சென்னையில் ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சார்பில் 'பெற்ற தாய்க்கு மரியாதை செலுத்தும் விழா'கடந்த 19ந்தேதி நடைபெற்றது.
அரங்கத்தில் நடிகர்கள் இயக்குனர்கள் இசைக்கலைஞர்கள் என பல்துறை வித்தகர்கள் பலரும் தத்தம் அன்னையருடன் மேடையை நிரப்பியிருந்தனர்.ஒரே ஒரு பெண் மட்டும் மேடைக்கு சக்கர நாற்காலியில் வந்தார் கூடவே அவரது தாயார்
பெண்ணின் பெயர் மாதவி லதா தாயாரின் பெயர் வரலட்சுமி தேவி.
எல்லோரும் பேசி முடித்து கடைசியில் மாதவி பேசினார்...
நான் மாதவி லதா இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தேன்,ஏழு மாதமான போது போலியோ நோயால் எனது கால்கள் இரண்டும் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் போனது.
எனக்கு என்ன நடந்தது என்பது கூட தெரியாது இன்னும் கொஞ்ச நாளானால் நடப்பேன் என்றுதான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன் காரணம் எனது இயலாமை எனது வேதனை எதுவுமே தெரியாமல் என் தாய் என்னை பார்த்துக்கொண்டார்.
விவரம் தெரிந்து பள்ளிக்கூடம் போகும் போதுதான் தெரிந்தது என்னால் நடக்கமுடியாது என்பது,ஆனால் அந்த கவலை தெரியாமல் என்னை தோளிலும் நெஞ்சிலும் போட்டு உற்சாகம் கொடுத்து வளர்த்தனர் என் குடும்பத்தார்.
வீட்டிற்கு விசாரிக்கவரும் உறவுகள் அனைவரும் சொல்லிவைத்தது போல 'பொம்பிளை பிள்ளை, காலும் வரலை என்ன செய்யப்போறே' என்று ஆறுதலுக்கு பதிலாக கவலையை விதைத்து சென்றனர், ஆனால் அதற்காக கொஞ்சம் கூட கலங்காமல் என்னை ஒரு இளவரசி போல வளர்தவர் என் தாய்.
எங்கள் கிராமத்திற்கு சக்கர நாற்காலி எல்லாம் வராத காலம் என்னை தோளில் துாக்கிக்கொண்டுதான் பள்ளிக்கு கொண்டுபோய் விடுவார்கள்,காத்திருந்து கூட்டி வருவார்கள் இப்படி பல ஆண்டுகள் நடந்தது.
நான் முடங்கிப்போவேன் என்ற எதிர்பார்த்தவர்கள் வாயை அடைக்க என் ஆற்றலை படிப்பில் காட்டினேன்.பள்ளி இறுதித்தேர்வு வரை நான்தான் வகுப்பில் முதல் மாணவி.எளிதாக கல்லுாரியில் இடம் கிடைத்தது ஆனால் கிராமத்தில் இருந்து நகர்பகுதியில் உள்ள கல்லுாரியின் மாடிக்கு போய் படிக்கமுடியாத சூழ்நிலையில் பிரைவேட்டாக படித்தேன்.
ஐதராபாத்தில் உள்ள தேசிய பாங்க் வேலைக்கு தேர்வானேன் ஆனால் உடல் ஊனம் காரணமாக தேர்வு செய்ய தயங்கியபோது, திறமையை சோதியுங்கள் ஆற்றலை பாருங்கள் என எனக்காக வாதாடி போராடி பாங்க் வேலை கிடைக்க காரணமாக இருந்தவர் என் தாய்.
பதினைந்து வருட பாங்க் வேலைக்கு பிறகு C.D.C.S. (Certified Documentary Credit Specialist) from IFS, UK என்ற தேர்வு எழுதி பாஸ் செய்ததும் ஸ்கோப் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் உயர்பதவி தேடிவர சென்னைக்கு மாற்றலாகிவந்தேன்.
2007-ல் ஒரு பெரும் சோதனை,என்னால் உட்காரவே முடியாத அளவிற்கு முதுகில் வலி மருத்துவரிடம் சென்றேன் அவர் சோதித்து பார்த்துவிட்டு உடனே ஆபரேஷன் செய்யவேண்டும் என்றார் கூடவே ஆபரேஷன் செய்தாலும் உறுதி சொல்லமுடியாது ஆனால் ஆபரேஷன் செய்யாமல் இருந்தால் ஒரு வருடம்தான் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்லிவிட்டார்.
எதற்கும் ஒரு பிசியோதெரபிஸ்ட்டை பார்க்கலாமே என சம்பந்தபட்ட டாக்டரை பார்த்தபோது இதற்கு ஹைட்ரோதெரபி பலன்தரும் முயற்சி செய்துபாருங்கள் என்றார் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் நீச்சல்பயிற்சி எடுக்கச்சொன்னார்.
அதுவரை நீச்சல்குளத்தையே பார்த்திராத நான் எப்படியும் ஒரு வருடம்தான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டார்கள் குளத்தில் இறங்கித்தான் பார்ப்போமே என நீச்சல் பயிற்சி பெற்றேன் என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வலி காணமால் போய்விட்டது முன்பைவிட சுறுசுறுப்பானேன்.
இனி நீச்சல் பயிற்சி போதும் என்று சொன்னபோது எனக்கு நீச்சல் மிகவும் பிடித்துப்போயிருந்தது, மருத்தவத்திற்காக இல்லாமல் மனதிற்காக நிறைய நீந்தினேன் எனது நீச்சலைபார்த்விட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவைத்தனர்.கலந்து கொண்டு பதக்கமும் பெற்றேன் அதில் படிப்படியாக முன்னேறி சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று எனக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை தேடித்தந்தேன் ,இதுவரை நீச்சல் போட்டியில் மட்டும் 22 தங்கம் 3 வெள்ளி 5 வெங்கல பதக்கங்கள் பெற்றுள்ளேன்.
இப்படி எனக்கான வாழ்க்கைக்காக போராடி ஒரு இடத்தை தக்கவைத்த போதுதான் ஒரு சிந்தனை ஏற்பட்டது.என்னைப் போல துாக்கிவிட ஆள் இல்லாமல் துடிக்கும் எத்தனையோ மாற்றுத்திறனாளிக்காக வாழ்வது என முடிவு எடுத்தேன்.
http://yeswetoocan.blogspot.com என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து அவர்களை அவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்திவருகிறேன்.
நான் கலந்து கொண்ட போது மூன்று பேர்தான் தமிழகத்தில் இருந்து சென்றோம் ஆனால் இப்போது 300 பேரை கலந்துகொள்ள வைத்துள்ளோம் என்றால் எந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
நான் தற்போது சக்கர நாற்காலியில் கூடைப்பந்தாடுபவர்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறேன்.
விளையாட்டு என்பது மாற்றுத்திறனானிகளின் வாழ்க்கையை நிச்சயம் புரட்டிப்போடும், வேலை வாய்ப்பும் உண்டு அதிலும் நீச்சல் என்பது மாற்றுத்திறனாளிகளின் மனதிற்கும் உடலுக்கும் மிகவும் ஏற்றது.
ஒரு பேச்சாளராக பல இடங்களில் கலந்து கொண்டு இதை வலியுறுத்துகிறேன், என்னுடைய காரை நானேதான் ஒட்டிச்செல்கிறேன் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு உயரத்திற்கு போகமுடியும் என்பற்கு நானே ஒரு மாடலாக இருக்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை ஆறுதலோ பச்சதாபமோ அல்ல அவர்கள் மீதான உண்மையான அன்பும் அக்கறையும் வழிகாட்டுதலும்தான் அதைதான் இப்போது செய்கிறேன் இனி எப்போதும் செய்வேன்.இதற்கெல்லாம் காரணம் என் தாய்தான் அவரை இந்த தருணத்தில் வணங்குகிறேன் என்று சொல்லி தாய்க்கு மாலை அணிவித்து பாதங்களில் மலர்துாவி பூஜை செய்தபோது இருவர் கண்களிலும் தாரை தாரையாக ஆனந்த கண்ணீர்.
உங்களுக்கு தெரிய எத்தனையோ மாதவி லதாக்கள் நம்முன் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றனர்,அவர்களுக்கு உதவ நினைத்தால் மாதவி லதாவுடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவிடுங்கள், மாதவி லதாவினை தொடர்பு கொள்ள id: madavi.prathi@gmail.com,Ph No. 9841609601.மாதவி லதாவின் ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது ஆகவே மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் அவசியமானால் மட்டும் போனில் தொடர்புகொள்ளுங்கள்.நன்றி.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in