பொணத்துல திருடுறாங்க எலும்பு போலீசுக்கே தெரியாத அலும்பு| Dinamalar

பொணத்துல திருடுறாங்க எலும்பு போலீசுக்கே தெரியாத அலும்பு

Added : பிப் 16, 2016
Share
மேசை மீது, ஸ்வீட், கேக், முந்திரியை பரப்பி வைத்திருந்தாள் சித்ரா. ஒவ்வொன்றாய் ருசித்தபடி கேட்டாள் மித்ரா.''அக்கா! நிஜமாவே 'செம்ம ட்ரீட்'டா இருக்கு. எலக்ஷன்ல எதுவும் 'சீட்' கிடைச்சிருச்சா?''''நானென்ன ஆளும்கட்சியிலயா இருக்கேன்...அங்கதான், இப்பவே 9 தொகுதிகளுக்கு 'கேண்டீடேட் லிஸ்ட்' தயாரிச்சு, ஆளுக்குக் கொஞ்சம் 'அட்வான்ஸ்' வாங்கீட்டாங்களாமே?''''ஆனா,
பொணத்துல திருடுறாங்க எலும்பு போலீசுக்கே தெரியாத அலும்பு

மேசை மீது, ஸ்வீட், கேக், முந்திரியை பரப்பி வைத்திருந்தாள் சித்ரா. ஒவ்வொன்றாய் ருசித்தபடி கேட்டாள் மித்ரா.
''அக்கா! நிஜமாவே 'செம்ம ட்ரீட்'டா இருக்கு. எலக்ஷன்ல எதுவும் 'சீட்' கிடைச்சிருச்சா?''
''நானென்ன ஆளும்கட்சியிலயா இருக்கேன்...அங்கதான், இப்பவே 9 தொகுதிகளுக்கு 'கேண்டீடேட் லிஸ்ட்' தயாரிச்சு, ஆளுக்குக் கொஞ்சம் 'அட்வான்ஸ்' வாங்கீட்டாங்களாமே?''
''ஆனா, அந்தக் கட்சியோட 'ஐவர் அணி'ட்ட ஒரு 'லிஸ்ட்' இருக்காம். அப்புறம்....'யாருக்கு சீட்டு கொடுத்தா, கட்சி ஜெயிக்கும்'னு உளவுத்துறை கொடுத்த 'லிஸ்ட்' அம்மாட்ட இருக்காம். இதுல மெஜாரிட்டி லிஸ்ட்ல இருக்குறவுங்களுக்கு தான் சீட்டு. மத்தவுங்க கட்டுன காசுக்கு வேட்டு!''
''குத்தாட்ட சேஜ்ஜி, 'கோவை தெற்குல, உங்களுக்குதான் சீட்டுன்னு கோகுலமான மினிஸ்டர் சொல்லீட்டாங்க'ன்னு சொல்றாங்களாம். கருப்பு கவுன்சிலரு, பெட்டிஷன் புகழ் அண்ணாச்சி ரெண்டு பேரும், 'எனக்கு தான் சீட்டுன்னு மினிஸ்டர் சொல்லிட்டாரு'ங்கிறாங்க. அரசு வக்கீல் ஆறுமுகமும் அதே தொகுதிக்கு கேட்ருக்காரு. யாருக்கு தான் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதோ?''
''இந்த களேபரத்துல, 'சிறுவாணி' டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத், 'எனக்கு சீட்டு கிடைச்சிரும்னு என்னோட பேரை, வாக்காளர் பட்டியல்ல இருந்து, எம்.எல்.ஏ., நீக்கிட்டாருன்னு, சொல்றாரு. மூணு தடவை பேரு கொடுத்தும், சேர்க்கலையாம்'' என்றாள் மித்ரா.
''சினிமாக்காரர்ல...நல்லாவே காமெடி பண்றாரு. அதே ரேஸ்கோர்ஸ் குவார்ட்டர்ஸ்ல, சமூக சேவகர்ங்கிற பேருல, எக்ஸ் மினிஸ்டர், எக்ஸ் எம்எல்ஏ ரெண்டு பேரு, பல வருஷமா வீட்டை வச்சிருக்காங்களே. வாக்காளர் பட்டியல்ல, அவுங்க வேற இடத்துல குடியிருக்காங்கன்னு உறுதியா தெரிஞ்சும், இந்த ரெண்டு வீட்டையும் காலி பண்ண முடியலையாமே'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...அது உண்மை தான். தெற்கைப் பத்திப் பேசவும், தெற்குல இருக்குற போலீஸ் ஆபீசரு ஞாபகம் வந்துச்சு. கேரளாக்காரரு ஒருத்தரு, தன்னோட ரெண்டு 'பென்ஸ்' காரை, கோவையில அடமானம் வச்சு பணம் வாங்கிருக்காரு. பணம் கொடுத்த பார்ட்டி, அதை 'ஃபிட்டிங்'ல போட்டு, வண்டி பார்ட்சை உருவ ஆரம்பிச்சிருச்சு. அதைப்பத்தி, இந்த ஆபீசர்ட்ட கேரளக்காரரு 'கம்பிளைன்ட்' பண்ணிருக்காரு''
''இதுல போலீஸ் என்ன பண்ண முடியும்?''
''என்ன பண்ணுனார்னு கேளு...காரை வாங்கித்தர்றேன்னு கேரளா பார்ட்டிட்ட சொல்லி, அஞ்சு லட்சம் பணம் கேட்டு, நாலரை லட்சம் வாங்கிருக்காரு. ஒரு பென்ஸ் காரை வாங்கிக் கொடுத்துட்டு, 'இன்னொரு அஞ்சு லட்சம் கொடு. அப்பதான் இன்னொரு காரை வாங்கித்தர முடியும்'னு சொல்லிட்டாராம்''
''ஒரு 'டீலிங்'ல பத்து லட்சமா...செத்தான்டா சேகரு!''
''அதே தான்....அந்த கேரளா பார்ட்டி, பெரிய ஆபீசர்ட்ட, 'கம்பிளைன்ட்' பண்ணிட்டாங்க. அவரு, 'ஒரு வாரம் டைம் தர்றேன். அதுக்குள்ள அந்த நாலரைய 'செட்டில்' பண்ணிட்டு, ஊரை விட்டே போயிருங்க'ன்னு மீசையத் திருகி மிரட்ட...அண்ணே இப்போ, அரியலுாருக்கு 'பேக்கப்' ஆயிட்டாரு'' என்றாள் மித்ரா.
''இவ்ளோ நேர்மையா இருக்குற பெரிய ஆபீசர், சிட்டிக்குள்ள அனுமதியே இல்லாம வைக்கிற பிளக்ஸ்களை மட்டும் ஏன் எடுக்க மாட்டேங்கிறாரு. நாகர்கோவில் பக்கத்துல சாதாரண இன்ஸ்பெக்டர் சாம்சன், ஆளும்கட்சி பேனரை, 'எவ்ளோ' தைரியமா எடுத்திருக்காருன்னு 'வாட்ஸ்ஆப்'ல பார்த்தியா. நம்மூருக்கு வந்தா, எவ்ளோ நேர்மையான ஆபீசரும் 'ஆஃப்' ஆயிருவாங்க போலிருக்கு'' என்றாள் சித்ரா.
''உண்மை தான்க்கா...'வாட்ஸ் ஆப்'ல, 10 நேர்மையான ஆபீசர் பட்டியல்ல, நம்ம 'மாவட்ட' மேடம் பேரையும் போட்டு, மத்த ஆபீசரையும் அவமானப்படுத்திருக்காங்க'' என்றாள் மித்ரா.
''ஏன்டி...இவுங்க நேர்மையானவுங்க இல்லியா?''
''நேர்மைன்னா என்னக்கா....காசு வாங்காம இருக்குறது மட்டுமா...ஆளும்கட்சிக்கு 'ஜால்ரா' அடிச்சு, அவுங்க சொல்ற இடத்துல எல்லாம் கையெழுத்தைப் போட்டு, பல கோடி ரூபா புறம்போக்கு இடங்களை ஆளும்கட்சிக்காரங்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்து, அதுக்குப் பிரதிபலனா... ஒரே 'போஸ்ட்டிங்'ல அஞ்சாறு வருஷமா, ஆணியடிச்சா மாதிரி, சொகுசா உட்கார்ந்திருக்கிறதா நேர்மை?''
''வேற விஷயமும் கேள்விப்பட்டேன் மித்து...இங்க இருக்குற வி.ஐ.பி.,க்கள் பல பேரோட அவுங்க ரொம்பவே 'ஃபிரண்ட்'டா இருக்காங்க. சென்ட்ரல், ஸ்டேட் கவர்மென்ட் டிபார்ட்மென்ட்கள்ல நடக்குற பல விஷயங்களை, இவுங்களுக்குச் சரியான நேரத்துல சொல்லிக்கொடுத்து, சொத்துக்களைக் காப்பாத்திக்கவும் உதவுறாங்களாம். அதுக்கு வேற விதமா, 'பெனிஃபிட்' அடைஞ்சுக்கிறாங்களாம்''
''ஆளும்கட்சிக்காரங்க...இவுங்களை, கரை சேலை கட்டாத இன்னொரு மாவட்டச் செயலாளர்னு தான் சொல்றாங்க''
''மாவட்டச் செயலாளர்னு சொன்னியே...சிட்டில இருக்குற டிஎம்கே 'மாவட்டம்' ஒருத்தரு பேருல, இன்னமும் கார்ப்பரேஷன் பிளம்பர், கான்ட்ராக்டர் லைசென்ஸ் இருக்காம். அவரு பேருல மட்டுமில்லை. துாத்துக்குடி போன இன்ஜினியரோட ஒட்டிப்பிறந்த உடன் பிறப்பு, மூணு லாரி மேட்டர்ல 'கிரேட் எஸ்கேப்' ஆகி, ரிட்டயர்டு ஆன உயர்ந்த மனிதன் இன்ஜினியரோட உடன்பிறப்பு பேருலயும் பிளம்பர் லைசென்ஸ் இருக்கு'' என்றாள் சித்ரா.
''இதெல்லாம் என்ன பெரிய மேட்டர். முத்தான ஒரு பிளம்பரோட வீட்டுல மட்டுமே, 10 பேரு பேர்ல பிளம்பர் லைசென்ஸ் இருக்கு. இதுல பாதிப்பேரு, இந்த வேலையே பாக்கிறதில்லை. இந்த பத்துப்பேருல ஒருத்தருக்கு, லதா மேடம் கமிஷனரா இருந்தப்போ, 60 ஆயிரம் ரூபா 'ஃபைன்' போட்டாங்க'' என்றாள் மித்ரா.
''பிளம்பர் லைசென்ஸ் வாங்குறதுக்கு, ஐடிஐ சர்ட்டிபிகேட் வேணும் மித்து. இப்போ இருக்கிறதுல பல பேரு, பள்ளிக்கூடமே முடிக்காதவங்க. இவுங்களுக்கு, நம்மூரு 'பம்ப்செட்' கம்பெனி பேருல இருக்குற ஐடிஐல ஒரு லட்ச ரூபா வாங்கிக்கிட்டு, படிக்காதவங்களுக்கும்
சர்ட்டிபிகேட் வாரி வழங்கிருக்காங்க'' என்றாள் சித்ரா.
பேச்சின் இடையில், சித்ராவின் அம்மா கொண்டு வந்த 'ஃபில்டர்' காபியை சுவைத்துக் கொண்டே கேட்டாள் மித்ரா.
''அக்கா! நம்மூரு ஏழாம் நம்பர் டவுன் பஸ்களை வச்சு, சுங்கம் பிராஞ்ச் ஆபீசருங்க, ரெண்டு பேரு நல்லா சம்பாதிக்கிறாங்க. கவர்மென்ட் டவுன் பஸ் எல்லாத்துக்கும், ரெண்டு பிரைவேட் டவுன் பஸ்களுக்கு இடையில 'டைம்' வர்றது மாதிரிப் பண்ணிருக்காங்க. எல்லாக் கூட்டத்தையும் பிரைவேட் டவுன் பஸ்காரங்க அள்ளிட்டுப் போக, கவர்மென்ட் பஸ், காத்தாடுது. இவுங்க ரெண்டு பேருக்கும், மாசாமாசம் மாமூல் கொட்டுது''
''ஒண்டிப்புதுார் பிராஞ்ச்ல இருக்குற முக்கியமான ஆபீசர் என்ன செய்றாரு தெரியுமா...அவரோட மனைவி பேருல ரெண்டு ஹார்டுவேர்ஸ் கடை வச்சிருக்காரு. அந்த கடையோட பில்லை வச்சு, பஸ்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குனதா கணக்குக் காமிச்சு, காசு அள்ளுறாராம்'' என்றாள் சித்ரா.
''ஹார்டுவேர்ஸ்க்கும், பஸ் ஸ்பேர் பார்ட்ஸ்க்கும் என்னக்கா சம்மந்தம்? எரியுற வீட்டுல புடுங்குற மாதிரி இருக்கு'' என்றாள் மித்ரா.
''வீடுன்னதும் ஞாபகம் வந்துச்சு. போத்தனுார்ல ஒரு வீட்டை உடைச்சு, பணம், நகைய திருடிட்டுப் போயிட்டாங்க. அது விஷயமா, ரிப்போர்ட்டர் ஒருத்தரு, உளவுத்துறை ஏட்டையாவுக்குக் கேட்ருக்காரு. அவரு, 'அதெல்லாம் ஒண்ணுமில்லை'ன்னு சொல்லிட்டாரு''
''அது வழக்கமான விஷயம் தான?''
''அப்புறம் நடந்ததைக் கேளு. அந்த ஏட்டையா போன்ல இருந்து, அந்த ரிப்போர்ட்டருக்கு உடனே ஒரு 'கால்' வந்துருக்கு. எடுத்து 'ஆன்' பண்ணுனா, யாரும் பேசலை. தானா 'டயல்' ஆகிப்போயிருக்கு. அப்போ, அந்த கொள்ளையப் பத்தி, அவரும், உளவுத்துறை எஸ்ஐ ஒருத்தரும் பேசுனது அப்பிடியே கேட்ருக்கு. அது தான், இப்போ 'வாட்ஸ் ஆப்'ல வலம் வருது. உளவுத்துறையோட லட்சணத்தைப் பார்த்தியா?'' என்றாள் சித்ரா.
''அக்கா! ஜி.எச்.,ல நான் உளவு பாத்ததுல ஒரு தகவல் தெரிஞ்சிச்சு. அப்பிடியே நான் ஆடிப்போயிட்டேன்'' என்றாள் மித்ரா.
''நீயே ஆடிப்போற தகவல் என்னடி?'' என்றாள் சித்ரா.
''அங்க மார்ச்சுவரிக்கு வர்ற பொணங்களை, போஸ்ட் மார்ட்டம் பண்ணி அனுப்புறப்போ, தாடை எலும்பை மட்டும் தனியா எடுத்து, ஆராய்ச்சி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு வித்துர்றாங்களாம். அநாதைங்க பாடிகள்ல மூட்டு, தாடைன்னு முக்கியமான எலும்பெல்லாம் எடுத்து, பிரைவேட் மெடிக்கல் காலேஜ்களுக்கு ஏகப்பட்ட காசுக்கு விக்கிறாங்களாம். இது, போலீசுக்கே தெரியாது. டாக்டர்களுக்குத் தெரிஞ்சும் தடுக்க முடியலையாம்'' என்றாள் மித்ரா.
''என்னடி...கேட்டாலே மயக்கம் வருது!'' என்று சித்ரா சொல்லும்போதே, அவளது அலைபேசி அலற, தடைபட்டது பேச்சு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X