦ ரூபாய் பரிசு வழங்கினோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: 99625 97759
- நமது நிருபர் -