அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம்: சிதம்பரம் வக்காலத்து| Dinamalar

அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம்: சிதம்பரம் வக்காலத்து

Added : பிப் 25, 2016 | கருத்துகள் (215)
அப்சல் குருவுக்கு தண்டனை அளிக்கப்பட்டது தவறாம்: சிதம்பரம் வக்காலத்து

புதுடில்லி : பார்லி., கட்டிட தாக்குதலில் ஈடுபட்டதாக அப்சல் குருவுக்கு தவறாக தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இது தனிமனிதனான என்னுடைய கருத்து. இது தேசவிரோதம் ஆகாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக சிதம்பரம் பேசி உள்ள இந்த கருத்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.முந்தைய காங்., ஆட்சியின் போது 2008 ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், பின்னர் நிதியமைச்சராகவும் இருந்தவர் ப.சிதம்பரம். முந்தைய காங். ஆட்சியின் போது பார்லி., தாக்குதுல் குற்றவாளி என பயங்கரவாதி அப்சல் குரு கைது செய்யப்பட்டான். அவருக்கு 2013ம் ஆண்டு, சுஷில்குமார் ஷிண்டே உள்துறை அமைச்சராக இருந்த போது தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சிதம்பரம் தற்போது அளித்துள்ள பேட்டியில் 2001ம் ஆண்டு நடந்த பார்லி., கட்டிட தாக்குதல் வழக்கு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிதம்பரம், அப்சல் குரு மீதான குற்றச்சாட்டுகளில் இருந்த சாத்தியக்கூறுகள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது .அப்சல் குருவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறாக இருக்கலாம். பார்லி., கட்டிட தாக்குதலில் அப்சல் குருவுக்கு தொடர்பு உள்ளதா என்பதே சந்தேகத்திற்குரியதாக உள்ளது. அரசு தரப்பில் என்ன தான் கூறினாலும், கோர்ட் தவறான முடிவு எடுக்கும் போது என்ன செய்ய முடியும். ஏனெனில் அப்சல் குரு அரசால் குற்றம்சாட்டப்பட்டவர்.ஆனால் ஒரு தனி மனிதனாக, இந்த வழக்கு சரியாக கையாளப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அவர் பார்லி., கட்டிட தாக்குதலில் ஈடுபடவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை அவர் ஈடுபட்டிருந்தால், அவருக்கு பரோல் ஏதும் அளிக்க முடியாமல் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்திருக்கலாம் என்றார்.


தேச விரோத கோஷம் தவறில்லையாம்:

டில்லி ஜவஹர்லால் நேரு மாணவர் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், ஒருவர் சுதந்திரமாக பேசுவது தேசவிரோதம் ஆகாது. உங்களது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில், விஷதன்மை கொண்டதாக இருந்தால் மட்டுமே அது தேசவிரோத பேச்சாகும். மாணவர்கள் அப்படி முழக்கமிட்டார்கள் என்றால் அது அவர்களின் வயது. அந்த வயதில் தவறு, சரி தெரியாது. ஒரு பல்கலை.,யில் அடிபணிவதை நீங்கள் எப்போதும் எதிர்பார்க்க முடியாது. அது பொருத்தமற்றதாக தான் இருக்கும்.அப்சல் குருவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது எங்கள் அரசு தான் நடந்தது. ஆனால் அப்போது நான் உள்துறை அமைச்சராக இல்லை. அதனால் என்ன செய்ய வேண்டும் என என்னால் கூற முடியாது. நீங்கள் அந்த பதவியில் இருந்தால் மட்டுமே அது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X