இலக்கணமும் இனிக்கும்| Dinamalar

இலக்கணமும் இனிக்கும்

Added : பிப் 22, 2016 | கருத்துகள் (3)
இலக்கணமும் இனிக்கும்

எனது நீண்ட ஆசிரிய அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை இது: மாணவர்கள் இடையே இலக்கிய வகுப்பிற்குக் கிடைக்கும் வரவேற்பு, இலக்கணத்திற்கு கிடைப்பதில்லை. இலக்கணம் என்றதுமே முகத்தைச் சுளிப்பதும், எட்டிக் காயாய் நினைப்பதும் மாணவர்களின் பொதுவான இயல்பு. என்றாலும், ஆசிரியர் முயன்றால் இலக்கண வகுப்பையும் இலக்கிய வகுப்பினைப் போல் சுவையாக மாற்றிவிட முடியும்.எளிய, இனிய, புதிய, நடைமுறை சார்ந்த உதாரணங்களைக் காட்டி, இலக்கணத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க வைக்க முடியும்; வகுப்பறையில் பதுமைகளைப் போல் வெறுமனே உட்கார்ந்தே இருக்காமல், உயிரோட்டமாகவும் மகிழ்ச்சியாகவும் மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய இயலும்.இலக்கணத்தை இனிமையாகவும், எளிமையாகவும் கற்பிப்பதற்கு கண்ணதாசனும், பட்டுக்கோட்டையாரும், மருதகாசியும் வாலியும் வைரமுத்துவும், பெரிதும் கை கொடுப்பர்.'பசியட நிற்றல்' (பசி வருத்தவும் உண்ணாது இருத்தல்), 'கண்துயில் மறுத்தல்' (கண்கள் உறங்க மறுத்தல்) எனத் தொல்காப்பியம் கூறும் களவுக்காலக் காதலை கூட, கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகளைக் கொண்டு மாணவர்கள் புரிந்து கொள்ளுமாறு விளக்கலாம்:'பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது!பஞ்சணையில் காற்று வரும் துாக்கம் வராது!'
அந்தாதி :அந்தம் ஆதியாக - ஓர் அடியின் முடிவே அடுத்த அடியின் தொடக்கமாக - தொடுப்பது 'அந்தாதி'. 'அந்தம்' என்றால் முடிவு; 'ஆதி'; என்றால் தொடக்கம். 'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனத் தொடங்கி 'பலே பாண்டியா' படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருக்கும் பாடலில் இடம்பெற்றிருக்கும் பின்வரும் வரிகள் அந்தாதி நலம் பொருந்தியவை:'பார்த்து நடந்தால் பயணம் தொடரும்பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்காட்சி கிடைத்தால் கவலை தீரும்கவலை தீர்ந்தால் வாழலாம்!'
'மூன்று முடிச்சு' படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள், நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள், நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்' என்ற முத்திரைப் பாடல் முழுக்க அந்தாதியில் அமைந்த அற்புதமான பாடல்.அடுக்குத் தொடரும் இரட்டைக் கிளவியும் 'பாம்புபாம்பு' என்பது அடுக்குத் தொடர்; 'பாம்பு' எனப் பிரித்தாலும் இது பொருள் தரும். 'சலசல' என்பது இரட்டைக் கிளவி; 'சல' என்று பிரித்தால் இது பொருள் தராது. இதுதான் அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு. இதனைக் கவிஞர் வைரமுத்து 'ஜீன்ஸ்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தமக்கே உரிய தனித்தன்மை துலங்க நயமாகப் புலப்படுத்தியுள்ளார்:'சலசல சலசல இரட்டைக்கிளவிதகதக தகதக இரட்டைக்கிளவிஉண்டல்லோ... தமிழில் உண்டல்லோ?பிரித்து வைத்தல் நியாயம் இல்லைபிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லைஒன்றல்லோ... ரெண்டும் ஒன்றல்லோ?'
உவமை அணி :உவமை என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். தெரிந்த ஒன்றைக் கொண்டு, தெரியாத ஒன்றை விளக்கித் தெளிவு-படுத்துவதற்கும், அழகுணர்ச்சி தோன்ற ஒன்றை எடுத்துரைப்பதற்கும் இலக்கியங்களில் உவமைகள் கையாளப்படுகின்றன.'குடும்பத் தலைவன்' திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்: திருமணமாம், திருமணமாம்! தெருவெங்கும் ஊர்வலமாம்!
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்!... அவள் கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம்! ஒரு கூடை நிறையப் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்!மாலை சூடும் அந்த மணமகளின் பருவ அழகினை ஐந்து அருமையான உவமைகளை அடுக்கிக் கையாண்டு படம்பிடித்துக் காட்டுவார் கண்ணதாசன்:'சேர நாட்டு யானைத் தந்தம்போல் இருப்பாளாம்! - நல்லசீரகச் சம்பா அரிசி போலசிரித்திருப்பாளாம்!...செம்பருத்திப் பூவைப் போலக் காற்றில்அசைந்திருப்பாளாம்!செம்புச் சிலை போல உருண்டுதிரண்டிருப்பாளாம்! - நல்லசேலம் ஜில்லா மாம்பழம் போல்கனிந்திருப்பாளாம்!'தற்குறிப்பேற்ற அணி இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் கவிஞர் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி. சிலப்பதிகாரத்திலும், கம்ப ராமாயணத்திலும் இதனை காணலாம். 'தாயைக் காத்த தனயன்' படத்திற்காகக் கண்ணதாசன் படைத்திருக்கும் பாடலின் தொடக்க வரிகள்...'மூடித்திறந்த இமையிரண்டும் 'பார் பார்!' என்றன!முந்தானை காற்றில் ஆடி 'வா வா!' என்றது!'இமை இரண்டும் மூடித் திறப்பது இயல்பு. இது காதலனைப் 'பார், பார்' என்பது போல் இருக்கின்றதாம். இதே போல் முந்தானை காற்றில் ஆடுவது என்பதும் இயல்பாக நிகழ்வதுதான். இது 'வா வா' என்று காதலியை நோக்கி அழைப்பது போல் உள்ளது எனக் கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி.
ஐய அணி :கவிஞர் கருதிய ஒரு பொருளின் அழகினை மகிழ்வுடன் எடுத்துரைக்கும் போது, அதனைக் கற்போர் அதிசயிக்கும் வண்ணம் சொல்லுவது அதிசய அணி. 'ஐய அணி' என்பது அதிசய அணியின் ஒரு வகை. 'தெய்வப் பெண்ணோ? மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!' என்னும் பொருளைத் தரும் திருக்குறள் காமத்துப் பாலின் முதல் குறட்பா, ஐய அணியில் அமைந்தது.'மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ? - இவள்ஆவாரம் பூதானோ? நடை தேர்தானோ?சலங்கைகள் தரும் இசை தேன்தானோ?'எனக் 'கிழக்கே போகும் ரயில்' படத்திற்காக கவிஞர் முத்துலிங்கம் பாடி இருக்கும் பாடல் ஐய அணிக்கு நல்ல உதாரணம்.ஒரு சொல்லை ஒரே பொருளில் பல முறை கையாளுவது சொற்பின்வரு நிலை அணி. 'பாசம்' என்னும் படத்திற்காகக் கண்ணதாசன் எழுதிய பாடலில் இவ்வணி நயமாக இடம்பெற்றிருக்கிறது.ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டுவேல் வண்ணம் விழிகள் கண்டுமான் வண்ணம் நான் கண்டுவாடுகிறேன்!...பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்கை வண்ணம் இங்கே கண்டேன்பெண் வண்ணம் நோய் கொண்டுவாடுகிறேன்!...
முரண் அணி :ஒன்றுக்கொன்று மாறுபட்ட சொல்லும், பொருளும் வருவது முரண் அணி.'இது குழந்தை பாடும் தாலாட்டுஇது இரவு நேர பூபாளம்இது மேற்கில் தோன்றும் உதயம்இது நதியில்லாத ஓடம்'என 'ஒருதலை ராகம்' படத்திற்காக டி.ராஜேந்தர் எழுதிய பாடலில் முரண் அணி இடம் பெற்றது. தாய் குழந்தைக்காகப் பாடுவது தாலாட்டு; கவிஞரோ 'இது குழந்தை பாடும் தாலாட்டு' என்கிறார். பூபாளம் காலையில் பாடப்பெறுவது; கவிஞரோ, 'இது இரவு நேர பூபாளம்' என்கிறார். இதே போல 'இது மேற்கில் தோன்றும் உதயம்' என்றும், 'நதியில்லாத ஓடம்' என்றும் பாடுவது அழகிய முரண்கள் ஆகும்.இப்படி கருத்து வாய்ந்த திரைப்பாடல்களைக் கையாண்டு, தமிழ் இலக்கணத்தைக் கற்பித்தால், நம் வகுப்பறைகளில் மகிழ்ச்சி நிலவும்.--முனைவர் நிர்மலா மோகன்தகைசால் பேராசிரியர்காந்திகிராம பல்கலைக்கழகம்94436 75931

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X