தமிழ் கண்ட தவப்பயன் உ.வே.சா.,| Dinamalar

தமிழ் கண்ட தவப்பயன் உ.வே.சா.,

Updated : பிப் 18, 2016 | Added : பிப் 17, 2016 | கருத்துகள் (1)
 தமிழ் கண்ட தவப்பயன் உ.வே.சா.,

பழந்தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவு தந்து, தமிழ் மொழியின் பெருமையை உலகம்அறியச் செய்த பெருமை 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாத அய்யருக்கு உண்டு. 1855 பிப்ரவரி 19 ல் நாகை மாவட்டம் உத்தமதானபுரத்தில் வேங்கடசுப்பையர்-, சரசுவதியின் மகனாக பிறந்தார்.
தமிழ்மொழியில் உ.வே.சா., ஆழமான பற்று பெற, அவருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் ஒரு காரணம். அவரது முதல் ஆசிரியர் அவரின் தாய்வழிப் பாட்டனார். ஆரம்பக் கல்வியை திண்ணைப்பள்ளிக் கூடத்திலும், தமிழறிஞராகிய சவேரிப்பிள்ளையிடமும் கற்றார். அரியலுார் சடகோபையரிடம் இசையுடன் தமிழ் கற்றார். பின்னர் குன்னம் சிதம்பரம்பிள்-ளையிடம் திருக்குறள் பயின்றார். காரைக்குடி கஸ்துாரி ஐயங்காரிடம் நன்னுால் கற்றார்.
ஆங்கிலம் கற்க குடும்பத்தினர் வலியுறுத்தியபோது, தமிழ்மீது காதல் கொண்டு தமிழ் நாவலர்களை தேடிச் சென்றார். பதினேழாவது வயதில் திருவாவடுதுறை ஆதினத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி
சுந்தரம் பிள்ளையிடம் ஆறு ஆண்டுகள் தமிழ் பயின்றார். ஆசிரியரின் அன்பும் திருவாவடுதுறை ஆதினத்தின் ஆதரவும் தமிழ்ப்பணிக்கு வழிகாட்டின. மீனாட்சி சுந்தரம் பிள்ளை மறைந்தபின்பு திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடம் நான்காண்டு காலம் தமிழ் பயின்றார்.
உ.வே.சா.,வின் பன்முகம் தனிப்பட்ட மனிதர் யாரும் பழந்தமிழ் இலக்கியத்தைத் தேடி கண்டுபிடித்து அதற்கு ஆய்வுக் குறிப்புகள் தந்ததில்லை. ஆனால் இவரது பணி மகத்தானது. இவர் பதிப்பித்த இலக்கியங்கள் 74. எழுதி வெளியிட்ட உரைநடை நுால்கள் 18, மறைந்தபின்பு பிறர் பதிப்பித்து வெளியிட்ட உரைநடை நுால்கள் 3, அவரது குறிப்புரையுடன் வெளிவந்தவை ௨.
ஓலைச் சுவடிகளை தேடி அலைந்த அவரது பயணங்கள் புனிதப் பயணங்களாகவே அமைந்தன. ஆங்கிலேயருடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. பழந்தமிழ் நுால்களைக் கற்கவோ, பாதுகாக்கவோ எவரும் முயன்றதில்லை. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, சமய இலக்கியங்கள்,- காப்பியங்கள் தனித்தனியாக ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. பனை ஓலைச் சுவடிகளில் எழுதப் பெற்ற அவை, பூச்சி அரித்தும், உருக்குலைந்தும் இருந்தன. மக்களின் அறியாமையால் பண்டைத் தமிழ் இலக்கிய ஏடுகளில் பல தீக்கிரையாகின. ஆடிப்பதினெட்டு போன்ற நீர்விழாக்களின் போது ஆற்றில் விடப்பட்டன.
இப்படி காணாமல் போனது தவிர, எஞ்சிஇருந்த ஓலைச் சுவடிகளை தேடிப் புறப்பட்டார் உ.வே.சா.,இதனால் அவர் அடைந்த இன்னல்கள் பல. அவற்றை பொருட்படுத்தாது சில இடங்களில் ஏற்பட்ட அவமானத்தையும் தாங்கிக் கொண்டு, எங்கேயாவது ஏடு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு தேடி அலைந்தார். இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரி ஆதினத்தின் தலைவர் மாணிக்கவாசக தேசிகர், ஆதினத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட சுவடிகளை அளித்தார்.
ஏடுகளின் நிலை
'இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்த ஏடுகள் அனைத்தும் காலத்தால் பழையவனவாய் உளுத்துப்போய், செல்லரித்து, எலி கடித்து, கிழிந்தும், சிதைந்து, பூச்சிகள் உண்டும் எஞ்சியவையாகக் கிடந்தன' என்று ஏடுகள் இருந்த நிலையைப் பற்றி உ.வே.சா., குறிப்பிடுகிறார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பதிப்புத் துறையிலும், எழுத்துத் துறையிலும் முழுமூச்சாக ஈடுபட்டார். கும்ப
கோணத்தில் முன்சீப்பாக இருந்த ராமசாமியின் உதவியால், உ.வே.சா., முதன்முதலில் பதிப்பித்த நுால் 'சீவக சிந்தாமணி'. உ.வே.சா., சைவ சமயச் சார்புடையவராய் இருந்தாலும் சமண நுாலான 'சீவக சிந்தாமணி'யையும், பவுத்த நுாலான 'மணிமேகலை'யையும்
பதிப்பித்தார். இறை பக்தி வேறு; இலக்கிய ஈடுபாடு வேறு என்று வாழ்ந்து காட்டியவர் உ.வே.சா.,'சிலப்பதிகாரம்', 'மணிமேகலை' ஆகிய காப்பியங்களை தொடர்ந்து குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தார். எல்லா பாடல்களுக்கும் அவற்றின் உரைகளுக்கும் அவர் தந்திருக்கும் அடிக்குறிப்புகளும் பாடவேறுபாடுகளும் ஆய்வாளர்களுக்கு புதுவழி காட்டுவனவாகவும், புதுச் செய்திகளை தருவனவாகவும் அமைந்துள்ளன.
உ.வே.சா.,வின் இச்சிறந்த பணியினால், தமிழகத்தில் பதிப்புத் துறையில் பல்வேறு புது மாற்றங்கள் ஏற்பட்டன. ஆய்வுப் போக்கில் புது மாற்றத்தையும் புகுத்தியது. உதாரணமாக புறநானுாற்றுப் பதிப்பால்
தமிழகத்தின் பண்டைய நாகரிகமும், மக்களின் பழக்கவழக்கங்களும் தெரிந்தன.
'சிறந்த குருபக்தி', 'சுவாமி இருக்கிறார்', 'மாம்பழப்பாட்டு' போன்ற கட்டுரைகள் நகைச்சுவை தோன்ற உ.வே.சா., எழுதியவை. உ.வே.சா., தம் வாழ்வில் கண்டு பழகியவர்கள், இசையறிஞர்கள், இலக்கிய அறிஞர்கள், பதிப்பாசிரியர்கள், புலவர்கள், சமயக் காவலர்கள் என பலரோடும் பழகிய பொழுது நடந்த நிகழ்ச்சிகளை, தான் கேட்டவற்றை சுவைபடவும், சிந்திக்கத் துாண்டும் வகையிலும் கட்டுரைகளாக படைத்தார்.
சில செய்திகளை கதை போலவும் படைத்துள்ளார். 1940ல் 'என் சரித்திரம்' என்ற நுாலை எழுதத் தொடங்கினார். இந்நுாலில் தமிழ் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் புலவர்கள், புரவலர்கள், ஆதினத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகளை தந்துள்ளார்.
பெரும்பாலான பதிப்புகள் தமிழ் அறிஞர்களின் இலக்கிய ஆர்வத்தினைத் துாண்டக் காரணமாக அமைந்தன. உதாரணமாக 'குறிஞ்சிப்பாட்டு' பதிப்பிக்கும் பொழுது, 99 வகையான மலர்களின் பெயர்களின் சில மலர்களின் பெயர்கள் இல்லை. அதனைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, 'எத்தனை மலர்கள் உதிர்ந்து விட்டனவோ, அவற்றை எங்கேயாவது தேடி எடுத்து கோர்த்துக் குறையை நிரப்புவோம்' என்று சுவைபட கூறுகிறார்.
காந்தியின் பாராட்டு
1937ல் மகாத்மா காந்தி
தலைமையில் சென்னையில் இலக்கிய மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராய் இருந்தார் உ.வே.சா., அவரின் உரையைக் கேட்ட காந்தி ''இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்த வண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வ
மிகுதிதான் என்னிடம் எழுகிறது'' என்று கூறியுள்ளார். உ.வே.சா., மறைந்தபொழுது புலவர்நத்தம் என்னும் ஊர் அவரின் நினைவாக 'சாமிநாதபுரம்' எனப் பெயர் சூட்டப்பட்டது.
இந்த தமிழறிஞர் மறைந்த பொழுது''கண்ணுஞ் சடையாமல் கையுந் தளராமல்உண்ணப் பசியெழுவ தோராமல் - எண்ணியெண்ணிச் செந்தமிழ்த் தாய்க்குச் செய்த திருத்தொண்டு க்கிந்நிலத் துண்டோ இணை'' என உ.வே.சா., வின் தமிழ்த் தொண்டை புகழ்ந்தார்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.மறைந்து போக இருந்த பல தமிழ் நுால்களை மக்கள் நடுவில் தவழச் செய்த காரணத்தினால் தேசியக்கவி சுப்பிரமணிய பாரதி,''பொதிய மலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெல்லாம்
புலவோர் வாயில் துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்இறப்பின்றித் துலங்குவாயே'' என்று வாழ்த்தியது போல் தமிழ் நெஞ்சங்கள் உ.வே.சா., வை என்றும் வாழ்த்தும்.ஓய்வின்றி உழைத்த உத்தமர் 28.4.1942ல் இவ்வுலக வாழ்வினின்றும் ஓய்வு பெற்றார். அவர் மறைந்தாலும் அவர் தமிழுக்குச் செய்த பணி என்றும் மங்காது நிலைத்து நிற்கும்.
- முனைவர் தி.பரிமளா,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,மன்னர் திருலை நாயக்கர் கல்லுாரி,
மதுரை. jeyamadhan05@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X