தியானமும் எண்ண அலைகளும்

Added : பிப் 22, 2016
Advertisement
 தியானமும் எண்ண அலைகளும்

நவீன வாழ்க்கை பிரச்னைகள், இறுக்கங்கள் நிறைந்தது. இந்த பிரச்னைகளைத் தீர்க்க சிறந்த வழி தியானம் செய்வது; கடவுளிடம் பிரார்த்தனை செய்வது. இடைவிடாது ஒரு பொருளையோ, அல்லது நமக்கு விருப்பமான கடவுளையோ, மகான்களை பற்றிய எண்ணமே தியானம்.
மருத்துவத்துறையில் குணமாக்க முடியாத நாள்பட்ட வியாதி, மன உளைச்சல் போன்றவற்றை தியானம் மூலம் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மேலை நாட்டு மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல மருத்துவக் கல்லுாரிகளில் தற்போது
மருத்துவப் படிப்புடன், ஆன்மாவைப் பற்றிய படிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
தியானத்தின் வலிமை
நம் எல்லோருக்குள்ளும் சக்தி இருக்கின்றது. சாதாரணமாக சிதறிக் கிடக்கின்ற இந்தசக்தி தியான நிலையில் வலுப்படுகின்றது. தியானம் மனதை ஒருமைப்படுத்துகிறது. ஏதாவதுஒன்றை ஆதாரமாய் வைத்து இது இயங்கும்.அப்போது எட்டுத் திக்கிலும் ஓடும் மனதை இழுத்துப் பிடித்து ஒன்றை நோக்கிச் செலுத்துகின்றோம். அதன்நோக்கமே ஒளி காணல் (அல்லது)விழிப்புணர்வு அடைதல் என்பதாகும். அந்த ஒன்று உருவமுடையதாயிருக்கும், உருவமற்றதாயும் இருக்கும். உருவமற்றஒளியை (அ)வெளியைத் தியானித்தல் ஞானியர் இயல்பு.
பொதுவாகவே தியானத்துக்கு மன ஒருமைப்பாடும், மனப்பக்குவமும் வேண்டும். தொடக்கத்திலேயே பலன் கிடைத்து
விடாது. தொடர்ந்து முயல வேண்டும். தியானத்துக்கு முதல் தகுதி துாய மனம்; -இரண்டாவது தகுதி ஈடுபாடு. இது இருந்தால் தான் மனதை இழுத்துப்பிடிக்க முடியும்.
“இறைவன் ஆத்மாவாயிருக்கிறான்.
அவனே ஆத்மாவின் ஆத்மாவாகிறான்.”
தியானத்திற்கு பக்குவம் அவசியம். தியானம் தன்னையறிய உதவும் சாதனம். மனதில் சிதறிக் கிடக்கும் ஆற்றல்களை ஒருங்கிணைக்கிறது.
தியானம் -தடைகளை உடைத்தெறிகிறது. உங்களை உயர்நிலைக்கு உயர்த்துகிறது. ஆன்மா பல நல்ல அனுபவங்களைப் பெறுவது தியானத்தின் மூலம் தான்.
குழப்பம் ஒரு நோய், தியானம் அதற்கு மருந்து. நீங்கள் குழம்பித் தவிக்கின்ற நிலை ஏற்படும் போதெல்லாம், தியானத்தில் அமருங்கள். தியானம் உங்களுக்குத் தெளிவைத் தரும்.
எதிர்மறை செயல் தியானம் உங்களிடமிருந்து கோபத்தை, பேராசையை, வேண்டத்தகாதவற்றை எடுத்துச் செல்லும். இப்படி உங்களிடம் எடுத்து எடுத்தே அது உங்களை ஏழையாக்கி விடும். தியானம் சூரியனைப் படைத்துத் தராது. ஆனால் சூரிய ஒளியை உங்களுக்குள் வரவிடும்.
தியானம் உங்களுக்குள் இருக்கும் அழுக்கையெல்லாம் வெளியேற்றுகின்றதே, அதைவிட வேறென்ன வேண்டும்? உங்களுக்குள் இதுவரை மாறாதிருந்த அமைதியின்மையை மாற்றியிருக்கின்றதே, அதைவிட பெரிதாய் வேறெதைச் செய்ய? தியானம்- ஆழ்ந்த உணர்ச்சித் துாய்மை. தியானம் அன்பில் மலர்வது, வார்த்தைகளற்றது. இதனை அனுபவத்தில் உணரலாம்.
மனிதனுடைய உயர்வுக்கு தியானமே அடிப்படையாக இருக்கிறது என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ஆன்மாவின் நியாயமான ஆசைகள் எதுவாக இருந்தாலும், அதை இறைவன் நிறைவேற்றுகிறான். அந்த ஆசை நிறைவேற்றுவதற்கான காலத்தையும்,
இடத்தையும் நிரூபிக்கும் உரிமை ஆன்மாவுக்கு கிடையாது. அது இறைவனின் உரிமையாக கருதப்படுகிறது.வாழ்க்கை வெறுப்புகள்
பிறவி இருக்கும் வரை இன்பம்,
துன்பங்கள் மாறி மாறி அனுபவிப்பதன் விளைவாக, ஒரு காலக் கட்டத்தில் ஆன்மாவுக்கு உலகியல் வாழ்க்கையிலேயே வெறுப்புகள் உண்டாகும்.அப்பொழுது ஆன்மா இறைவன் பக்கம் திரும்பும். அந்த இறைவனை அடைய தியானமே சிறந்த முறையாகும். “கடலுக்கு மட்டுந்தான் அலைகளா? மனதுக்கும் அலைகள் உண்டு; -அவை எண்ணங்கள்”
மனிதன் ஒரு மின்கருவி. மனம் என்பது சப்த அலைகளை இசைக்கும் மின்கருவி போன்றது. மூளை அந்த சப்த அலைகளுக்குத் தகுந்த மின்காந்த அலைகளை உண்டாக்கும் கருவி போன்றது. மன அலைகள் மின்சக்தித்தன்மை கொண்டவை. நல்ல எண்ணங்கள் உள்ளோர் நல்ல எண்ணமுடையோரையும், கெட்ட எண்ணமுடையோர், கெட்ட மனமுடையோரையும் சேர்க்கின்றனர். இதனையே, “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்றனர் போலும்.
எண்ணங்களின் வலிமை
எண்ணங்கள் சக்தி மிக்கவை. அவை சென்று சேருமிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எண்ணங்களின் பின்னணியில் மனம் இருக்கிறது. மனம் அழிந்தால் எண்ணங்கள் அழியும். மனம் சுயேச்சைப் போக்கு கொண்டது. அது எவ்விதமாகவும் எண்ணும், எங்கும் செல்லும், எதையும் செய்யும்.
“எண்ணங்களைக் கட்டுப்படுத்துங்கள் மனம் கட்டுப்படும். மனதை நெறிப்படுத்துங்கள்
எண்ணங்கள் நெறிப்படும்.” தியானத்தின் மூலம் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். கெட்ட எண்ணங்களை நசுக்கி போடுங்கள்.சிந்திக்கத்தெரிந்தவர்கள் நாம். மனம் விருப்பத்தை நிறைவேற்றும் கற்பக விருட்சமாய் இருக்கிறது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.”
என்பதன் விளக்கம் எண்ணங்களின் தன்மையை விளக்குவதாக உள்ளது.எல்லாம் வட்டம் உலகமே எண்ண அலைகளால் நிரம்பியது. நேர்கோட்டுச்சலனம் என்பது ஏதுமில்லை. எல்லாம் வட்டமாவே முடிவுறும். ஆகவே நாம் வெளியிடும் எண்ணங்கள் எதுவும் ஒருநாள் திரும்பவும் நம்மையே வந்தடையும். நல்ல எண்ணங்கள் நல்லதையே செய்யும்.“உள்ளத்தனையது உயர்வு உள்ளம்”. அந்தஅளவுக்கு இறை ஒளி பட்டு பிரகாசிக்கும். பிரதிபலிக்கவும் செய்யும். வாழ்வும் வளம் பெறும்.சுதந்திரத்திற்காக, எளியவரான காந்தியால் தேச பக்தர்களை எப்படி ஒன்று திரட்ட முடிந்தது. அவருடைய தியானத்தினாலும், கூட்டுப் பிரார்த்தனையாலும் மக்களை ஒன்று திரட்டி, சுதந்திரம் பெற முடிந்தது. சுதந்திர போராட்டத்திற்கு முன்பும், பின்பும் சரி தியானம் செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுத்ததாக தேசபிதா சொல்லியுள்ளார்.
எனவே தியானத்தை நம் அன்றாட கடமையாக்குவோம்! -ஆர். மைதிலிஎழுத்தாளர், மதுரை98425 84933

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X