"கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லைனு; தேர்தல் நேரத்துல, காரியத்துல கண்ணா இருக்காங்க,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.
""என்னாச்சு? யாரு? எந்த விஷயத்துல, கண்ணா இருக்காங்க? நாலா பக்கத்திலும் போராட்டம் நடக்குது. எதைச் செல்ல வர்ற,'' என, துருவி கேட்டாள் சித்ரா.
""முதலில் விசைத்தறி கூலி பிரச்னையில் இருந்து ஆரம்பிக்கிறேன். தேர்தல் நெருங்கறதால, கூலி குறைப்பு பிரச்னையை கடைசி நேரத்துல பெரிசாக்கியிருக்காங்க. வழக்கமா தேர்தல் நேரத்துல, "ஸ்டிரைக்' நடந்தா, அதிருப்தி வந்திரும்னு, அவசரமா பேசி முடிப்பாங்க. ஆனா, இதுவரைக்கு ஆளுங்கட்சி தரப்புல கண்டுக்கல. ஆளும்கட்சியோட திட்டம், பல்லடத்துக்காரர் மூலமா வெளிச்சத்துக்கு வந்திருக்கு,'' என்றாள் மித்ரா.
""அப்படி என்ன ரகசியம்,'' என, சித்ரா விடாப்பிடியாக கேட்க, ""தறிக்காரங்க ரொம்ப நாளைக்கு தாங்க மாட்டாங்க; சீக்கிரமா பேச்சு நடந்தா இழுத்திட்டே இருப்பாங்க. கொஞ்சம் விட்டு பிடிச்சா இறங்கி வருவாங்க. ஜவுளி உற்பத்தியாளர்கள், தேர்தல் நேரத்துல நம்மை "கவனி'ப்பாங்கனு, பல்லடம் ஆளும்கட்சிக்காரங்க தைரியமா பேசிட்டு இருக்காங்க. இவ்விஷயம், விசைத்தறியாளர் மத்தியில் வேகமா பரவிட்டு இருக்குது,'' என்றாள் மித்ரா.
""சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர் போராட்டம் என்னாச்சுப்பா?'' என, தாவினாள் சித்ரா.
""சத்துணவு பணியாளர் போராட்டம் மட்டும் இல்லீங்க. அனைத்து துறை அரசு ஊழியர்களும் சேர்ந்து நடத்துற "ஸ்டிரைக்'. வேலை நிறுத்தத்துல இருந்தாலும், அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு வர்றதில்லை. ரோட்டுல இறங்கி போராட, சத்துணவு பணியாளர்களும், அங்கன்வாடி பணியாளர்கள் மட்டுமே வர்றாங்க. அதிலும், முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கோஷம் போடுறாங்க."ஸ்டிரைக்' நடக்கறது பிடிக்கலைனாலும், சங்கத்துக்கு கட்டுப்பட்டு, "லீவு' போட்டுட்டு, வீட்டுல ஒக்கார்ந்துட்டு இருக்காங்கனு, கலெக்டர் ஆபீசுல பேசிக்கிறாங்க. இவுங்களோடு போராட்டத்துனால, "சர்டிபிகேட்' கூட வாங்க முடியாம மக்கள் சிரமப்படுறாங்க,'' என, அங்கலாய்த்தாள் மித்ரா.
""கலெக்டர் மீது, மக்களுக்கு ஏகப்பட்ட கோபம் வந்துருச்சாமே,'' என, கேட்டாள் சித்ரா.
""ஆமாக்கா, அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்காக அவிநாசியில் நடக்கும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து, போராட்டத்தை முடிச்சு வையுங்கனு கேட்டப்ப, கலெக்டர் சரியா பதில் சொல்லாம கிளம்பினதால, கலெக்டர் ஆபீசை சுத்தி நின்னு, "தர்ணா' செஞ்சாங்க. ஆர்.டி.ஓ.,வை அனுப்பி வச்சு, தன்னோட அறையில இருந்து, ஜன்னல் வழியா பார்த்துட்டே இருந்தாங்க. கெஞ்சி கூத்தாடி, மக்களை அனுப்பி வச்ச பிறகே, கலெக்டரும் நிம்மதியா ஒக்கார்ந்து, மத்த வேலையை பார்த்திருக்காங்க. பக்குவமா பேசி அனுப்பி இருக்கலாம்; வீணா, இன்னொரு போராட்டம் நடத்துற அளவுக்கு ஆக்கிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""அத்திக்கடவு திட்டமும் விஸ்வரூபம் எடுத்துக்கிட்டு இருக்கே,'' என, சித்ரா கேட்க, ""ஆமாக்கா, ஆளுங்கட்சி தரப்புல ஏதாவது ஒரு உறுதிமொழி வாங்கணும்னு உறுதியா இருக்காங்க. தேர்தல் நேரமா இருக்கறதால, எல்லா கட்சிக்காரங்களும், ஓடி வந்து ஆதரவு தெரிவிக்கிறாங்க. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏதேனும் அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்குறாங்க,'' என்ற மித்ரா, ""மக்கள் நல கூட்டணி ஆர்ப்பாட்டத்தை, ஆளுங்கட்சி கவுன்சிலருங்க, தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக் கிட்டாங்களாமே,'' என, கேட்டாள்.
""ஆமாப்பா, மாநகராட்சியை கண்டிச்சு ஆர்ப்பாட்டம்னு தெரிஞ்சதும், ஆளும்கட்சியை சேர்ந்த கவுன்சிலருங்க, கம்யூ., தோழர்களுக்கு போன் போட்டு, மேயருக்கு எதிரா இருக்கற முக்கியமான பிரச்னைகளை போட்டுக் கொடுத்திருக்காங்க. "ஆளும்கட்சிக்காரங்க தீக்குளிக்கற அளவுக்கு, மேயர் நிர்வாகம் மோசம்'னு பேசுங்கனு, எடுத்துக் கொடுத்திருந்தாங்க,'' என்றாள் சித்ரா.
""அதெல்லாம் சரி, உள்ளூர் கேபிள் சேனலை முடக்கிட்டாங்களாமே,'' என, மித்ரா கேட்க, ""ஆமாப்பா, புதுசா ரீலீசாகியிருக்கற படங்களை தொடர்ச்சியா வெளியிட்டுக்கிட்டு இருந்தாங்க. படத்தயாரிப்பாளர் தரப்புல இருந்து, சென்னையில உள்ள எஸ்.பி.,க்கு புகார் மனு போயிருக்கு. அதிரடியா ஆய்வு செஞ்சு, சேனலை இழுத்து மூடிட்டாங்க. அதுக்கப்புறம் விசாரிச்ச பிறகே, கேபிள் வாரிய தலைவரின் "பினாமி'ன்னு தெரிஞ்சது. உள்ளூர்ல புகார் கொடுத்தா, அமுக்கிடுவாங்கன்னு, சென்னையில புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்க வச்சிருக்காங்க. ஆளுங்கட்சி தரப்பு, அதிர்ச்சியாகியிருக்கு,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE