கண் முன் அழியும் நீர் நிலைகள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

Updated : பிப் 15, 2016 | Added : பிப் 15, 2016 | கருத்துகள் (5)
Advertisement
கண் முன் அழியும் நீர் நிலைகள்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

கடந்த, 2015, நவ., - டிச., மாதங்களில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்திற்கு, உண்மையான காரணங்கள் என்ன என்பதைத் தேடி, நமது நிருபர் குழு தொடர்ந்து கள ஆய்வு செய்து வருகிறது.அதில் கண்டறியப்பட்ட உண்மைகள், எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல், 'உறைய வைக்கும் உண்மைகள்' என்ற பெயரில், தொடராக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இந்த தொடருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து, கடிதங்கள், மின்னஞ்சல், தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களும், ஆதரவுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. இதுதவிர, 'ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவுங்கள்' என்ற தலைப்பில், நமது நாளிதழில் வெளியாகும் அறிவிப்பை ஏற்று, நகரில் நடக்கும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் குறித்து, ஆதாரங்களுடன் கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.இவை ஒருபுறம் இருக்க, இந்த தொடரின் விளைவாக, ஒரு சில இடங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை மீட்கும் பணியில் பொதுப்பணி துறை ஈடுபட்டு வருகிறது, வரவேற்புக்குரியது.ஆனால், அதேநேரம், இன்னும் பல இடங்களில், நம் கண் முன்னால், நீர்நிலைகள், கால்வாய்கள் சிலரால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் சாதாரண மழை பெய்தால் கூட வெள்ளத்தில் மிதக்கும் சூழல் உருவாகும். ஆண்டு முழுவதும் குடிநீர் பஞ்சத்திற்கு ஆளாக வேண்டி வரும். அரசு, இந்த ஆக்கிரமிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.தொடர்ந்து நடந்து வரும் ஆக்கிரமிப்புகளில் ஒரு சிலவற்றை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். எங்கு, யார் ஆக்கிரமித்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என, மேயர் சைதை துரைசாமி, கடந்த மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார். நடவடிக்கை தீவிரமாக வேண்டும் என்பதே நமது கோரிக்கை.


மண் கொட்டி குளம் ஆக்கிரமிப்பு

சென்னை செங்குன்றம் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி, அத்திவாக்கம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில், 1.18 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. 2011 - 2012ம் ஆண்டு, இந்த குளத்தை சுற்றிக் கரை அமைத்து, மேம்படுத்தப்பட்டது.

ஊரக வளர்ச்சி துறையின் பராமரிப்பில் உள்ள இந்த குளம், கோட்டூர், அத்திவாக்கம், பள்ளிக்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவுகிறது.

குளத்தின் மேற்கில் நெல் அவிக்கும் களத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக, தொண்டு நிறுவனம் மூலம் கல்வி மையம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், அந்த கல்வி மையத்திற்கு முன்புறம் கட்டடம் கட்டும் வகை யில், குளத்தையும் ஆக்கிரமித்து, மண் கொட்டப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து, குளம் முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளதாக, பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். மேலும், குளம் ஆக்கிரமிப்பு குறித்து, அவர்கள், மாதவரம் தாலுகா வருவாய் துறையினரிடம் புகார் செய்துள்ளனர்.
இதுகுறித்து, மாதவரம் தாசில்தார் கூறியதாவது: குளம் ஆக்கிரமிப்பு குறித்து, புழல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி தலைவரிடம் விவரம் கேட்டுள்ளேன். ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் சி.அந்தோணி யிடம் இதுகுறித்து விசாரித்த போது, உரிய பதில் அளிக்காமல் நழுவினார்.

புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ''கடந்த ஒரு மாதம் விடுப்பில் இருந்தேன். இந்த புகார் பற்றி எந்த விவரமும் எனக்கு தெரியாது,'' என்றார்.
கழிவுநீரால் நாசமான சின்னக்கேணி குளம்


பராமரிப்பு இல்லாததால், சின்னக்கேணி குளத்தில் கழிவுநீர் தேங்கி, நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலம், 197வது வார்டில், ரங்கசாமி நாயக்கர் தெருவில், சின்னக்கேணி குளம் உள்ளது. பராமரிப்பு இல்லாததால், கழிவுநீர் கலக்கிறது. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து விட்டது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குப்பை ஆகியவை, குளத்தில் கலக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீட்டுக்குள் வருகின்றன. குளத்தை தூர்வார அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: குளத்தின் ஆவணங்களை வருவாய் துறையினர் முறைப்படி, எங்களிடம் ஒப்படைக்கவில்லை. மாநகராட்சி சார்பில், குளங்களை தூர்வார உயர் அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். குளத்தை சீரமைக்கும் பணி, விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.ஏரிகளை ஆக்கிரமிக்கும் கோவில்கள், மண்டபம்


ஏரிகளில் வீடுகள், கடைகள் கட்டினால் எதிர்ப்பு வரும் என்பதால், கோவில்கள், மண்டபங்கள் கட்டி, அவற்றை வசூலுக்கு பயன்படுத்தும் புதிய யுக்தி தற்போது அதிகரித்து வருகிறது.

செம்பாக்கம் ஏரியை ஒட்டி உள்ள, சர்வமங்களா நகர், 2வது பிரதான சாலை முடிவில், ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, தனியார் அறக்கட்டளை சார்பில் கோவில் மற்றும் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில், அந்த ஆக்கிரமிப்பு கோவில் மற்றும் மண்டபத்திற்கு தனி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிட்லபாக்கம் ஏரியின் கிழக்கு கரையை ஒட்டி, அரசுக்கு சொந்தமான இடத்தில், அதே தனியார் அறக்கட்டளை சார்பில், 15 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு, தாராளமாக நன்கொடை அளிக்கும்படி பக்தர்களுக்கு கோரிக்கை விடுக்கும் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, கோவில்கள் கட்டுவதற்கு, தனியார் அறக்கட்டளையினர், யாரிடம் அனுமதி பெற்றனர் என்பது தெரியவில்லை. ஏரி மற்றும் அதன் கரையை ஒட்டி நடக்கும் இந்த ஆக்கிரமிப்பை, பொதுப்பணி துறையும், உள்ளாட்சி நிர்வாகங்களும் கண்டுகொள்ளவில்லை.
குளத்தில் குப்பை கொட்டி ஆக்கிரமிக்க முயற்சி


முகலிவாக்கத்தில் உள்ள குளத்தின் கரை பகுதியில் குப்பை கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

ஆலந்தூர் மண்டலம், 156வது வார்டு, முகலிவாக்கம், லட்சுமிநகரில் ஒரு குளம் உள்ளது. அந்த குளம் சமீபத்திய மழைக்கு நிரம்பி, கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கிறது. லட்சுமிநகர், மதனந்தபுரம் பகுதிகளுக்கு இந்த குளம் தான் நிலத்தடி நீராதாரம்.

முகலிவாக்கம் ஊராட்சியாக இருந்தபோது, குளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அருகில், சாலை அமைத்தபோது, சுவரின் ஒரு பகுதி இடிந்தது. நான்கு ஆண்டுகள் ஆகியும், இடிந்த பகுதியை சீரமைக்கவில்லை.

சமீபத்திய மழையின்போது, குளத்தில் தேங்க வேண்டிய மழைநீர், வீணாக வெளியேறியது. மேலும், இடிந்த கரை பகுதியில் குப்பை கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், முகலிவாக்கம் முழுவதும் வயல்வெளியாக இருந்தது. குறுகிய காலத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. விவசாயத்திற்கு பயன்பட்ட குளம், தற்போது, குடிநீர் ஆதாரமாக உள்ளது. முன்பு, 15 அடி ஆழத்தில் இருந்தது. தற்போது, எட்டடியாக உள்ளது. பிரதான சாலையை ஒட்டி குளம் உள்ளதால், இடிந்த கரை பகுதியை குப்பை கொட்டி, ஆக்கிரமிக்கும் முயற்சி நடக்கிறது. கடந்த சில நாட்களாக, குப்பை கொட்டப்படுகிறது. நாளடைவில், மண் கொட்டி ஆக்கிரமிப்பு அதிகரிக்கலாம். கரையை கட்டி பலப்படுத்துவதுடன், ஆகாய தாமரையை அப்புறப்படுத்தி, தூர்வாரி குளத்தை பாதுகாக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.அழிவின் விளிம்பில் மேட்டுக்குப்பம் புதுக்குளம்


பத்து ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், அழிவின் விளிம்பில் சிக்கியுள்ள புதுக்குளத்தை, பராமரிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழிங்கநல்லூர் மண்டலம், 194வது வார்டு, மேட்டுக்குப்பம் பல்லவன் குடியிருப்பு, 1வது பிரதான சாலையோரம் புதுக்குளம் உள்ளது. 31 சென்ட் பரப்பளவும், 10 அடி ஆழமும் கொண்ட குளம், 10 ஆண்டு களுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

இதனால், குளத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலக்கிறது; ஆகாயத்தாமரை அதிகஅளவில் வளர்ந்துள்ளன.

மேட்டுக்குப்பம் பகுதியின் நிலத்தடிநீருக்கு ஆதாரமான குளத்தை, சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை, குளத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதுக்குளத்தை பராமரிக்க, மாநகராட்சி அதிகாரி கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக, குளத்திலிருந்து ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்; கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

தூர்வாரி, ஆழப்படுத்தி குளத்தை பாதுகாக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- நமது நிருபர் குழு

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-பிப்-201611:23:41 IST Report Abuse
D.Ambujavalli எந்த எதிர்க் கட்சியும் குரல் கொடுக்காது. அவர்கள் எத்தனை அபார்ட்மெண்டுகள் கட்ட திட்டம் இட்டிருக்க்ரார்களோ? எல்லாரும் கூட்டுக் கொள்ளையர்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201608:17:16 IST Report Abuse
Srinivasan Kannaiya பட்டும் திருந்தாத அரசை என்ன செய்வது...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-பிப்-201605:41:12 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இஷ்டத்துக்கு ஏரிகுளங்களை தூர்த்து பல மாடி கட்டிடங்கள் வந்துண்டே இருக்கு. வாடகை எகிறின்னே போறது என்று பலர் எல்லாக்ஷ்டமும் பட்டுன்ன்டு ஒரு பிளாட் வாங்கிடுராங்க . எலிவளை நாளும் தனி valainnu .சொந்தமா ஒரு வீடு என்பது 98%மக்களின் கனவு ஆனால் ப்ளான் பண்ணாமல் கண்டவனை நம்பி வாங்கிட்டு மோசம் போறா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X