தேர்தல் சட்டங்கள் 4| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

தேர்தல் சட்டங்கள் 4

Added : பிப் 23, 2016
Advertisement

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி, வாக்காளர் என்பவர் யார்? வேட்பாளர் என்பவர் யார்? என்பவை குறித்து கடந்த வாரங்களில் அறிந்து கொண்டோம்,இப்போது தேர்தலை நடத்துவதற்கான நிர்வாக இயந்திரம் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அலுவலரே, தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு கட்டளைகளுக்குட்பட்டு, தேர்தலைக் கண்காணிப்பார். ஆனால் இந்தத் தேர்தல் ஆணையம் அமைப்பது குறித்தும், அது எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதில் இருக்க வேண்டிய நபர்கள், தலைமையாளர் எவர் போன்றவை குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின், ஆர்டிகில் 324 முதல் ஆர்டிகில் 329 வரையான பிரிவுகள் சொல்கின்றன.இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தேர்தல் ஆணையத்தில், ஒரு தலைமைத் தேர்தல் அதிகாரியும். ஜனாதிபதி நியமனத்தின் படி இன்னும் சில தேர்தல் கமிஷனர்களும் இருப்பார்கள். ஜனாதிபதியின் இந்த நியமனமானது பாராளுமன்றத்தினால் ஆன ஒரு சட்டத்தின் கீழானதாக இருக்கும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, மாவட்ட தேர்தல் அலுவலரானவர், தலைமை தேர்தல் அலுவலரின் ஆளுகைக்குட்பட்டு, அந்தந்த மாவட்டத்தில், அவரது ஆள்வரையறைக்குட்பட்ட பகுதிகளில், பாராளுமன்ற, மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவார். இவரின் பணியானது, தலைமைத் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை அலுவலரால் அளிக்கப்படும் அனைத்து கடமைகளையும் செய்து முடிக்க வேண்டும்.இவர்கள் போக, தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவதைக் கண்காணிக்க என அரசு அதிகார் ஒருவரையும் நியமிக்கலாம். இவர் “பார்வையாளர்' எனப்படுவார்.இங்ஙனம் நியமிக்கப்பட்ட 'பார்வையாளர்' எனும் அரசு அதிகாரி, அவர் நியமன செய்யப்ப்ட்ட தொகுதியில், வாக்குச்சீட்டு பறிப்பு, வாக்குப் பெட்டி கடத்தல், வாக்குச்சீட்டு அழிக்கப்படுதல் போன்ற சட்ட விரோதச் செயல் நடந்திருப்பதாக அறிந்தால், அந்தத் தொகுதியில் வாக்கு முடிவு அறிவிக்கப்படும் முன் அவரின் புகாரின்படி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்த அல்லது வாக்கு முடிவினை அறிவிக்காதிருக்க தேர்தல் பொறுப்பு அலுவலருக்கு, இந்த அரசு அதிகாரியானவர் உத்தரவிடலாம்.அப்படி அவர் உத்தரவிட்டிருக்குமிடத்தில், அந்த உத்தரவிட்ட உடனேயே அவர் அந்தத் தகவலை, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கைவிட வேண்டும். அதன் படி, அனைத்து முக்கிய சூழல்களையும் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையமானது இதே சட்டத்தின் பிரிவு 58A, அல்லது 64A, அல்லது 66ன் கீழ் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும். 58A (Adjournment of poll countermanding of eelection on the ground of booth capturing)பிரிவானது வாக்குச் சாவடி கைப்பற்றலின் பேரில் வாக்குப் பதிவு தள்ளி வைப்பது, அல்லது தேர்தல் ஒத்தி வைப்பது குறித்து விளக்குகிறது. தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் முன், ஒரு வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டு கைப்பற்றுகை நடந்திருந்தாலோ, அல்லது, வாக்கு எண்ணும் இடத்தில் கைப்பற்ருகை நடந்திருந்தாலோ, 'பார்வையாளர்' அந்தத் தகவலை ஆணையத்திற்கு உடனே தெரிவித்ததும், அந்த இடத்தில் நடந்த வாக்குப் பதிவினை இல்லா நிலையதாக விளம்புதலும், வேறு நாளில் தேர்தல் நடக்கும் எனச் சொல்லி அந்த நாள், நேரம், இடத்தையும் அறிவிக்கலாம். இந்தப் பிரிவின் படி, 'வாக்குகள் கைப்பற்றுதல்' எனும் பதம் இதே சட்டத்தின் பிரிவு 135A - ல் உள்ளவாறு அமையும்.பிரிவு 135A (Offence of booth capturing) ன் படி, வாக்குச் சாவடி கைப்பற்ருகை குற்றம். இந்தக் குற்றத்தைச் செய்யும் நபருக்கு, ஒரு வருடத்திற்கும் குறையாத, ஆனால் மூன்று வருடம் வரை நீட்டிக்கத் தக்க சிறைத் தண்டனையுடன், பணத் தண்டமும் விதிக்கப்படும். மேலும் அக்குற்றம் அரசு அலுவலர் ஒருவரால் செய்யப்படின், அவர் மூன்று வருடங்களுக்கு குறையாத, ஆனால் ஐந்து வருடங்களுக்கு மிகாத சிறைத்தண்டனையும் அடையத் தக்கவர் ஆவார்.”வாக்குச் சாவடி கைப்பற்றுதல்” என்பதில், தேர்தல் நடக்கும் இடத்தில், சீட்டுகளை, சீட்டுப் பெட்டியினைக் கைப்பற்றுதல், வாக்குப் பதிவு நடக்கும் இடத்தில் இருப்பவர்களைக் கைக்கொள்ளுதல், வாக்குப் பதிவு செய்ய வந்தவரை வரவிடாமல் செய்தல், வாக்குப் பதிவுச் செய்பவரைச் சுதந்திரமாக வாக்குப் பதிய விடாமல் செய்தல், அதற்காக, அச்சுறுத்தல், இவற்றைச் செய்தல், மற்றும் அப்படிச் செய்பவருக்கு உடந்தையாக இருத்தல் ஆகிய எவையுமே அடங்கும்.பிரிவு 64Aன் படி(Distruction, loss, etc, of ballot papers at the time of counting), வாக்கு எண்ணுகையில், அந்தச் சாவடியின் முடிவுகளை உறுதி செய்ய இயலாத அளவுக்கு, வாக்கு எண்ணிக்கைப் பணி நிறைவடையும் முன்பு, தேர்தல் பொறுப்பு அதிகாரியின் பாதுகாப்பிலிருந்து வாக்குச் சீட்டுகளை சட்ட விரோதமாக எடுத்துச் சென்றால், அல்லது அந்தச் சீட்டுகளை வேண்டுமென்று அழித்தால், சேதமடையச் செய்தால், அல்லது காணாமல்போகச் செய்தால், ஓரளவுக்கு மோசடியான மாற்றம் ஏதும் செய்திருந்தால் தேர்தல் பொறுப்பு அதிகார் இத்தகவலை உடனேயே தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதன் மீது தேர்தல் ஆணையம் மற்ற சூழல்களைக் கணக்கில் கொண்டு வாக்கு எண்ணிக்கையை நிறுத்த ஆணையிட்டு, மறுவாக்குப் பதிவு ஒன்றினை நடத்த தேதி, நேரம், இடம் குறிக்கவோ, தேவை இருப்பின் மறு தேர்தலோ நடத்த அறிவிக்கைச் செய்ய வேண்டும். ஆனால், அந்த சாவடியில் புதிய வாக்கெடுப்பின் முடிவில் பிரச்சனை இல்லை என திருப்தியுற்ரால், வாக்கெண்ணுகையை தொடரச் செய்து முடிவினை அறிவிக்கலாம்.பிரிவு 66ன் படி(Declaration of Rasults), வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையும் முடிந்தபின், தேர்தல் ஆணையத்தின் முரணான அறிவிக்கை ஏதும் இல்லாதிருக்கும்பட்சத்தில் இச்சட்டம், மற்றும் இச்சட்டத்தின் கீழான விதிகளுக்கு ஒப்ப தேர்தல் முடிவினை அறிவிக்க வேண்டும்.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் என்பவர், மாநிலங்களவையில் ஓர் இடத்தை நிரப்ப ஒவ்வொரு தேர்தலுக்கும்,, ஒவ்வொரு தொகுதிக்கும், மற்ரும் மாநிலத்தின் சட்ட மேலவையில் ஓர் இடம் அல்லது இடங்களை நிரப்ப சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம், மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து, அரசின் ஊழியராக அல்லது உள்ளார்சி அமைப்பின் ஊழியராக உள்ளவரை தேர்தல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்ய வேண்டும். அதே போல, தேர்தல் பொறுப்பு அலுவலருக்கு உதவியாக, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர்களை உதவித் தேர்தல் பொறுப்பு அலுவலராக நியமிக்கலாம். ஆனால், அந்த ஒவ்வொரு நபரும் அரசு அலுவலராக, அல்லது உள்ளாட்சி அமைப்பின் அதிகாரியாக இருத்தல் வேண்டும்.தேர்தல் பொறுப்பு அலுவலர் எனும் பதத்தின் கீழ் அவரின் கடமைகளை நிறைவேற்றக் கடமைப்பட்ட உதவி தேர்தல் பொறுப்பு அலுவலர்களும் உள்ளடங்குவார்கள்.மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியுடன், தமது ஆள்வரையில் உள்ள தொகுதிக்கு போதிய எண்ணிக்கையில் வாக்குச் சாவடிகள் அமைக்க வகை செய்தல் வேண்டும். அப்படி அமைக்கப்படும் வாக்குச் சாவடிகள் தேர்தல் ஆணையம் நெறிப்படுத்திய வகையில் அமைந்திருக்க வேண்டும். அத்தோடும் வாக்காளர், தொகுதிகள் பற்றிய பட்டியல் ஒன்றினை வெளியிட வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலரானவர், ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலைமை அலுவலர் ஒருவரையும் மற்றும் அவசியம் எனில் வேறு அலுவலர்களையும் நியமனம் செய்தல் வேண்டும். ஆனால், தேர்தலில் வேட்பாளரால் வேலையமர்த்தப்பட்ட எந்த ஒரு நபரையும் அத்தகைய பணியில் நியமனம் செய்தல் கூடாது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 28A சொல்வதென்னவென்றால், எந்த ஒரு தேர்தலையும் நடத்துவதற்கு அப்போதைக்கு நடைமுறையில் உள்ள விதிகளீன் படி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர், தேர்தல் பதிவு அலுவலர், தேர்தல் பொறுப்பு அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர் மற்றும் பிற அலுவலர்கள் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நால் தொடங்கி அப்பணி முடியும் நாள் வரை, மற்ரும் அத்தேர்தலுக்கான அறிவிக்கை வரும் நாள் தொடர்ங்கி அத்தேர்தல் முடிவு பெறும் நாள் வரையுள்ள கால அளவில், தேர்தல் ஆணையத்தின் வேற்றுப் பணியில் உள்ளவராகக் கருதப்படுவர். முக்கியமாக அக்கால அளவில் அந்த அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுபாடு, கண்காணிப்பு மற்ரும் ஒழுங்குமுறைக்குட்பட்டவராக இருப்பர்.மாநிலங்களவையில் ஓர் இடத்தை நிரப்புவதற்கான தேர்தலில், அல்லது சட்டமன்ற மேலவையில் ஓர் இடத்தை நிரப்புவதற்கான தேர்தலில், தேர்தல் பொறுப்பு அலுவலர், தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியுடன், அத்தகைய தேர்தலை நடத்த சரியான இடத்தை நிர்ணயம் செய்தல் வேண்டும் மற்றும் அப்படி தேர்வு செய்யப்பட்ட இடம், தேர்தல் ஆணையம் நெறியுறுத்திய படியே அமைந்திருக்க வேண்டும். அதை ஆணையம் நெறிப்ப்டுத்திய வகையில் அறிவிக்கை செய்தல் வேண்டும்.இதுவரை தேர்தலை நடத்துவதற்கான நிர்வாக இயந்திரம் பற்றியும் அது செயல்படும் முறை பற்றியும் சிறிது அறிந்தோம். இனி வரும் கட்டுரைகளில், தேர்தல் ஆணையம் அமைப்பது குறித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொன்னவை குறித்தும். ஆணையம் அமைக்கப்படும் விதம் பற்றியும், சில வழக்குகளோடு பார்க்கலாம்.………………………………(இணைந்தே பயணிப்போம்)……………………………….. - ஹன்ஸா, வழக்கறிஞர், legally.hansa68@gmail.comவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X