உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிரோடு ஒன்றிய சிலையை அகற்ற வேண்டாமே

Updated : பிப் 21, 2016 | Added : பிப் 20, 2016 | கருத்துகள் (5)
உயிர்,  சிலை,டாக்டர் இரா. நாகசாமி,தொல்லியல் துறை

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தி, 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாட்டில் உள்ள புகழ் வாய்ந்த உற்சவமூர்த்தி. எழிலே உருவான இதற்கு
அழகிலோ, வரலாற்று சிறப்பிலோ, சமய மரபிலோ, பொருள் விலையிலோ ஈடிணையான உற்சவமூர்த்தி ஏதும் இல்லை.

கச்சி ஏகம்பரத்தில் உரைகின்ற இப்பரமன், கலை வரலாற்றில், ஆயிரத்து நுாறு ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்டு இவ்வளவு காலமாக, அதாவது ராஜராஜன் நுாற்றாண்டுக்கும் முன்பிருந்தே வீதி உலாவில் வந்த உத்தமத் தெய்வம். இந்த மாபெரும் தெய்வத்தை, தமிழகத்தை ஆண்ட பெருமன்னர்கள் எல்லாம் வந்து கண்டு, பக்திப் பெருக்கோடு வணங்கி சென்றிருக்கின்றனர். இத்தெய்வத்தை தாங்கி உலா வருவதற்காக, அருமையான வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளியினால் செய்யப்பெற்ற ரிஷப வாகனத்தை கொடுத்தான், விஜயநகர மாமன்னன் கிருஷ்ண தேவராயன்.


கம்பீரமாக உலா :

பல கோடி ரூபாய் பெருமானமுள்ள அந்த வாகனம், இன்றும் அக்கோவிலில் உள்ளது. இந்த சோமாஸ்கந்த பெருமான், அதன் மீது தான் இன்றும் கம்பீரமாக உலா வருகிறார். கிருஷ்ண தேவராயன், இக்கோவிலில் உள்ள மாபெரும் தெற்கு கோபுரத்தை கட்டுவித்து, அக்கோபுர வாயிலின் வழியாக வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் உருவை உலாவாக எழுந்தருளச் செய்து, பக்திப் பெருக்கோடு வணங்கினான். இவ்விழாவானது, இன்றைக்கு சரியாக, 500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதும் இக்கோபுர வாயில் வழியாக வெளிப்போன இப்பெருமானை, பக்தி பெருக்காலே வணங்கிய அடியார்கள் கோடான கோடி பேராவர்.
அக்கோபுரம் கட்டிய, 25 ஆண்டுகளுக்குள் மற்றும் ஒரு சிறந்த நிகழ்ச்சி இங்கு நடந்தது. சேக்கிழார் பெருமான், திருத்தொண்டார் புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதினார்.

அந்த அற்புத காப்பியத்தை அப்படியே சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்த ஒரு கவிஞன், 'உபமன்யு பக்த விலாசம்' என்ற பெயரில், சோமாஸ்கந்தர் முன்னிலையில் இவ்விழாவிலே அரங்கேற்றினான். அதைப் போற்றிய அன்றாண்ட மன்னன், அக்கவிஞனுக்கு சிறப்பு
செய்ததை குறிக்கும் கல்வெட்டானது இக்கோவிலில் இன்றும் உள்ளது.மகா சுவாமிகள், அக்கல்வெட்டைப் பற்றி பெருமையாக குறிப்பிடுவார். அவர் போன்ற எத்தனையோ முனிவர்கள் எல்லாம், உச்சிமேல் கரம் கூப்பி வணங்கி பேறு பெற்ற பெருந்தெய்வம் இந்த சோமாஸ்கந்த மூர்த்தி.


சோமாஸ்கந்த மூர்த்தி:

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, காஞ்சி மாநகருக்கே அருள்பாலித்த இத்தெய்வ உருவுக்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. நமது நாளிதழில், 2016 ஜன., 4ல் ஒரு செய்தி வெளிவந்தது.
அச்செய்தியில், இவ்வுருவத்தின் ஒரு கரத்திலுள்ள விரலில் சிறு பின்னம் ஏற்பட்டிருப்பதாலும், பீடத்தில் சற்று அசைவு உள்ளதாலும் இதை வழிபடாது, வேறு சிலை செய்து வைக்க வேண்டும் என்று, அரசின் தலைமை ஸ்தப்தி முத்தையா ஸ்தபதியாரின் அறிவுரைப்படி, இந்த சிலையை ஒதுக்கிவிட்டு புதிய சிலையை செய்து வைக்க அவரே எற்பாடு (கான்ட்ராக்ட்) செய்துள்ளதாகவும், ஊர் மக்கள் இதை எதிர்த்துள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. அக்கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி, இத்தகவலை அறிக்கையாக வெளியிட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதை மாற்றுவதற்கு, முத்தையா ஸ்தபதியார் கூறுவதற்கான காரணம், ஆகம சாஸ்திரத்தின் படியும் சிற்ப சாஸ்திரத்தின் படியும், பின்னமான மூர்த்தியை பூஜிக்கக் கூடாது என்பது கொள்கை என்று கூறிஉள்ளார்.

தெய்வ உருவங்கள் பின்னமானால் என்ன செய்ய வேண்டும் என, ஆகம நுால்களும், சிற்ப நுால்களும் தெளிவாக கூறியுள்ளன. தெய்வ உருவங்களின் அங்கங்களை பெரும் அங்கம் என்றும், சிறு அங்கங்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றில் தலை, கழுத்து முதல் இடுப்பு வரை உள்ள இரண்டு அங்கங்கள் பெரு அங்கங்கள் என்றும், மற்றவை சிறு அங்கங்கள் என்றும் கூறுகின்றன. தலை அல்லது உடல் பகுதியைத் தவிர மற்ற எந்தப் பகுதியில் பின்னம் ஏற்பட்டாலும் அதை சீர்திருத்தி, அந்த பழைய உருவத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்.
இதை மீறி, காலம் காலமாக இருந்த தெய்வ உருவத்தை ஒதுக்கிவிட்டு புதிது செய்தால், அரசனுக்கும், ஆட்சிக்கும் மட்டுமல்லாது மக்களுக்கும் பேராபத்து விளையும் என்று தான் ஆகம சாஸ்திரங்களும், சிற்ப சாஸ்திரங்களும், மதம் முதலிய அனைத்து நுால்களும் கூறுகின்றன; ஏனைய சிற்ப சாஸ்திரங்கள் எதுவாகிலும் இதையே வலியுறுத்துகின்றன.இதே கேள்வி, லண்டன் நடராஜர் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டது. ஆகமங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, சிறு பின்னங்கள் இருந்தால் சிலைகளை ஒதுக்கினால் ஆபத்து விளையும் என்று, நான் என் சாட்சியத்தில் காட்டியுள்ளேன்.


நீதிக்காக எடுத்த முடிவு:

அந்நுால்களை வாங்கிப் பார்த்த லண்டன் மேல் நீதிமன்றம், அதை ஏற்றுக் கொண்டு தம் தீர்ப்பிலும் இதைக் குறிப்பிட்டுள்ளது. இது, நீதிக்காக அங்கு எடுத்த முடிவு.
இங்கு யாம் கேட்பதெல்லாம், எந்த சிற்ப சாஸ்திரத்தில் அல்லது அதே போல் எந்த ஆகம சாஸ்திரத்தில், சிறு பின்னம் உடைய உருவத்தை ஒதுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என ஆராய, அறநிலையத் துறை கடமைப்பட்டு உள்ளது. அறநிலையத்துறை ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில், அரசின் தலைமை ஸ்தபதியார், ஆகமம் என்றே ஒரு சாஸ்திரம் கிடையாது; எல்லாம் எங்கள் சிற்ப சாஸ்திரத்தில் உள்ளது என வாதாடினார். அவ்வாறெனில், ஆகம சாஸ்திரத்தின் அடிப்படையில் இவர் அரசின் ஆலோசகராக எவ்வாறு செயலாற்றுகிறார் என்பது தெரியவில்லை.


வல்லமை கிடையாது :

அதேபோல், பண்டைய வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை இடிப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் இவருக்கு வல்லமை கிடையாது; புதுக்கட்டடங்கள் கட்டுவதில் மட்டும் இவருக்கு வல்லமை உண்டு. பழம்பெரும் கட்டடங்களை புதுப்பிக்க, புதிய விஞ்ஞான முறைகளை உலக விஞ்ஞானிகள் வகுத்துள்ளனர்; அதற்கான பரிசோதனைக் கூடங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துறையில் வல்லமையும், முறையே பயின்றவர்களையும் தான் அப்பணியில் ஈடுபடுத்த வேண்டுமென நான், நம் சென்னை நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அதை, கனம்
நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பித்துள்ளனர்.வழிபாட்டில் இருக்கும் சிலைகளை அப்புறப்படுத்துவதும், கல் மண்டபங்களை இடிப்பதும், கோவில்களையே முற்றிலும் இடித்து விடுவதும், அரசுத் துறையே அரைகுறை ஆலோசகர்களை கேட்டு செயல்படுவதும், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இது குறித்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி, கோவில்களுக்கு ஏற்பட்டு வரும் அவலநிலையையும், சான்றுகளுடனான படங்களையும் கண்டு மனம் பதறி, ஒருவர் கருத்தை மட்டும் கேளாது பல அறிஞர்களையும் கேட்டு, அரசு ஏன் செயல்படக்கூடாது எனவும், நிலைமை சீராகும் வரை எவ்வித புதுப்பிக்கும் திருப்பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கிஉள்ளார். அரசு, மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் பணிகளை, இடைத்தரகர்கள் சீரழித்து விடாது பார்த்துக் கொள்வது அதிகாரிகளின் கடமையன்றோ!

டாக்டர் இரா. நாகசாமி
முன்னாள் இயக்குனர்,
தொல்லியல் துறை (ஓய்வு)

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X