அஞ்சு பேருக்கு இல்லை சீட்டு.... ஆளும்கட்சி வைக்குது வேட்டு!| Dinamalar

அஞ்சு பேருக்கு இல்லை சீட்டு.... ஆளும்கட்சி வைக்குது வேட்டு!

Added : பிப் 23, 2016
Share
கரட்டுமேடு மலைக்கோவிலில் கூட்டம் குறைவாகவேயிருந்தது. கீழே வெயில் கொளுத்தினாலும், மேலே காற்று பலமாக வீச, மரத்துக்குக் கீழே உட்கார்ந்து, சித்ராவும், மித்ராவும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.''மித்து! இந்த கோவில்ல போன வாரம் அசுவ மேத யாகம்னு குதிரைகளை வச்சு, யாகம் நடத்துனாங்க தெரியுமா?'' என்று அரசியலோடு ஆரம்பித்தாள் சித்ரா.''அதான் 'அம்மா' பொறந்தநாளைக்கு,
அஞ்சு பேருக்கு இல்லை சீட்டு.... ஆளும்கட்சி  வைக்குது வேட்டு!

கரட்டுமேடு மலைக்கோவிலில் கூட்டம் குறைவாகவேயிருந்தது. கீழே வெயில் கொளுத்தினாலும், மேலே காற்று பலமாக வீச, மரத்துக்குக் கீழே உட்கார்ந்து, சித்ராவும், மித்ராவும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
''மித்து! இந்த கோவில்ல போன வாரம் அசுவ மேத யாகம்னு குதிரைகளை வச்சு, யாகம் நடத்துனாங்க தெரியுமா?'' என்று அரசியலோடு ஆரம்பித்தாள் சித்ரா.
''அதான் 'அம்மா' பொறந்தநாளைக்கு, ஊரு பூராம் போஸ்டர், பேனர், பூஜை, காவடின்னு களைகட்டுதே. நாளைக்கு எத்தனை கோஷ்டி எத்தனை விழா எடுக்கப்போகுதோ? இதை நடத்துனது யாரு?'' என்றாள் மித்ரா.
''இந்த ஏரியாவுல இருக்காரே, வில் அம்பு கவுன்சிலர்... அவரு தான் நடத்திருக்காரு. இப்பிடி லட்சம் லட்சமா செலவழிச்சு, யாகம் பண்றதுக்குப் பதிலா, ரத்த தானம் பண்ணுனாங்கன்னா, பல உயிர்களைக் காப்பாத்தலாம். நம்மூர்ல, மாசத்துக்கு, 500 யூனிட் வரைக்கும் ரத்தம் கிடைக்கிறது கஷ்டமா இருக்காம்'' என்றாள் சித்ரா.
''ஆனா, ரத்தத்தின் ரத்தங்கள் ஆட்சியிலயும், உடன் பிறப்புகள் தான், அதிகமா ரத்த தானம் கொடுத்ததுக்கு, கலெக்டர்ட்ட ரெண்டு வருஷமா பரிசு வாங்கிருக்காங்க தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''பழைய டெபுடி கார்த்திக், வாங்குனாரே...அதுவா?''
''அதே தான்...தளபதி ரத்த தான இயக்கம்னு தொடர்ந்து ரத்த தான முகாம் நடத்தியே, 2013, 2014 ரெண்டு வருஷமும் பரிசு வாங்கிட்டாரு. போன வருஷமும் அவுங்க தான் 'டாப்'ல இருக்காங்க. ஆனா, இன்னமும் பரிசு கொடுக்கலை. ஏற்கனவே கொடுத்ததுக்கே, கலெக்டரை ஆளும்கட்சி விஐபியும், சிடுசிடு எம்.எல்.ஏ.,வும் செம்ம வாங்கு வாங்கீருக்காங்க''
''அவுங்க என்ன சொன்னாங்களாம்?''
''அதிகமா ரத்த தானம் கொடுத்தது அவுங்கதான்னு சொல்லி, ரெக்கார்டுகளை அனுப்பி வச்சுட்டாங்களாம். போன வாரம் கண்டியப்பன் கல்யாண மண்டபத்துல, கார்த்திக் நடத்துன ரத்ததான முகாம்ல, பாதிப்பேரை உப்புச்சப்பு இல்லாத காரணங்களைச் சொல்லி டாக்டர்க, 'ரிஜெக்ட்' பண்ணிருக்காங்க. வந்த 1,500 பேர்ல 118 யூனிட் ரத்தந்தான் எடுத்திருக்காங்க. ஆளும்கட்சியோட கெடுபிடிதான் காரணமாம்''
''நீ சொன்னியே, சிடுசிடு சாமி...அவருக்கு, இந்த முறை சீட்டு இல்லியாமே'' என்றாள் சித்ரா.
''அவருக்கு மட்டுமில்லை. மாநகர் மாவட்டத்துல இருக்குற அஞ்சு தொகுதிகள்ல, பழைய ஆளுங்களுக்கு, இந்த முறை 'சீட்டு' இல்லையாம். இதிகாச வில்லனோட பரிந்துரையில, பட்டியல் தயார்னு சொன்னியே... ஆனா, போன தடவை அவரோட 'ரெகமண்டேஷன்'ல, போட்டி போட்ட 89 எம்.எல்.ஏ.,க்களுக்கு, இந்த தடவை 'சீட்டு' இல்லைன்னு பேசிக்கிறாங்க'' என்றாள் மித்ரா.
''இருக்கலாம். தப்பித்தவறி, பழைய ஆளுங்களுக்குக் கொடுத்தாலும், பல பேரு தேறுறது கஷ்டம். அதுலயும், சிங்காநல்லூர்ல நிலைமை ரொம்ப மோசம்னு உளவுத்துறை 'ரிப்போர்ட்' போயிருக்காம். நாயுடு ஓட்டு கூட, கண்டிப்பா கிடைக்காதுன்னு அதுல சொல்லிருக்காங்களாம்'' என்றாள் சித்ரா.
''தெற்குல கவருமென்ட்டு வக்கீலுக்கு தான் 'சீட்' உறுதிங்கிறாங்க. மத்தவுங்களை 'கம்பேர்' பண்ணுனா, அவரு தகுதியான 'கேண்டீடேட்'தான்'' என்றாள் மித்ரா.
''அந்த யூனியன் எம்.எல்.ஏ.,வைப் பத்திப் பேசவும், இதுக்கு முன்னாடி பல வருஷமா, பஸ் யூனியன்ல பொறுப்புல இருந்தாரே. அவரு ஞாபகம் வந்துச்சு''
''பேர்லயே பஸ் கார்ப்பரேஷன் பேரை, அடைமொழியா வச்சிருப்பாரே. அவரா?''
''அவரே தான்...அவரைப் பத்தி, தலைமைக்கழகத்துக்கு ஒரு பெட்டிஷன் பறந்திருக்கு. அவரும், கார்ப்பரேஷன் வக்கீல் ஒருத்தரும் சேர்ந்து, போத்தனூர்ல இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்துல இருக்குற கல்யாண மண்டப இடத்தையும், பக்கத்துல இருக்குற பல ஏக்கர் இடத்தையும் விக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டதா...!''
''அது...அறநிலையத்துறை இடம்...இவுங்க எப்பிடி?''
''தெரியலை...அது பொய்ப் பெட்டிஷனா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு'' என்று கொக்கி போட்டாள் சித்ரா.
''ஏன்...பேரு எதுவும் இல்லையா?''
''இருக்கு...நம்மூரு டாக்டரு, தென் மாவட்டத்துல எம்.எல்.ஏ.,வா இருக்காரே. அவரோட விசிட்டிங் கார்டை ஜெராக்ஸ் எடுத்து, அந்த 'பெட்டிஷன்'ல ஒட்ட வச்சிருக்காங்க''
பக்கத்தில் இரு சிறுவர்கள் வந்து, சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
சித்ராவே தொடர்ந்தாள்.
''மித்து...கார்ப்பரேஷன்ல 'மாண்புமிகு' டாக்டரும், நிஜ டாக்டரும் இந்த குட்டிப் பசங்களை மாதிரி சண்டை போட்டுக்கிறதால, யாரு சொல்றதைக் கேக்குறதுன்னு தெரியாம, ஆபீசர்க முழிக்கிறாங்க''
''இவுங்க சொல்றதை கேக்குறாங்களோ இல்லியோ...பழைய 'டவுன்டாடி' சொல்றதை, கார்ப்பரேஷன்ல இன்னும் பல பேரு கேக்குறா மாதிரித் தெரியுது. கார்ப்பரேஷன் டாய்லெட்டுக்கு, சிங்கிள் டெண்டரா விட்டு, நிதிக்குழு பொறுப்புல இருக்குற கவுன்சிலரோட பினாமிக்குக் கொடுத்ததுக்கு அவரோட 'பவர்' தான் காரணமாம்'
''கார்ப்பரேஷன்ல மட்டுமில்லை...கலெக்ட்ரேட்லயும் அவரோட ஆதரவு கவுன்சிலரு சொன்னதுக்காக, மயான பூமியை பட்டா போட்டுக் கொடுக்க, தயாராயிட்டாங்க'' என்றாள் சித்ரா.
''நாளைக்கு யாராவது...என்னோட பாட்டன் சமாதி இங்க இருந்துச்சே. எங்கன்னு கேட்டா என்ன பண்ணுவாங்க?'' என்றாள் மித்ரா.
''அதான் தெரியலை...ஆனா, அந்த இடத்தோட மதிப்பு மட்டுமே, 12 கோடி ரூபாய்க்கு மேல இருக்கும். அந்த இடத்துக்கு, இலவச பட்டா கொடுக்குறோம்னு, குடும்பத்துக்கு ரெண்டு, மூணு லட்ச ரூபா வசூல் பண்ணிருக்காராம் அந்த கவுன்சிலரு. அமெரிக்காவுல இருக்கிறவுங்க, கார் வச்சிருக்கிறவுங்கன்னு, அதுல பல பேரு வசதியானவங்கன்னு சொல்றாங்க'' என்றாள் சித்ரா.
''ஆனா...ஒரு மாற்றுத்திறனாளி பொண்ணு, நாலு, அஞ்சு ஏழைங்க வீடும் இருக்காமே'' என்றாள் மித்ரா.
''அவுங்களுக்கு வேற இடத்துல மாற்று வீடு கொடுக்கட்டும். அவுங்களைக் காமிச்சு தான், ஆபீசர்களை ஏமாத்தி, மொத்த இடத்துக்கும் பட்டா வாங்கி, பல கோடி ரூபா இடத்தை அமுக்கப் பாக்குறாருன்னு, ஏரியா மக்களே குமுறுறாங்க'' என்றாள் சித்ரா.
''பல கோடி இடம்னு சொன்னியே...பீளமேட்டுல இருக்குற போலீஸ் ஆபீசர், பல கோடி ரூபா மதிப்புல, காளப்பட்டில பிரமாண்டமா ஒரு வீடு, நீலம்பூர் பக்கமா, ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கிப் போட்ருக்காராம். யார்ட்டயும் கோபிச்சுக்காம, சத்தமில்லாம அங்க சம்பாதிச்சதாம்'' என்றாள் மித்ரா.
''அந்த ஏரியா தகவல் இன்னொண்ணு சொல்றேன். சின்னியம்பாளையம் செக்போஸ்ட் பக்கத்துல 'பார்' நடத்துற ஒருத்தரு சொல்ற போலீசைத்தான், அந்த செக்போஸ்ட்ல போடுவாங்களாம். அவரு தான், ஸ்டேஷன்ல இருக்குற எல்லாருக்கும், சரக்கு, சாப்பாடு, மாமூல் எல்லாம் வாங்கித் தர்றாராம்'' என்றாள் சித்ரா.
''அக்கா...சாப்பாடு வாங்கித் தர்றதை நீ பெருசா பேசுற...ஓசியில 'அயர்ன்' பண்ணித் தர்றதுக்காக, சந்தன மரம் வெட்டுற கும்பலுக்கு உதவுற ஆளுகளையே பிடிக்காம இருக்காங்க, நம்மூரு போலீசு?''
''என்னடி...புதுசா ஒரு பீதியைக் கிளப்புற?''
''ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் ரோடு, பிஎஸ்என்எல் ஆபீஸ் ஏரியா, ரெட்பீல்ட்ஸ்னு சிட்டிக்குள்ள பல இடங்கள்ல, ரோட்டை ஆக்கிரமிச்சு, ஆளுகளை வச்சு, 'அயர்ன்' கடை போட்ருக்காரு ஒருத்தரு. அவரு தான், உப்பிலிப்பாளையம் போலீஸ் குவாட்டர்ஸ்லயும் அயர்ன் கடை வச்சிருக்காராம். அவர்ட்ட வேலை பாக்குற ஆளுங்கதான், ரேஸ்கோர்ஸ் ஏரியாவுல சந்தன மரங்களை அடையாளம் பாத்து, தகவல் சொல்றாங்களாம்''
''அங்க கடை வச்சிருக்கிற ஒருத்தருதான், கார்ப்பரேஷன் பர்மிஷனே இல்லாம, கலெக்டர் பங்களாகிட்டயே, ரோட்டோரத்துலயே ஆடு வெட்டி, சண்டே சண்டே மட்டன் கடையும் போடுறாராம்'' என்றாள் சித்ரா.
''அதுவும் அவரே தான். அது மட்டுமில்லை. ஹவுசிங் போர்டு வீடுகளை, உள் வாடகைக்கு விடுறது, காஸ் சிலிண்டரை 'பிளாக்'ல விக்கிறதுன்னு எல்லா 'இல்லீகல்' வேலையும் பண்றாராம். ஆனா, அவரை அங்கயிருந்து நகர்த்தவே முடியலை. காரணம், லோக்கல் போலீசுக்கும், ஹவுசிங் போர்டுல இருக்குற கீழ் மட்ட ஆளுகளுக்கும் மாசாமாசம் கரெக்டா 'கட்டிங்' வெட்டிறாராம்'' என்றாள் மித்ரா.
''நேத்தும் சிம்புகிட்ட 'கட்டிங்' வாங்கிட்டு தான், மீடியாகாரங்களை ரேஸ்கோர்ஸ் ஸ்டேஷனுக்குத் திருப்பி விட்டு, காட்டூர் ஸ்டேஷன்ல விசாரிச்சு அனுப்பிட்டாங்க'' என்றாள் சித்ரா.
''ஆனா, ஆர்.டி.ஓ., டிபார்ட்மென்ட்ல, காசு வாங்கிட்டு, போஸ்ட்டிங் போட்ட ஏழு மாவட்ட 'ஜாயின்ட்' ஆபீசரே, 'அது ஒரு வருஷத்துக்கு தான். கண்டினியூ பண்ணணும்னா திரும்ப காசு வேணும்'னு கேக்குறாராம். அதனால, அவுங்க எல்லாம் நேரடியா அமைச்சரைப் பார்க்கப் போயிட்டாங்களாம்'' என்றாள் மித்ரா.
பேசிக்கொண்டே கீழே வந்து விட, வேகமாக வண்டியைக் கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X