"கலெக்டர் மீது, அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்டக்குழுவினர் கோபமா இருக்காங்களாமே,'' என, ஆரம்பித்தாள் மித்ரா.
"அதான், அரசாணை வெளியிட்டுட்டாங்க, போராட்டம் வாபஸ் ஆகிடுச்சே?'' என, புரியாமல் கேட்டாள் சித்ரா.
"போராட்டக்குழு, திருப்பூர் கலெக்டர் ஆபீசுக்கு வந்த போதும் சரி; உண்ணாவிரத போராட்டம் நடந்த போதும், கலெக்டர் கண்டுக்கவே இல்லை. மக்களிடம் ஆர்.டி.ஓ., தான் பேசுனாரு. உண்ணாவிரதத்தை கைவிடனும் நேர்ல போய், பலமுறை பேசினாரு. போராட்டக்குழு கலெக்டர் ஆபீசுக்கு வந்தப்பவும், அவருதான் சமாதானம் செஞ்சு, அனுப்பி வச்சாரு. திட்டத்துக்கு அரசாணை வெளியானதும், கலெக்டர் ஆபீசுல இருந்து அரசாணை நகலை எடுத்து வந்து, போராட்டத்தை முடிச்சு வச்சாரு. அவரத்தான், மக்களும் மரியாதையாக பார்க்குறாங்க,'' என்றாள் மித்ரா.
"அவுங்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடி. தேர்தல் நேரத்துல, "டிரான்ஸ்பராகி' வந்திருக்காங்க மாவட்டத்தை பத்தியும், ஒவ்வொரு நகரத்தை பத்தியும் புரிஞ்சிக்கிறதுக்குள்ளயே, பல வடிவங்கள்ல, போராட்டம் வெடிச்சிருக்கு. ஒரு பக்கம் விசைத்தறியாளர் போராட்டம், இன்னொரு பக்கம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், மற்றொரு பக்கம் அத்திக்கடவு குழுவினர் உண்ணாவிரதம்னு, அவங்களை திணறடிச்சிட்டாங்க. தேர்தலுக்கு பிறகே, அவுங்களோடு உண்மையான செயல்பாடு தெரியும்,'' என, "லெக்சர்' கொடுத்தாள் சித்ரா.
"அதெல்லாம் சரி, திருப்பூர் வந்திருந்த வைகோவுக்கு விஷேசமான பரிசு கொடுத்தாங்களாமே; ரொம்ப சந்தோஷப்பட்ட அவரு, அப்பப்ப, "டென்ஷன்' ஆனதா, சொல்றாங்களே,'' என, கேள்வியை வீசினாள் மித்ரா.
"ஆமாப்பா, கோவை, பொள்ளாச்சி, பல்லடத்தை விட, திருப்பூர்ல கூட்டம் அதிகம். அதைப் பார்த்ததும், வைகோவுக்கு ரொம்ப சந்தோஷம். பொன்னாடைக்கு பதிலா, வேட்டி, சட்டை, உள்ளாடையை பரிசா கொடுத்தாங்க, "தோழர்'களும் சந்தோஷமா வாங்கிட்டாங்க. வி.சி., சார்பில், "மெகா சைஸ்' மாலை அணிவித்து, வீரவாள் கொடுத்து அசத்திட்டாங்க,'' என, சித்ரா முடிப்பதற்குள், ""வைகோ எதுக்கு "டென்ஷன்' ஆனாருன்னு சொல்லவே இல்லையே...'' என, அவசரப்பட்டாள் மித்ரா.
"மூன்று கட்சிக்காரங்களும், அமைதியா ஒக்கார்ந்திருந்தாங்க. வி.சி., கட்சியை சேர்ந்த இளைஞர்கள், 10 அடி உயர கம்புல கொடியை கட்டி, மேடையின் இரு பக்கமும் நின்னுட்டு, கூச்சல் போட்டுட்டு இருந்தாங்க. திருமா பேசிய போது, பலத்த கூச்சல் எழுப்பி, ஆரவாரம் செய்தனர். மக்களின் கவனம் சிதறியது. அடிக்கடி அமர்க்களம் செஞ்சதாலதான், வைகோ "டென்ஷன்' ஆகிட்டே இருந்தாரு. கட்சிக்காரங்களை, திருமா முறைச்சு பார்த்ததும், ஓரளவுக்கு கட்டுப்பாடு ஆனாங்க,'' என்றாள் சித்ரா.
"தேர்தல் போட்டி எப்படியிருக்கும்,'' என மித்ரா கேட்க, ""மக்கள் நல கூட்டணிக்கு தே.மு.தி.க.,வும், த.மா.கா.,வும் வந்திரும்னு நெனைக்கிறாங்க. அப்படி வந்தா, திருப்பூர் தெற்கு தொகுதியை எப்படியும் கைப்பத்திரலாம்னு கணக்கு போட்டிருக்காங்க. பல்லடம் நகராட்சி, தே.மு.தி.க., வசமிருக்கு. கூட்டணி பலம் கூடுச்சுன்னா, ஆளுங்கட்சிக்கு ஆட்டம் காட்டலாம்னு நெனைக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
"ஆளுங்கட்சிக்குள்ள முட்டல், மோதல் நடந்துக்கிட்டு இருக்காமே,'' என, மித்ரா கேட்டாள்.
"விஷயம் வெளிச்சத்துக்கு வந்துருச்சா, ஆளுங்கட்சியில இருக்கற முக்கிய நிர்வாகிகள் பலரும், விருப்ப மனு தாக்கல் செஞ்சுட்டு வந்துருக்காங்க. முதல்வர் பிறந்த நாளை காரணமாக வச்சு, ஆளாளுக்கு விழாவும் நடத்திக்கிட்டு இருக்காங்க. "சிட்டி மம்மி'க்கு துணையானவரு, வி.ஐ.பி.,யின் வலதுகரமா செயல்பட்டாரு. தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டு, "கனவுல' மிதக்குற அவரு, இந்த தடவை வி.ஐ.பி.,க்கு "சீட்' கெடைக்காதுனு பேசியிருக்காரு. இது செவிவழி செய்தியா, அவரோட காதுக்கு போனதால, உரசல் ஆரம்பிச்சிருக்கு,'' என்றாள் சித்ரா.
"தொழிற்சங்கத்துக்காரங்க அதிர்ச்சியாகிட்டாங்களாமே,'' என, மித்ரா கேட்டாள்.
"ஆமாப்பா, சம்பள உயர்வு பேச்சு போயிக்கிட்டு இருக்கு; நூறு சதவீத உயர்வு கேக்குறாங்க. தொழில் அமைப்பை சேர்ந்தவங்க, பேச்சை இழு... இழு...னு இழுத்துக்கிட்டு போனாங்க. ரகசியமா, வி.ஐ.பி., உதவியோடு, குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிச்சு, அரசாணை வெளியிட வச்சுட்டாங்க. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிட்டாங்க,'' என, சித்ரா சொன்ன போது, "டிவி'யில், விஜயகாந்த் பேச்சு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இருவரின் கவனமும் திசை திரும்பியது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE