பூப்பதற்கே செடி

Added : பிப் 14, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
உயிர்க்காற்று இல்லாமல் யாரேனும் உயிர் வாழ முடியுமா? காதலை உணர்ந்திடாத மனிதர்கள் யாராவது உலகில் இருக்கத்தான் முடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது. ஏதோ ஒரு நொடியில் ஏதோ ஒரு கணத்தில் யார் மீதாவது, 'கண்ணோடு கண்நோக்கும்' காதல் நிச்சயம் முகிழ்ந்திருக்கவே செய்யும்.காதலற்ற உலகம் வெறுமையானது. வறண்ட பாலைவனம் போன்றது. காதல் புகுந்த மனது கனவுகளை விதைக்கும், நிலவை
பூப்பதற்கே செடி

உயிர்க்காற்று இல்லாமல் யாரேனும் உயிர் வாழ முடியுமா? காதலை உணர்ந்திடாத மனிதர்கள் யாராவது உலகில் இருக்கத்தான் முடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது. ஏதோ ஒரு நொடியில் ஏதோ ஒரு கணத்தில் யார் மீதாவது, 'கண்ணோடு கண்நோக்கும்' காதல் நிச்சயம் முகிழ்ந்திருக்கவே செய்யும்.

காதலற்ற உலகம் வெறுமையானது. வறண்ட பாலைவனம் போன்றது. காதல் புகுந்த மனது கனவுகளை விதைக்கும், நிலவை முத்தமிடும், நட்சத்திரப் பூக்களை சூடும். ஆகாயம் பூமி என அத்தனையும் தன் வசப்படுத்தும்.காதல் பூத்த மனது வாழ நினைக்கும் நுாறாண்டுகள். அதுதொலைத்த மனது தன்னுடன் சேர்த்து உலகையே தொலைத்து வெறுக்கும்.காதல் எவ்வளவு பெரிய தாக்கம் என்பது பாரதியின் வரிகள் உணர்த்தும்.'காதல் காதல் காதல்காதல் போயின் சாதல்' என்றார்.இதற்குப் பொருள் காதல் இல்லாது போனால் இறந்து போ என்பதல்ல, காதல் இல்லாத வாழ்வு இறப்பிற்கு சமம் என்பதுதான். தன் மனைவியின் மீதுள்ள நேசிப்பை, அன்பை காதலை அவள் தோளில் கைப்போட்டு நடந்து தெருவையே வேடிக்கைப் பார்க்க வைத்த காதல் வித்தகன் பாரதி. அவனுக்கு காதல் கிறுக்கு பிடித்திருந்தது. அதனால்தான் தன் காதலியை வர்ணிக்கும்போது, 'அமுது ஊற்றின ஒத்த இதழ்களும், நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்' என்று மையல் கொண்டான். காதலிக்கும் போது வானத்தில் இருக்கும் தேவனாக உணர்கிறேன் என்று தன்னையே காதலுக்கு ஒப்புமைக் கொடுத்தான்.

பாரதிதாசன், 'கன்னியின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்றார். காதல் கொண்ட பெண்ணின் கண்களுக்கு அவ்வளவு சக்தி. இவ்விருவரும் போன நுாற்றாண்டில் பிறந்தவர்கள். 2,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர்கள் புலவர்கள் மட்டும் எப்படி சும்மா இருந்திருப்பார்கள்? அவர்கள் காதலை உருகி உருகி எழுதி வைத்து விட்டுப்போய் விட்டார்கள். திருவள்ளுவர், 'கண்ணோடு கண்ணினை நோக்கிக்கின் வாய்ச் சொற்கள் எந்த பயனும் இல' - வார்த்தைகளால்விவரிக்கவே முடியாத காதலை கண்கள் பேசுவதாய் இரண்டு வரி திருக்குறளில் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்.தண்ணீர் குடிக்க வந்தவன் தன்னையே உற்றுப் பார்ப்பதை உணர்ந்த பெண், 'கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்' என்கிறாள் கலித்தொகைப் பெண். தன்னைக் கவர்ந்தவனை கள்வன் என, செல்லமாய் குறிப்பிடுகிறாள்.காதல் இன்று நேற்றல்ல, மனித குலம் தோன்றிய முதலே தோன்றி விட்டது. நம் தமிழ் இலக்கியத்தில் புறநானுாறு பதிற்றுப் பத்து என இரண்டு நுால்கள் மட்டுமே வீரத்தைப் போற்றுகின்றன.

அகநானுாறு, குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை, ஐங்குறுநுாறு, பரிபாடல் என காதலைப் பாடிய நுால்கள்தான் அதிகம்.இத்தனை துாரம் காதலைப் போற்றியவர்கள், கொண்டாடியவர்கள் ஏன் காதல் தினம் என்று ஒன்றை வைக்கவில்லை?அவர்கள் காதலை தினம், தினம் கொண்டாடினர். நாற்று நடும்போது, களையெடுக்கும் போது, ஏற்றம் இறைக்கும் போது, கஞ்சி எடுத்துச் செல்லும் போது, அடுப்பங்கரையில் சமைக்கும் போது என வாழ்வியலை ஒட்டியே காதலும் அனைத்து இடங்களிலும் நிரம்பி இருந்தது.ஆற்றங்கரையில் நீர்ப் பிடித்து வரும் போது எதிரே காதலன் வந்து விட்டால் என்ன செய்வாள் பெண்? குடத்து தண்ணீருக்குப் பதிலாய் அவள் அல்லவா தளும்பி நிற்பாள்.உயர்ந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி தன் அன்புக்குரியவள் ஆடினால் அதைப் பார்த்த அவளது காதலனின் மனம் அல்லவா ஆகாயத்தில் ஊஞ்சலாடும்,மேலும் கீழுமாய்.நம்முடைய வாழ்வில் திருமணத்துக்குப் முன் திருமணத்துக்குப் பின் என இரண்டு நிலைகளிலும் காதல் இருந்தது.

காதலற்ற மனைவியின் கரங்களால் உணவுண்ணும் கணவன் விஷத்தை உண்பதற்கு சமம் என்கிறார் அவ்வையார். அதே அவ்வையார், 'இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றுமில்லை' என்கிறார். காதல் கொண்ட மனைவி வீட்டில் இருந்தால், வீட்டில் இல்லாதது எதுவுமே இல்லை என்று குறிப்பிடுகிறார். வள்ளுவரோ, 'அன்பும் அறனும்' என்று முதலில் காதலைத்தான் குறிப்பிடுகிறார். 'உடம்பொடு உயிரிடை' என்னும் குறளில் எனக்கும் என் மனைவிக்கும் உள்ள உறவு உயிருக்கும், உடலுக்கும் உள்ள உறவு என்கிறார்.கணவன் பொருட் தேடி பிரிந்தப் பிறகு, உடல் மெலிந்து கைவளை கழன்று விழ காத்திருந்த பெண்ணின் காதல்தான் நம்முடையது.காதல் இலைகளை எல்லாம் பூக்களாய் பார்க்கும். காதல் இல்லாத வாழ்க்கை கணப்பொழுதும் நகராது. மேலை நாட்டினருக்கு புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என இரண்டே இரண்டு பண்டிகைகள்தான் கொண்டாடுவதற்கு இருந்தன. நமக்கு மாதமெல்லாம் பண்டிகை. குடும்பத்தோடு சேர்ந்து இருக்கவும், மனைவி, மக்கள், பெற்றோர், தாத்தா, பாட்டி என்று கூட்டுக்குடும்பமாய் வசித்தவர்கள் நாம்.

மேலை நாட்டினர் குழந்தைகளையே தனி அறையில் போட்டு துாங்க வைப்பர். பிளஸ் 2 முடித்தவுடன் அவனை வேலை பார்த்துக்கொண்டே படிக்க வெளியூருக்கு அனுப்பி விடுவர். அதன் பிறகு அவன் பெற்றோருடன் சேர்வானா? தனக்கென்று துணையை அவனே தேடிக்கொள்வானா அவனுக்கும் தெரியாது, அவனைப் பெற்றவர்களுக்கும் தெரியாது. அதனால்தான் அங்கே பிளஸ் டூ முடித்தவுடன் கிராஜுவேஷன் பங்ஷனை பள்ளிக்கூடங்களிலும், வீடுகளிலும் வெகுவாக கொண்டாடுகின்றனர்.கணவன் ஒரு பக்கம், மனைவி ஒரு பக்கம், குழந்தைகள் ஒரு பக்கம் என மூலைக்கு ஒருவராய் வாழும் அவர்களுக்கு ஒன்று சேர்வதற்கு நாட்களும் காரண காரியங்களும் தேவைப்பட்டன. அப்படி தேவைப்பட்ட நாட்கள் தான், அன்னையர் தினம், தந்தையர் தினம், தாத்தா பாட்டி தினம், நண்பர்கள் தினம் எல்லாம்.நமக்கு ஒரு நாள் மட்டும் தான்
அம்மாவா? ஒற்றை தினம் மட்டும்தான் அப்பாவா?

இல்லையல்லவா. அப்படித்தான் இந்த காதலர் தினமும். நமக்கு எல்லா நாட்களிலும் காதல் மழை பெய்ய வேண்டும். போகும் பாதையெங்கும் பூக்கள் துாவ வேண்டும்.ரோமன் நாட்டைச் சேர்ந்த மன்னன் ராணுவத்திற்கு இளைஞர்களைத் தேடினான். இளைஞர்களோ திருமணம் செய்துகொண்டு போருக்கு வர மறுத்தனர். அரசன் திருமணத் தடைச் சட்டம் கொண்டு வந்தான். ஒரு பாதிரியார் அவர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். பாதிரியாரை கொண்டு வந்து சிறையிலிட்டான் மன்னன். சிறையிட்ட பாதிரியாருக்கும் சிறைக்காவலர் மகளுக்கும் காதல் அரும்பியது. ஆனாலும் என்ன, மன்னன் அந்தப் பாதிரியாருக்கு மரண தண்டனை விதித்தான். மரணத்திற்கு முன் அந்தப் பாதிரியார், தான் காதலித்தப் பெண்ணுக்கு, 'ஐ லவ் ப்ரம் வேலன்டைன்' என்று கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு, கடைசியில் ஒரு பிப்., 14ல் மூச்சை விட்டார்.அவர் பெயரில்தான் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாடுகின்றனர். ஒருவர் இறந்த தினத்தில், அவர்கள் காதலைக் கொண்டாடுகின்றனர். அது எதற்கு நமக்கு?
இ-மெயில்: eslalitha@gmail.com

- இ.எஸ்.லலிதாமதி -
எழுத்தாளர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (1)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
14-பிப்-201618:11:30 IST Report Abuse
மலரின் மகள் அழகாக காதல் சொட்டச் சொட்ட எழுதியிருக்கிறார். இவர் காதலன் என்ன தவம் செய்தவரோ. காதலைப்பற்றி ஆண்கள் வருணிப்பது சகஜம். பெண் வர்ணிப்பது அழகு ஆச்சரியம்.பாரதி, பாரதி தாசன், கண்ணதாசன் என்று ஆன் காதலர்களே கவிதை புனைந்தனர். காதல் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவானது. ஆனால் கொடுப்பது ஆண், பெறுவது பெண் என்பதே நம் காதல். மந்தி சிந்தும் கனிகளுக்கு ஆண் கவிகள் கெஞ்சும் என்பதே நம் காதல்.காமம் கெடுக்காத காதல் சிறந்தது.ஆனால் காமம் தவிர்த்த காதல் காதலே அல்ல என்பது நவீன நிஜம். பிசிராந்தையார் காதலை எழுதியிருக்கலாம். பெண் மீது கொள்ளும் காதலா உண்மையான காதல்? இல்லவே? அது மோகத்தின் வயப்படும். உண்மையான காதல் அன்பு சார்ந்தது? செம்புலப் பெயல் நீர் போல் அன்புடைய நெஞ்சம் தான் கலப்பதுவே காதல். அன்பு துறந்து காம மயக்கக் காதல் valentines தினம் கொண்டாடும் மோகம் சார்ந்தது அது காம இச்சை செயல். காதல் அதீதம் அடையும் பொது அது பக்தி ஆகிறது. காதலாகி கசிந்துருகி உயர்ந்தது அல்லவா? கேரளத்தின் கண்ணரத் தேவனின் காதல் போன்று சிறந்த காதலை உலகில் எங்கும் பார்க்க முடியாது. லைலாவவது மஜ்னுவாவது. உலகிலேயே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் உடன் கட்டை ஏறிய ஒரே ஆண். அதுவும் இவர் அரசன். அன்றில் பறவைக்கு இவர்தான் ஒப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X