ஆர்.எஸ்.மங்கலம்; மழைநீர் சேகரிப்பை மையாக வைத்து பாண்டிய மன்னர்களால் உருவாக்கபட்ட ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் தண்ணீர் தேக்க வழியின்றி தொடர்ந்து வறண்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் கோடை பயிர் சாகுபடி முடங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறிய கண்மாய்கள், குளங்கள், ஊரணிகளை ஒருங்கிணைத்து 1,100 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். இதன் பின்னர் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களும் பெரிய கண்மாயின் முக்கியத்துவத்தை உணர்ந்து தொடர்ந்து பராமரித்து வந்தனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் 1,200 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கிவைக்க முடியும். தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்புக்குரியது. மழை காலங்களில் தண்ணீர் வீணாகாமல் கண்மாய்க்கு வந்துசேர வசதியாக அகண்ட வரத்துவாரிகள் உருவாக்கப்பட்டது. இதுபோன்று கண்மாய் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் விதமாக கண்மாயின் பல பகுதிகளில் ஷட்டர் வசதியுடன் மடைகள், வடிகால்கள் அமைக்கப்பட்டன. மழை பெய்ய தவறினால் வைகை, சருகணி ஆறுகள் மூலம் கண்மாய்க்கு நேரடியாக தண்ணீர் வரும் வகையில் தனி கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கண்மாய் தண்ணீர் மூலம் திருவாடானை தாலுகாவில் 12 ஆயிரத்து 140 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடந்தது. மழை அளவு குறைவு, வரத்துவாரிகள் ஆக்ரமிப்பு, தூர் வாரப்படமால் மணல் மேவியது போன்ற பல்வேறு காரணங்களால் கண்மாயில் தேங்கும் தண்ணீர் அளவு படிபடியாக குறையத் துவங்கியது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நீடித்துவருகிறது. இரண்டுபோகம் சாகுபடி செய்த நிலை மாறி தற்போது ஒருபோகம் மட்டுமே நெல் சாகுபடி நடக்கிறது.
இந்த ஆண்டும் கண்மாய் வறண்டதால் கிட்டதட்ட 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியது. மேலும் கோடைகால பயிராக பயறுவகை பயிர்கள், எள், பருத்தி, மிளகாய் போன்றவை சாகுபடி செய்வது வழக்கம். தண்ணீர் பற்றாக்குறையினால் கோடை பயிர் சாகுபடியை விவசாயிகள் தவிர்த்துள்ளனர். இதனால் விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளதுகண்மாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்,ஆக்ரமிப்புகளை அகற்றி வரத்துவாரிகளை மீட்கவேண்டும், பழுதடைந்த மடைகளை சரிசெய்யவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்தை திருவாடானை தாலுகா பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE