பொது செய்தி

தமிழ்நாடு

கும்பகோணம் மகாமக குளத்தில் 24 மணி நேரமும் பக்தர்கள் நீராடலாம்

Added : பிப் 15, 2016
Advertisement

தஞ்சாவூர்,:''மகாமக குளத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு, 24 மணி நேரமும் அனுமதிக்கப்படும்,'' என, நகராட்சி நிர்வாக இயக்குனர் பிரகாஷ் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில், மகாமக விழா நேற்று முன்தினம் துவங்கி, வெகு விமர்சையாக நடந்து வருகிறது.இதையொட்டி, நகராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள், மருத்துவ அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர், 15 நாட்களாக பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது:மகாமக குளத்தில் சுகாதாரத் துறை சார்பில், நகராட்சி மருத்துவர்கள் மற்றும் பல்வேறு அலுவலர்கள் மூலம், 15 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீரை பரிசோதித்து, அதில், குளோரின் பவுடரை கலந்து வருகின்றனர்.
மேலும், பூச்சியியல் அதிகாரிகள் மூலம் கொசுக்களை ஒழிக்கும் கெமிக்கல் பந்துகள், தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. நகரத்தில் குடிநீர் வசதிக்காக, 180 ஹெச்.பி., மோட்டார் மூலம், தண்ணீர் எடுக்கப்பட்டு, தினமும், 60 லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது.வரும், 18ம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, 100 இலவச மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மகாமக குளத்தில், 24 நேரமும் பக்தர்கள், பொதுமக்கள் நீராடலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொடியேற்றம்:மகாமக விழாவின், இரண்டாவது நாளான நேற்று காலை, 8:45 மணிக்கு மேல், மகாமகத்திற்கு உகந்த வைணவ கோவிலான சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய, ஐந்து கோவில்களில் ஒரே நேரத்தில், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டன.
ரதசப்தமி விரதம்:சப்தமி என்றால் ஏழு; ரதம் என்றால் தேர். சூரியனது திதி சப்தமி. சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், தை, 1ம் தேதி வடதிசை நோக்கி பயணப்படுவார். அந்த சூரியன், மாசி பிறந்ததும், வடதிசை நோக்கி செல்லும் தேரை நிலைப்படுத்துவார்.இதுவே ரதசப்தமி எனப்படும். இந்நாளில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி, குளத்தில் நீராடுவது சிறப்பு.
மேலும், ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும், சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் என்பதால், ரதசப்தமியான நேற்று அதிகாலை முதலே, ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் தலைக்கு மேலே வைத்தபடி, மகாமக குளத்தில் நீராடி சென்றனர்.
கேமராக்கள் மூலம் கணக்கெடுப்பு:சாஸ்திரா பல்கலை சார்பில், மகாமக குளத்தின் வடகரையில், இரண்டு கேமராக்களும், தென் கரையில், மூன்று கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.இவற்றின் மூலம், குளத்தில் இறங்கி நீராடும் ஒவ்வொருவரின் தலை மட்டும் தனியாக பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவரும், 20 தீர்த்தங்களுக்கு சென்று கரையேறும் வரை கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம், குளத்தில் எத்தனை பேர் நீராடுகின்றனர் என்பது பதிவு செய்யப்படுகிறது.
ஆட்டோக்கள் அடாவடி:மகாமகத்திற்கு வரும் பக்தர்களிடம், 25 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், அதை மீறி வசூலித்தால், 1800 425 5430 என்ற எண்ணில் புகார் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, அதிக கட்டணம் வசூல் செய்வதாக கும்பகோணம் ஆர்.டி.ஓ., முத்தண்ணனுக்கு புகார் வர, அதிக கட்டணம் வசூல் செய்த, 20 ஆட்டோக்களுக்கு, தலா, 4,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X