மிரட்டுது சிவப்பு விளக்கு அம்பாஸிடர்... மிரட்டலால் கிடைத்தது இன்னோவா| Dinamalar

மிரட்டுது சிவப்பு விளக்கு அம்பாஸிடர்... மிரட்டலால் கிடைத்தது 'இன்னோவா'

Added : பிப் 12, 2016
Share
காலை ஆறரை மணியாகியும், நகரை விட்டு, பனிப்போர்வை நகர்ந்தபாடில்லை. ஜெர்க்கின், ஸ்கார்ப் சகிதமாக, ரேஸ்கோர்ஸ்சில் மித்ராவுக்காகக் காத்திருந்தாள் சித்ரா.''அக்கா! இதெல்லாம் எதுக்கு...நம்மூரு குளிரை 'என்ஜாய்' பண்ணணும்க்கா'' என்றவாறு, 'என்ட்ரி' ஆனாள் மித்ரா.''இவளுக்கு பெரிய ஸ்டீல் பாடி...பேசாம வாடி'' என்று முதுகில் தட்டி வரவேற்றாள் சித்ரா. இருவரும் நடக்க
மிரட்டுது சிவப்பு விளக்கு அம்பாஸிடர்... மிரட்டலால்  கிடைத்தது 'இன்னோவா'

காலை ஆறரை மணியாகியும், நகரை விட்டு, பனிப்போர்வை நகர்ந்தபாடில்லை. ஜெர்க்கின், ஸ்கார்ப் சகிதமாக, ரேஸ்கோர்ஸ்சில் மித்ராவுக்காகக் காத்திருந்தாள் சித்ரா.
''அக்கா! இதெல்லாம் எதுக்கு...நம்மூரு குளிரை 'என்ஜாய்' பண்ணணும்க்கா'' என்றவாறு, 'என்ட்ரி' ஆனாள் மித்ரா.
''இவளுக்கு பெரிய ஸ்டீல் பாடி...பேசாம வாடி'' என்று முதுகில் தட்டி வரவேற்றாள் சித்ரா. இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
''நான் மட்டுமா சொல்றேன்...மோடி 'விசிட்'டுக்காக, இங்க 'கேம்ப்' அடிச்சிருந்த வடநாட்டு ஜல்லிக்கட்டு மினிஸ்டர், 'என்னய்யா, இந்த ஊரு 'க்ளைமேட்' சூப்பரா இருக்கு. மக்களும் 'டீசன்ட்'டா இருக்காங்க. ஊரை மட்டும் குப்பையா வச்சிருக்காங்க'ன்னு சொன்னாராம்'' என்றாள் மித்ரா.
''உண்மை தான. உள்ளாட்சித் துறை அமைச்சர் இருக்குற ஊரே இப்பிடி இருந்தா, மத்த சிட்டி எப்பிடி இருக்கும்னு நினைச்சிருப்பாருல்ல'' என்றாள் சித்ரா.
''அதை விடுக்கா...மோடி 'விசிட்'ல கவனிச்சியா...ஜிகேஎஸ் ஒதுங்கிட்டாரு''
''ஒதுங்கிட்டாரா...ஒதுக்கிட்டாங்களா?''
''எம்.பி., எலக்ஷன்ல, தோத்துப்போனதுக்கு யாரு, எப்பிடி காரணமா இருந்தாங்கன்னு விலாவாரியா உளவுத்துறை ரிப்போர்ட் மேல போயிருச்சாம். அதனால தா, சில பேரை ஒதுக்கிட்டாங்களாம்''என்றாள் மித்ரா.
''மோடியை சந்திச்சதுல இண்டஸ்ட்ரிக் காரங்க, ரொம்ப 'ஹேப்பி' ஆயிட்டாங்க. மூணே நாள்ல 'அப்பாயின்ட்மென்ட்' கிடைச்சிருச்சு. நேர்ல போனப்போ, எந்திரிச்சு, கும்பிட்டு, வரவேத்தாராம். அப்புறம், 'உங்க பிரச்னையைச் சொல்ல 'டைம்' போதாதுன்னு தெரியும். டில்லி வாங்க. விளக்கமாப் பேசலாம்'னாராம்'' என்றாள் சித்ரா.
''இந்த வருஷம் சென்ட்ரல் பட்ஜெட்கள்ல, நம்ம ஊருக்கு 'ஸ்பெஷல் ட்ரீட்' இருக்கும்னு நினைக்கிறேன்'' என்றாள் மித்ரா.
''மோடியை அவுங்க பாத்ததுக்கு அப்புறம்தான்...நாலே முக்கால் வருஷமா, சி.எம்., மைப் பார்க்க முடியலைங்கிற விஷயம், பரபரப்பா பேசப்படுது'' என்றாள் சித்ரா.
''அக்கா...ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திட்டத்தையாவது, உடனே ஆரம்பிக்கணும்னு சி.எம்., ஆபீஸ்ல இருந்து, கார்ப்பரேஷனுக்கு உத்தரவு வந்திருக்காம். அதுக்கு முன்னாடி, வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பிரச்னையை சரி பண்ணச் சொல்லிருக்காங்க''
''அந்த கம்பெனிக்காரங்க, 'இவ்ளோ நாளா கமிஷன் கொடுத்தே, எந்த வேலையும் ஒழுங்காப் பண்ண முடியலை'ன்னு மேல சொல்லிட்டாங்களாம்''
''இப்போ சி.எம்., ஆபீஸ்ல 'சிக்னல்' தந்த பிறகு, தினமும் 300 மெட்ரிக் டன் வரை, குப்பையைப் பிரிச்சு, உரம், 'லேண்ட் ஃபில்லிங்'குக்கு அனுப்புறாங்களாமே!''
''கார்ப்பரேஷன்ல வேற ஒரு 'மேட்டர்' ஓடிட்டு இருக்கு...தெரியுமா?''
''என்னது...எந்தெந்த கவுன்சிலருக்கு எம்.எல்.ஏ., 'சீட்' கிடைக்கும்னா?'' என்றாள் மித்ரா.
''அதில்லைடி...கார்ப்பரேஷன் மேடத்துக்கு, ஆளும்கட்சி வி.ஐ.பி., செம்ம 'டோஸ்' விட்டதா பேசிக்கிறாங்க. இப்போ ஆபீசுக்கே மேடம் சரியா வர்றதில்லை. வந்தாலும், கொஞ்ச நேரத்துல கிளம்பிர்றாங்களாம்'' என்றாள் சித்ரா.
''இவுங்க ஆபீசுக்கே வர்றதில்லை. வடக்குல இருக்குற ஒரு கார்ப்பரேஷன் ஆபீசர், வீடு வீடாப் போற, புதுமையான 'லஞ்ச யாத்திரை'யை 'அமல்' படுத்திருக்காரு'' என்றாள் மித்ரா.
''அதென்னடி, லஞ்ச யாத்திரை?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
''சொத்து வரி விதிப்பு, வாட்டர் கனெக்ஷன் கேட்டு வர்ற விண்ணப்பங்கள்ல, 'பி.ஐ.'ன்னு அவரு கையெழுத்துப் போடுவாராம். அப்டின்னா, 'பர்சனல் இன்ஸ்பெக்ஷன்'னு அர்த்தமாம். அப்புறம், அவரே அந்த வீட்டுக்கு நேர்ல போயி, 'வேற யாருக்கும் நீங்க பணம் தர வேணாம். எல்லாம் நானே முடிச்சுக் கொடுத்துருவேன்னு சொல்லி, காசை வாங்கிக்கிறாராம்''
''அப்பிடின்னா, இதை நம்பி, பொழப்பு நடத்துற கவுன்சிலரு, பிளம்பரு, கிளர்க் எல்லாம் எங்க போறது?''
''அவுங்க எல்லாம் சேர்ந்து, கமிஷனர்ட்ட புலம்ப...அவரு கூப்பிட்டு 'டோஸ்' விட்டதாத் தகவல்'' என்றாள் மித்ரா.
''டிஎம்கே 'மாவட்டங்களுக்கு' அவுங்க தளபதி செம்ம 'டோஸ்' கொடுத்தாராம்'' என்றாள் சித்ரா.
''இப்பவே எதுக்கு 'டோஸ்' விடுறாரு. இன்னும் அவருக்கு பல வாய்ப்புகள் இருக்கே'' என்று சிரித்தாள் மித்ரா.
''அவரோட அன்புத்தங்கை, இங்க வந்து ஆர்ப்பாட்டம் நடத்துனாங்கள்ல. அதுக்கு, மகளிர் கூட்டம், பிரமாதமா இருந்ததா, அவருக்கு 'ரிப்போர்ட்' போயிருக்கு. நான் எத்தனையோ தடவை கோயம்புத்துாரு வந்திருக்கேன். ஒரு தடவை கூட இவ்ளோ 'லேடீஸ்' கூட்டம் வரலை. இப்ப மட்டும் எப்பிடிக் கூட்ட முடிஞ்சதுன்னு, 'மாவட்டங்களை' கூப்பிட்டு, கடிச்சு விட்டாராம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...அந்தக் கட்சில இருக்குற 'வீரமான' மாவட்டம், போன எலக்ஷன்ல வடக்குல நின்னப்போ, பிரசாரத்துக்கு கருப்புப் பொட்டு வச்சிட்டு வந்தது, பெரிய சர்ச்சையா கிளம்புச்சு. இப்பவும், அவரு சோழி உருட்டிப் பார்த்து, 'உங்களுக்கு வடக்கு ஆகாது. தெற்குல நில்லுங்க'ன்னு சொன்னதால தான், தெற்கைக் கேக்குறாராம். பகுத்தறிவுக் கட்சியோட பரிணாம வளர்ச்சியைப் பாரு'' என்றாள் மித்ரா.
''வடக்குன்னியே...டாஸ்மாக் வடக்கு மாவட்டத்துல போன வாரம் திடீர்னு, பல 'பார்'களை மூடுனாங்களே. அதோட பின்னணி தெரியுமா?'' என்றாள் சித்ரா.
''சிண்டிகேட் போட்டு, டெண்டர் எடுக்காததால, மாவட்ட ஆபீசர் கடுப்பாகி, 126 'பார்'களையும் மூடச் சொன்னதா கேள்விப்பட்டேன். ஆனா, பல 'பார்'களை மூடவே இல்லியே''
''நவம்பர்ல நடக்க வேண்டிய 'டெண்டர்' அது. நடத்தவிடாம, ஆளும்கட்சிக்காரங்க, பல 'பார்'களை அனாமத்தா நடத்திட்டு இருக்காங்க. கவர்மென்ட்டுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபா, கட்சிக்காரங்களுக்குப் போகுது. மாவட்ட ஆபீசர் கண்டு பிடிச்சு, நோட்டீஸ் கொடுத்து, மூடலைன்னா 'சீல்' வைப்பேன்னு சொல்லிருக்காரு. ஆனா, அவரால ஒண்ணும் பண்ண முடியலை''
''இதைப்பத்தியெல்லாம், கவர்மென்ட்டுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் போட மாட்டாங்களா?'' என்றாள் மித்ரா.
''நம்மூரு உளவுத்துறையா...பெங்களூல மாட்டுன ஐ.எஸ்., தீவிரவாதிகள்ல ஒருத்தன், கோயம்புத்துார்க்காரன். பிளஸ் 2 வரைக்கும் இங்க தான் படிச்சிருக்கான். அப்புறமும் தொடர்புல இருந்திருக்கான். ஐ.எஸ்., எஸ்.பி., எஸ்.ஐ.சி.,ன்னு விதவிதமா உளவுப்
புலிங்க இருக்காங்களே. என்னத்தைக் கண்டு பிடிச்சாங்க?'' என்றாள் சித்ரா.
''உண்மை தான்...நம்மூரு பெரிய போலீஸ் ஆபீசர் வீட்டுக்குப் பக்கத்துல ரிட்டயர்டு ஐ.ஏ.எஸ்., ஆபீசர் ஒருத்தரு, குடியிருக்காரு. இன்னமும் வெள்ளை அம்பாஸிடர்ல சிவப்பு சுழல் விளக்கோட, நம்பர் போர்டுல 'அ' 'G' ன்னு போட்டுக்கிட்டு, கவர்மென்ட் ஆபீஸ்களுக்குப் போய் மெரட்டிட்டுத் திரியுறாரு. அதுவே, இவுங்களுக்குத் தெரியலை''
''மித்து...நீ சொன்னவரு, டிரான்ஸ்போர்ட்ல பெரிய பொறுப்புல இருந்தவரு தான...அவரு, இன்னமும் ஆர்டிஓ ஆபீஸ் டிரான்ஸ்பர், புரமோஷன் விஷயங்களெல்லாம் 'டீல்' பண்றாராம்''
''சிவப்பு விளக்கு அம்பாஸிடரைப் பத்திப் பேசவும், சிவப்பு, பச்சைத் துண்டு 'சாமி'ங்க வாங்குன புது 'இன்னோவா' ஞாபகம் வந்துருச்சு. நொய்யலை மீட்கப் போறோம்னு, பெருசா மாநாடு நடத்துனாங்களே. அந்த ரெண்டு 'சாமி'களுக்கும், ஆசிரமம் பேருல யோகம் அடிச்சிருக்கு. அவுங்கதான் ரெண்டு பேருக்கும் 'இன்னோவா' வாங்கிக் கொடுத்திருக்காங்க''
''அவுங்க எதுக்கு மித்து, இவுங்களுக்கு வாங்கிக்கொடுக்கணும்?''
''நொய்யலை ஆக்கிரமிச்சதைப் பத்தி, வலுவா ஆதாரத்தை திரட்டிட்டுதான், இந்த மாநாட்டை நடத்திருக்காங்க. அதை 'ஆஃப்' பண்றதுக்கு தான் இந்த 'இன்னோவா' அன்பளிப்பு. இந்த ஆதாரத்தைத் திரட்டிக்கொடுத்தது, வீரப்பனோட தொடர்புல இருந்த முன்னாள் ரிப்போர்ட்டர் ஒருத்தரு. அவரை தோழர் சு'சாமி'யும், 'ஜனதா' சாமியும் ஏமாத்திட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.
''இந்த சு.சாமி தான், மக்கள் நலன் பேசுற கூட்டணியில சூலுார் தொகுதி வேட்பாளர்ங்கிறாங்க'' என்றாள் சித்ரா.
''அது தெரியலை...நம்ம பழைய 'டவுன் டாடி' சாமி, அவரோட டாக்டர் பையனுக்கு பட்டாபிஷேகம் நடத்துனது மாதிரி, ரத்தினபுரியில 'அம்மா' பொறந்த நாள் விழாவை, பிரமாண்டமா செலவு பண்ணி நடத்துனாராம். புலித்தலைவர் கவுன்சிலர் தான் ஏற்பாடாம்'' என்றாள் மித்ரா.
''என்னத்த...11 ஆயிரம் பொருள் தர்றேன்னு சொல்லி, சோப்பு டப்பா, சீப்பு, டம்ளர் கொடுத்திருக்காங்க. கூட்டமே போதையில மிதந்துச்சாம். நிகழ்ச்சி முடியுறப்ப, ஹெல்மெட்டைக் காணோம், செயினைக் காணோம்னு பல பேரு புலம்பிருக்காங்க'' என்று சித்ரா சொல்லும்போதே, எதிரில் ஆளும்கட்சி பிரமுகர்கள் நடந்து வர, இருவரும் பேச்சை நிறுத்தினர். நடை ஓட்டமானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X