அறிவியல் சிந்தனை பெருகவே! பிப்.28 - தேசிய அறிவியல் தினம்| Dinamalar

அறிவியல் சிந்தனை பெருகவே! பிப்.28 - தேசிய அறிவியல் தினம்

Added : பிப் 25, 2016 | கருத்துகள் (1)
 அறிவியல் சிந்தனை பெருகவே! பிப்.28 - தேசிய அறிவியல் தினம்


மிழ்நாட்டைச் சேர்ந்தவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பான ஒளிச்சிதறல் குறித்த 'ராமன் விளைவை' (Raman Effect) பிப்ரவரி 28ம் தேதி உலகத்திற்கு அறிவித்தார். அந்த நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும், இந்திய அரசு இந்த தினத்தைத் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறது.
அறிவியலை தகுந்த முறையில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதும், இதன் மூலம் புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்பதுமே, அறிவியல் அறிஞர்களுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வது இந்த தினத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான குறிக்கோள் 'அறிவியல் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி புதிய பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்போம்' (Make in India: S&T driven innovations) என்பதாகும்.
தேவை அறிவியல் சிந்தனை மேல் நாடுகளில் புதிய கண்டுபிடிப்புகள் வேகமாக சாத்தியப்படுகின்றன. இந்தியாவில் அது குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இதற்குக் காரணம் இருக்கிறது. நாம் காலையில் குளிக்கப் பயன்
படுத்தும் சோப்பு நுரையில் தொடங்கி, இரவில் துாங்க போகும்போது அணைக்கப்படும் மின்பல்பு வரை எல்லாவற்றிலும் அறிவியல் உள்ளது. ஆனால் வாழ்க்கையோடு இணைந்துள்ள இந்த அறிவியலை, மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் கல்விமுறையில் தான் கோளாறு உள்ளது.
அதிக மதிப்பெண்கள் பெற்றால் போதும்; நல்ல உயர்கல்விக்குச் சென்று விடலாம் என்று மதிப்பெண்களை
மட்டுமே குறிவைத்து மாணவர்கள்
கற்பிக்கப்படுகிறார்கள்; அறிவியலைப் புரிந்து படிப்பதற்கு இங்கு இரண்டாம் இடம்தான் தரப்படுகிறது; இதற்கான கல்வித்திட்டமும் தேர்வுத்திட்டமும் நம்மிடம் குறைவு.
உதாரணமாக, மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் புராஜெக்ட்டுகள் கொடுப்பதுண்டு.இவற்றை மேற்கொள்ளும்போது பெற்றோர், குழந்தைகளின் அறிவாற்றலைத் துாண்டுவதற்குத் தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, நாளிதழில் வெளிவரும் அறிவியல் செய்திகளைப் படிக்கச்செய்வது (உதாரணத்துக்கு தினமலர் நாளிதழில் வெளிவரும் அறிவியல் மலர்) புதிதாக கற்கும் ஒவ்வொரு கருத்துக்கும் ஏன், எதற்கு, எப்படி எனும் கேள்விகளை எழுப்பி, அறிவார்த்தமாகப் புரிந்துகொள்ளும் சிந்தனையைத் துாண்டுவது போன்ற ஆக்கபூர்வமான வழிகளில் உதவ வேண்டும். மாறாக பெற்றோர்களே அந்த புராஜெக்ட்டுகளைச் செய்து கொடுத்துவிடக்கூடாது.
பொறியியல் கல்லுாரிகளில்... பொறியியல் கல்லுாரிகளில் புராஜெக்ட்டுக்கு என்றே ஒரு செமஸ்டர் இருக்கிறது. இந்த புராஜெக்ட்களை கடைப்பொருளாக வாங்கிக் கொடுத்து
விடுகிறார்கள் அல்லது விரிவுரையாளர்களே தேவைக்கு ஏற்ப தயாரித்து மாணவர்களுக்கு விற்றுவிடுகிறார்கள். வளர்ந்துவிட்ட மேல்நாடுகளில் இந்த அவலம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சுய சிந்தனை, சுய முயற்சி, சுய தயாரிப்புக்குத்தான் அங்கு மதிப்பும் மரியாதையும். இதன் பலனாக அவர்களின் அறிவியல், அறிவாற்றல், அரிய பல கண்டுபிடிப்புகளுக்கு ராஜபாட்டை போடுகிறது.
அறிவியல் ஆர்வத்தைப் புகுத்த மாணவப் பருவம்தான் சரியான தருணம். அறிவியல் புலமையைப் புகுத்த வேண்டிய விதத்தில் புகுத்தினால், இன்னும் பல சர்.சி.வி. ராமன்கள், தமிழகத்தில் உருவாக முடியும். ஆசிரியர்கள்தான் இதற்கு மனது வைக்க வேண்டும்.
அறிவியல் வகுப்புகளில் எளிய, இனிய, புதிய, நடைமுறை சார்ந்த உதாரணங்களைச் சொல்லி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைக் கூட்டலாம். இதன் மூலம் புதிய அறிவியல் சிந்தனைகளைத் துாண்டலாம்.
்கலாமின் பள்ளி ஆசிரியர், அவரை கடற்கரைக்கு அழைத்துச் சென்று, பறவை எப்படி பறக்கிறது என்று கற்று தந்தது தான் அவரது அறிவியல் ஆர்வத்தை துாண்டியது. இதனை கலாம் பலமுறை, மாணவர்களிடம் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.
மேக் இன் இந்தியா கோஷம் கடந்த ஓராண்டாக இந்த கோஷம் இந்தியாவில் பலம் பெற்றுவருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்துக்குச் சரியான உதாரணமாக, சமீபத்தில் ஐதராபாத்தில் இயங்கி வரும் 'பாரத் பயோடெக் இன்டெர்னேஷனல் லிமிடெட்' எனும் இந்திய மருந்து
நிறுவனம், ஜிகா வைரசுக்கு எதிராக தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதைக் குறிப்பிடலாம். இந்த மருந்தை விரைவிலேயே இந்தியாவில் விநியோகிக்க, மேல் நாடுகளில் உள்ளதைப்போல் ஒழுங்குமுறை ஒப்புதல் விவகாரத்தில் விதிமுறைகளைச் சீராக்கி உதவ வேண்டியது மத்திய அரசின் கடமை.
எனக்குத் தெரிந்த இன்னொரு உதாரணம் இது.சென்னையின் பிரபல இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் செரியன், இதய வால்வுக் கோளாறுகளை சரி செய்யும் செயற்கை வால்வுகளை மிகவும் குறைந்த விலையில் இந்தியாவிலேயே தயாரிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதற்கு அரசிடமிருந்து இன்னமும் ஒப்பதல் கிடைக்காமல் தாமதம் ஆகிறது. இதுபோன்ற தடைகளால் அறிவியல் கண்டுபிடிப்புகளில், ஆர்வமுள்ள பலருக்கும் மனம் தளர்ச்சி அடையும்; புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிற
ஆர்வத்தைக் குறைக்கும். இந்த நிலைமை மாற வேண்டும்.
எனவே 'மேக் இன் இந்தியா' திட்டம் பேச்சளவில் இல்லாமல், செயலுக்கும் கொண்டுவரப்பட்டால், இந்தியா இன்னும் வளமுள்ள நாடாக வளரும் என்பது திண்ணம். குறிப்பாக, புதிய ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அதிக நிதியை ஒதுக்குவது, இந்திய தயாரிப்புகளுக்கு முதலிடம் தருவது, வெளிநாட்டு இறக்குமதிகளைக் குறைப்பது, இந்திய விஞ்ஞானிகளுக்கு மேல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையான ஊதியம் கொடுப்பது, ஆராய்ச்சிகளுக்கான மானியங்களைப் பெறுவதில் விதிமுறைகளை எளிதாக்குவது, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை இந்தியாவில் பயன்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் தொழில்புரட்சியே உண்டாகும். அப்போது இந்தியா எல்லா துறைகளிலும் தன்னாற்றல் நிரம்பிய வல்லரசு நாடாக மாறும்.-டாக்டர் கு.கணேசன்(2015க்கான தேசிய அறிவியல் விருதைப் பெறுபவர்)ராஜபாளையம்.gganesan95@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X