சிவகங்கை;கடந்த 2015 அக்டோபரில் வாங்கிய பஸ்,லாரிகளுக்கு வரும் ஏப்.,1க்குள் கட்டாயம் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, அதி வேகமாக செல்லும் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இதையும் மீறி சாலைகளில் வேகமாக வாகனங்கள் செல்வதை தடுக்க கடந்த 1.10.15 முதல் புதிதாக வாங்கப்படும் 3500 கிலோ எடையுள்ள லாரிகள், பஸ்கள், கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருந்தால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட போக்குவரத்து அலுவலர் நடராஜன் கூறியதாவது: இனிமேல் இக்கருவி பொருத்தப்பட்டு இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கப்படும். கடந்த 1.10.2015 முன்பு பதிவு செய்த இத்தகைய வாகனங்களில் வரும் 1.4.2016 க்கு முன்பு வேக கட்டுப்பாட்டு கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும், எனவும் அரசு உத்தரவிட்டுள்ளதால், பழைய வாகனங்களுக்கும் இக்கருவி பொருத்தப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த தகுதிச்சான்று வரும் 1.4.16 க்கு பிறகு காலாவதியாகி விடும். இனிமேல் தகுதிச்சான்றுக்கு கொண்டு வரப்படும் அனைத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஏப்.,1 க்கு பிறகு இது தொடர்பாக வாகன சோதனை தீவிரமாக நடத்தப்படும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாத வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.
கல்லூரி பஸ்களுக்குஉத்தரவு பொருந்தும்:வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு மட்டுமே உத்தரவிடப்பட்டு இருந்தது. இனி இந்த உத்தரவு அனைத்து கல்லூரி பஸ்களுக்கும் பொருந்தும். இக்கருவி பொருத்தாத கல்லூரி பஸ்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்கப்பட மாட்டாது,என போக்குவரத்து அலுவலர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE