போலீசாரை கொன்ற நக்சலைட்டுக்கு 5 ஆயுள் சிறை தண்டனை| Dinamalar

தமிழ்நாடு

போலீசாரை கொன்ற நக்சலைட்டுக்கு 5 ஆயுள் சிறை தண்டனை

Added : பிப் 23, 2016

வேலூர்: இன்ஸ்பெக்டர் உட்பட, மூன்று போலீசாரை, வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கில், நக்சலைட் சிவலிங்கத்திற்கு, 5 ஆயுள் தண்டனை விதித்து, வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலையில் நக்சலைட்கள் தங்கி ஆயுத பயிற்சி பெற்றனர். கடந்த, 1978ல், மத்தூரில் அப்பாசாமி ரெட்டியாரை நக்சலைட் சிவலிங்கம் தலைமையில் கொலை செய்து, பணம் கொள்ளையடித்தனர். மடவாளம் இரட்டை கொலை வழக்கு, ஏலகிரிமலை ரெட்டியார் கொலை வழக்கு என, சிவலிங்கம் மீது, 11 கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் பதியப்பட்டன. திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில், நக்சலைட்டுக்களை பிடிக்க, போலீசார் உன்னிகிருஷ்ணன், மாசிலாமணி, ஏட்டுகள் ஏசுதாஸ், முருகேசன் ஆகியோர், கடந்த, 1980 ஆகஸ்ட், 6ம் தேதி அதிகாலை ஏலகிரிமலைக்கு அம்பாசிடர் காரில் சென்றனர். மலையடிவாரத்தில் நக்சலைட்டுக்கள் சிவலிங்கம், பெருமாள், ராஜப்பா, செல்வம், சின்னதம்பி ஆகியோரை கைது செய்து, கைகளை கட்டி காரில் திருப்பத்தூருக்கு அழைத்து வந்தனர். திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில், கூட்டு ரோடு என்ற இடத்தில் கார் வரும் போது, சிவலிங்கம் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசினார். இதில் காரில் வந்த சிவலிங்கம் தவிர மற்றவர்கள் படுகாயமடைந்தனர். அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற, இன்ஸ்பெக்டர் பழனிசாமி, ஏட்டு ஏசுதாஸ், முருகேசன் மற்றும் நக்சலைட்டுக்கள் பெருமாள். ராஜப்பா, செல்வம் ஆகியோர் இறந்தனர். போலீசார் உன்னிகிருஷ்ணன், மாசிலாமணி மற்றொரு நக்சலைட்டு சின்னதம்பி ஆகியோர், 6 மாத சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர். வெடிகுண்டு வீசிய நக்சலைட்டு சிவலிங்கம் தப்பியோடிவிட்டார். திருப்பத்தூர் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

வழக்கு, 1981 ல், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. தப்பியோடிய சிவலிங்கம், ஆந்திர மாநிலம் நலகுண்டாவில், 29 ஆண்டு தலைமறைவாக இருந்தார். கடந்த, 2009 ல், விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி நடராஜன், நக்சலைட் அன்பு என்ற சிவலிங்கத்துக்கு, ஐந்து ஆயுள் தண்டனையும், வெடிகுண்டு வைத்திருந்ததற்காக, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தார். அவர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தீர்ப்புக்குப்பின் நக்சலைட் சிவலிங்கம் கூறுகையில், ''நான் குற்றம் செய்யவில்லை,'' என்றார்.

ஆந்திரா, தர்மபுரியில் போலீஸ் 'அலர்ட்': நக்சலைட் சிவலிங்கத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், தர்மபுரி மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம், 'அலர்ட்' செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட போலீசார் கூறியதாவது: ஆந்திர மாநில நக்சல்களுடன் சிவலிங்கத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. திருப்பத்தூரில் இருந்து தப்பிய பிறகு, இவர் ஆந்திர நக்சல்கள் ஆதரவில் தான், 29 ஆண்டு மறைந்திருந்தார். இதனால் அவர்கள் நாசவேலைகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நக்சல்கள், ஆந்திர நக்சல்களுடன் தொடர்பில் உள்ளனர். இதனால், தர்மபுரி, ஆந்திர மாநில போலீசார், உளவுத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அங்குள்ள நக்சல்களை கண்காணிக்கும் படி கூறியுள்ளோம். நக்சலைட் சிவலிங்கம் வழக்கில், 45 பேர் சாட்சியம் அளித்தனர். அதில், இப்போது உயிருடன் இருப்பது, 14 பேர் தான். அவர்கள், பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X